சென்னை:தமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின், 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கம் 'தமிழறிஞர், மகா வித்வான்' என, அழைக்கப்படும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின், 201வது பிறந்த ஆண்டு விழா கருத்தரங்கம், சென்னை, பெசன்ட் நகரில் உள்ள, உ.வே.சாமிநாதையர் நுால் நிலையத்தில், நேற்று நடந்தது.
இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும், உ.வே.சாமிநாதையர் நுாலக செயலருமான சத்தியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். 'தினமலர்' நாளிதழ் ஆசிரியரும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நுால் நிலைய ஆட்சிக்குழு உறுப்பினருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்றார். 'திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ்' என்ற நுாலை, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட, தஞ்சை தமிழ் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:தமிழ் வளர்ச்சிகடந்த, 19ம் நுாற்றாண்டில் வாழ்ந்த முக்கியமான தமிழ் புலவர்களில், மீனாட்சி சுந்தரம் பிள்ளையை மறக்க முடியாது. அவர், தமிழ் வளர்ச்சி பணிகள் மற்றும், தமிழ் நுால்களை திரட்டுவதில் கடினமாக உழைத்து, தமிழ் வளர்ச்சிக்கு உந்துதலாக இருந்தார். தமிழ் மன்னர்கள் சிறிய பொருளாதாரம் கொண்டவர்கள், அவர்கள் எந்தவித நாணயங்களையும் வெளியிடவில்லை
என்பது போன்ற கூற்று இருந்தது.
முற்றுப்புள்ளி :கடந்த, 1985ல், நான் கண்டுபிடித்த சங்ககால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம், இந்தக் கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை மற்றும் உ.வே.சா., நுால்களை ஆய்வு செய்ததில், பண்டைய தமிழர் கலாசாரத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.
அதிக பதிப்புகள் :தமிழ் தாத்தா உ.வே.சா., ஏராளமான நுால்கள் எழுதியுள்ளார். அவர் எழுதி வெளிவராத நுால்களை வெளியிடவும், அதிக பதிப்புகள் அச்சிடவும் முன்வர வேண்டும். இதற்கு பல செல்வந்தர்கள் உதவத் தயாராக இருக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்க பொருள் குறித்து, தமிழ் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி பேசியதாவது:தமிழ் நுால் தேடுதல் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர், உ.வே.சாமிநாதையர். தன் ஆசிரியரை பற்றி, இரண்டு பாகங்களில், 724 பக்கங்களுக்கு நுால்கள் எழுதியுள்ளார். அதில், ஆசிரியரின் தமிழ் நுால் தேடுதல் குறித்தும், அவரது நுால்களை தேடும் முயற்சிகள் குறித்தும், சாமிநாதையர் விரிவாக விளக்குகிறார்.
கிடைப்பது அரிது :இப்படி ஓர் தமிழறிஞர் ஆசிரியராகவும், மாணவராகவும் இனி வரும் காலங்களில் கிடைப்பது அரிது. நல்ல ஆசிரியர், நல்ல பண்பாளர், நல்ல சான்றோர் என அனைத்துக்கும் சொந்தக்காரர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை.இவ்வாறு அவர் பேசினார்.புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நுாலகத்தைச் சேர்ந்த பா.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். சாமிநாதையர் நுால் நிலைய காப்பாட்சியர் கோ.உத்திராடம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழ் நூல்கள் அச்சிடப்பட்ட காலந்தொட்டு முதல்பதிப்பு நூல்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொன்னால் மட்டுமே புரியும்.. ஏன் முதல்பதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.? எளிதில் புரியும் வண்ணம் ஞானாலயா நூலகம் பற்றிய சிறப்புக்கட்டுரை உங்களுக்காக
தமிழ் இந்து சித்திரை மலர் 2015 புத்தகத்தில்
அய்யாவுடன் தொடர்பு கொள்ள.. ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம், 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு. தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140
நூல் வாசிப்பில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் ஞானாலயாவைப்பற்றிய விபரங்களை ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள். ..தமிழில் கடந்த நூறாண்டுகளுக்குள் வெளியான நூல்களின் முதற்பதிப்பு நூல்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு உள்ளன.
பதிப்புகள் பல காணும் நூல்கள், பெரும்பாலும் மூலவடிவில் இருப்பதில்லை என்பதை ஞானாலாயா நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் சொல்லும்போது , இந்நூல்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் நமக்கு விளங்கும்..
இந்த நூலகத்திற்கென தனது சொந்த செலவில் கட்டிடம் கட்டியதோடு மட்டுமல்லாமல் அதை பாதுகாத்தும் அங்கே நேரில் வருபவர்கள் விரும்பும் புத்தகத்தில் பகுதிகளை நகல் எடுத்தும் தந்தும் இன்றளவும் உற்சாகம் குறையாது இருக்கின்றனர் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்.
இவர்களது முயற்சிக்கு உறுதுணையாய், நூலகத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இந்நூலகத்தின் அரிய நூல்களை மின்நூல்கள் ஆக்கி பாதுகாக்கவும் நன்கொடைகளை அளிக்க உதவும் நல் உள்ளங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நன்கொடைகளுக்கான வரிவிலக்கு 80G அனுமதி பெறப்பட்டிருக்கிறது.
அதன் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன...ஐயா வேண்டுகோளும் இணைக்கப்பட்டுள்ளது....நண்பர்களிடம் கொண்டுசேர்ப்போம்...நூலகத்தில் வளர்ச்சியில், பாதுகாப்பதில் நமது பங்கினை உறுதி செய்வோம்.. அய்யாவுடன் தொடர்பு கொள்ள..
தற்போதைய அரசியல் நிலவரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகள் என்பது வெறுமனே அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் போதும், நாங்கள் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற அறைகூவல் வழியாகவும் மட்டுமே நம்மால் காமராஜர் என்ற பெயரை நினைவில் கொண்டு வர முடிகின்றது.
திரு. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு காமராஜர் நூற்றாண்டு விழாவில் புதுக்கோட்டையில் உரையாற்றிய இந்த ஒலித் தொகுப்பை நீங்கள் முழுமையாக கேட்டு முடியும் போது ஏறக்குறைய சுதந்திரத்திற்கு பின்னால் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் நிலவரங்களை நம்மால் முழுமையாக உணர முடியும்.
கர்மவீரர் காமராஜர் குறித்து நூறு புத்தகங்கள் படித்த திருப்தி நிச்சயம் முழுமையாக கிடைக்கும். அந்த அளவிற்கு மிகத் தெளிவாக அழகாக திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரையாற்றியுள்ளார்.
பட்டங்களை விரும்பாத காமராஜர் அவர்களுக்கு பெருந்தலைவர் பட்டம் எப்படி வந்தது? யார் முதலில் அவ்வாறு அழைத்தவர்? இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. எப்படி மீண்டும் சேர்ந்தது? என்ன காரணம்?
செய் என்பதுதான் காமராசரின் தாரக மந்திரம். செய்ததை சொல்லிக்கொண்டிருப்பதை விட விசயத்துக்கு நேரடியாக வர சொல்லித்தான் எதிரே இருப்பவரிடம் சொல்வார். காமராசர் எப்படி என்னை ஈர்த்தார் என்று ஜெயகாந்தன் சொன்னது என்ன?
இந்திரா காந்தி அம்மையாரை காமராஜர் எப்போதும் அந்த பொம்பள என்று தான் அழைப்பார்.அதே இந்திரா காந்தி தமிழ்நாட்டில் இவர் இல்லாவிட்டால் நிச்சயம் நாம் இல்லை என்கிற அளவுக்கு காமராஜர் எப்படி கிங் மேக்கராக இருந்தார்.
திராவிட கட்சிகள் காமராஜர் மேல் வலிய திணித்த ஊழல் புகார்கள் குறித்து காமராஜரிடம் கேட்ட போது அவர் மிக எளிமையாக யானைக்கால் நோய்க்காரன் எல்லோரிடமும் கொண்டு போய் காட்டிக் கொண்டு இருப்பானா? என்கிற துணிச்சல் நிறைந்த பதில் போன்றவற்றை நீங்கள் அவசியம் கேட்டு உணர இந்த ஒலித் தொகுப்பை முழுமையாக கேட்க வேண்டும் என்று விரும்புகின்றோம். தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள குமரி அனந்தன் முதல் பல தலைவர்களும் நாங்கள் கூட இந்த அளவுக்கு காமராஜர் குறித்து பேச முடிந்ததில்லை. அந்த அளவுக்கு பல தகவல்களை மிக சிறப்பாக பேசியுள்ளீர்கள் என்று பாராட்டிய இந்த உரையை கேட்டு மகிழ அழைக்கின்றோம்.
ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற எண்ணத்தில்.. நிகழ்காலத்தில் சிவா
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்திற்கு திடீர் பயணமாக 27.02.2013 அன்று நேரில் சென்றிருந்தேன். இந்த நூலகம் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். பயனாக வேண்டும் என்ற திரு.கிருஷ்ணமூர்த்தி ஞானாலயா அவர்களின் ஆர்வத்தை ஆசையை நோக்கத்தை பலமுறை கேட்டு இருக்கிறேன்.
நூலகத்தில் சுமார் 80 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு புத்தகத்தின் பின்னாலும் ஒரு எழுதப்படாத சரித்திரம் இருக்கிறது. அந்த புத்தகம் எந்த சூழலில் எழுதப்பட்டது. எந்த சூழலில் பதிப்பிக்கப்பட்டது. அந்த ஆசிரியர், பதிப்பகத்தார் குறித்த எங்குமே கிடைக்காத பல அரிய செய்திகள் திரு.ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு ஆவணம். அவற்றை சேமிக்க வேண்டியதன் அவசியம் அந்த உரைகளைக் கேட்டால் விளங்கும். வீடியோ உரைகளாக சேமிக்க திட்டமிட்டாலும் அதற்கான செலவுகள், மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், தேவைப்படும் தன்னார்வத் தொண்டர்கள் இவற்றை எல்லாம் மனதில் கொண்டு ஆடியோ வடிவிலான உரைகளை சேமிக்க எண்ணம் கொண்டேன்.
அதற்கான சில உபகரணங்களை வாங்கிக்கொண்டு நேரில் சென்று மாதிரி ஒலிப்பதிவு ஒன்றை முயற்சித்துப் பார்த்தேன். நான் நினைத்தை விட ஒலி துல்லியம் கிடைத்தது. அதை அனைவருக்கும் சென்று சேர்க்க எண்ணி இங்கு பதிவிட்டு இருக்கிறேன், இதில் விவேகாநந்தர், மேக்ஸ்முல்லர் பற்றி கொஞ்சமாக பேசி இருக்கிறார்.
இந்த முயற்சி தொடரும்.,, இதற்கான நண்பர்கள் குழு சேர்க்கவும் எண்ணமிட்டு இருக்கிறேன். வரும்காலத்தில் ஞானாலயாவிற்கு எந்தவிதத்தில் முடியுமோ அவ்விதமாக..உதவும் வகையில் ஒத்த எண்ணமுடையோர்களை இணைத்து குழுவாக்க ஆசைப்படுகிறேன்.
உரையை கேட்டீர்களா.. இனி இது போன்ற உரைகள், புதிய இடுகைகள் இந்த வலைதளத்தில் வலையேற்றம் செய்யும்போது உங்களுக்கு உடனடியாக செய்தி தர உங்கள் மெயில்முகவரியை என் arivhedeivam@gmail.com க்கு அனுப்புங்கள்.
கோவையில் கடந்த 10ம் தேதி நடந்த நிகழ்வில் திரு. கிருஷ்ணமூர்த்தி அய்யா பேசிய உரை ஏற்கனவே முந்தய இடுகைகளில் பகிர்ந்திருக்கிறோம். அந்த நிகழ்வைப் பற்றி தி ஹிந்து நாளிதழில் வெளியான செய்தி இதோ....
B. Krishnamurthy has set up one of the country’s largest private libraries housing rare first editions of Tamil books.
Arignar Anna had a knack for narrating a story. He would take his listeners to far off places before leading them to the crux of the matter. “He would give them extensive background details… and they would wonder where he was headed,” recalls ‘Gnanalaya’ B. Krishnamurthy.
Krishnamurthy owns the precious first edition of Anna’s book Makkal Karamum Mannin Siramum . It is among the 85,000 titles in his research library ‘Gnanalaya’ in Pudukottai. Krishnamurthy was in the city to participate in a monthly literary meet organised by the District Central Library’s Reader’s Circle and Vijaya Pathipagam.
With over 15,000 titles in English and 70,000 in Tamil, Gnanalaya has a large collection of rare first editions of Tamil books. Krishnamurthy’s quest for books started when he was a teenager. His father once gave him a copy of Thanippadal Thirattu . It was signed by Ku. Alagirisamy, the editor of the magazine Sakthi . Alagirisamy, a man of unshakeable determination, had mentioned that the book was extremely rare and that he hadn’t seen it anywhere else. But there it was, in the hands of a teenager in Trichy. Krishnamurthy decided then that he would seek every rare book there was, no matter what.
Today, his research library in Pudukottai is the result of decades of hard work. Krishnamurthy has travelled to every nook and cranny of Tamil Nadu in search of books. Behind every painstakingly collected title is a story.
He once went to a village near Nagercoil looking for a book. He had a long way to go and decided to hire a bicycle. The man who ran the rental didn’t trust him, so Krishnamurthy gave him his expensive watch in return. “I would’ve even given him the shirt off my back if I had to,” he smiles.
Gnanalaya draws visitors from all over the world — there are some that Krishnamurthy will never forget. “I once heard one of them comment, ‘this man must be mad’,” he laughs.
திருப்பூரில் கடந்த 27.1.2013 அன்று நடந்த டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில், புதுக்கோட்டையில் இருந்து செயல்படும் ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ஏறக்குறைய 50 நிமிடங்கள் புத்தகங்கள்,உலகளாவிய நூலகங்கள் குறித்து உரையாற்றிய காணொளியின் முதல் பகுதி இது.
பொதுவாக மேடைப் பேச்சு என்பது தற்காலத்தில் அலங்கார வார்த்தைகளால் கோர்த்து அது கேட்பவருக்கு பொழுது போக்க உதவும் கலையாக உள்ளது. ஆனால் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் காணொளி காட்சிகளை கேட்டுப் பாருங்கள்.
நீங்கள் இது வரையிலும் அறியாத தகவல்களாக , இன்று வரையிலும் புத்தகங்களில் வெளிவராத தகவல்களின் தொகுப்பாக, அறிவுக்களஞ்சியமாக ஒவ்வொரு தலைவர்களைப் பற்றியும், விசயங்களைப் பற்றியும் தனது கம்பீரமான குரலால் எடுத்து வைக்கின்றார்.
இதுவரையிலும் ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உலகம் முழுக்க பல்வேறு அமைப்புகளில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், பல்வேறு இலக்கிய அமைப்ப்புகளின் மூலம் 2000 கூட்டங்களுக்கும் மேல் பங்கெடுத்து தான் கற்ற புத்தக அறிவை மற்றவர்களுக்கு பரப்புவதை ஒரு கடமையாக வைத்துள்ளார்.
தற்போது தான் அதன் காணொளி காட்சிகளை ஆவணப்படுத்துவதில் இந்த வலை தளம் சிறப்பாக செயலில் காட்டிக் கொண்டிருக்கின்றது.
உங்கள் நண்பர்களுக்கும் ஞானாலயா குறித்து தெரிவிக்க இந்த வலைதளத்தை முழுமையாக படித்துப் பாருங்கள். நாம் சமூகத்திற்காக தனியாக சிறப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினாலே இதுவும் ஒருவிதமான சமூக அக்கறை தான்.
பகிர்ந்து கொள்வதில் அறிவு பகிர்தல் தான் தலைமுறைகள் தாண்டியும் நிற்கக்கூடியது.
வருகை புரிந்த உங்களுக்கு ஞானாலயா ஆய்வு நூலகம் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றி. இரண்டாவது தொகுப்பு அடுத்த பதிவில் வெளியிடப்படும்.
சென்ற புதன் கிழமை புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தில்,தஞ்சைக் கல்லூரி ஒன்றில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில்பயிலும் மாணவர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது ப்ராஜெக்ட் கூடன்பெர்க் தளத்தில்கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக, பதிப்புரிமை பிரச்சினை இல்லாமல் பொதுவெளியில் உள்ள சுமார் நாற்பதாயிரம் புத்தகங்கள் எப்படி மின்னாக்கம் செய்யப்பட்டு எல்லோருக்கும் பயன்படுகிற மாதிரி இருக்கிறது என்பதைச் சொன்னபோதுகூடன்பெர்க் என்ற வரலாற்று நாயகரைப்பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்க வேண்டும்!
அந்தக் குறையை நீக்க மாணவன் என்ற வலைத்தளத்தில் நேற்று ஒரு அருமையான விரிவான பதிவைப்பார்த்தத்தில் அவருடைய அனுமதியோடு இங்கே அந்தப்பதிவைப் பகிர்ந்து கொள்கிறோம்.ஞானாலயா வலைத்தளத்தில், ஞானாலயா ஆய்வு நூலகத்தைக் குறித்த செய்திகளை , நூலகங்கள் வாசிப்பு அனுபவங்களைக் குறித்து எழுத ஆர்வமுள்ள நண்பர்களை வரவேற்கிறோம்
தமிழில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெளிவந்த விதத்தை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு பா கிருஷ்ணமூர்த்தி ஐயா சொல்வதை இந்தச் சுட்டியில் கேட்கலாம்! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த ஒலிப்பதிவில் இருக்கின்றன.
புத்தகங்கள் நம் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல்கள் என்றார் ஓர் அறிஞர்.
பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனித குலத்தின் அறிவு வளர்கிறது ஆற்றல் பெருகுகிறது. புத்தகங்கள் இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படி ஒரு காலம் இருந்து வந்தது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தகங்கள் என்பது ஓர் அறிய பொருளாக இருந்தது.
ஒரு புத்தகத்தில் ஒரு பிரதி மட்டும்தான் இருந்தது. அதுவும் கைகளால் எழுதப்பட்டு செல்வந்தர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள கூடியதாக இருந்தது. அதனைப்பார்த்து ஒரு வரலாற்று நாயகர் சிந்திக்கத் தொடங்கினார். செல்வந்தர்கள் மட்டும்தான் புத்தகங்கள் வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு புத்தகத்தை அப்படியே பிரதி எடுத்து பல புத்தகங்களாக உருவாக்கினால் எல்லோராலும் புத்தகங்களை வைத்துக்கொள்ள முடியுமே என்று சிந்தித்தார். சிந்தித்தத்தோடு நின்று விடாமல் செயலிலும் இறங்கினார்.
தனி ஒரு மனிதனின் வேட்கையாலும், உழைப்பாலும், வியர்வையாலும், விடாமுயற்சியாலும் உலகுக்குக் கிடைத்த அருங்கொடைதான் அச்சு இயந்திரம். இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகளில் ஆக பிரசித்தியும், முக்கியத்துவமும் வாய்ந்தது அச்சியந்திரம்தான் என்று பல வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்
அவர்களின் கூற்று உண்மையானதுதான். ஏனெனில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்த பெருமைக்கு சொந்தக்காரரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம். அவர் பெயர் ஜோகேன்ஸ் குட்டன்பெர்க் (Johannes Gutenberg).
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என்பதால் குட்டன்பெர்க்கைப் பற்றிய குறிப்புகள் துல்லியமாக தெரியவில்லை. அநேகமாக அவர் 1398-ஆம் ஆண்டு அல்லது 1399-ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஜெர்மனியின் Mainz என்ற நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் குட்டன்பெர்க். ஆரம்பம் முதலே குட்டன்பெர்க்கிற்கு வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. கைகளால் எழுதப்பட்டவை அவற்றை புத்தகங்கள் என்று சொல்வதை விட Manuscripts அதாவது எழுத்துப்படிவங்கள் என்று சொல்லலாம். அவை கிடைப்பதற்கும் அரிதானவை. அவர் வளர்ந்து வந்த சமயத்தில் புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை அறிமுகமானது அது அச்சுப்பால அச்சுமுறை (Block printing). ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும்.
இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பலகை செய்தாக வேண்டும். அதற்கு அதிக நேரம் பிடிக்கும் அவற்றை வேறு பக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது. எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் அச்சுப்பால அச்சுமுறை வேகமானதுதான். புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில் குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றையும் செல்வந்தர்களால்தான் வைத்துக்கொள்ள முடிந்தது. எல்லோரும் வைத்துக்கொண்டு படிக்கும்படி புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்து விட்டு அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறுபவர் இரவுதான் திரும்புவார்.
குட்டன்பெர்க் எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்பது எவருக்கும் தெரியாது. யார் என்ன சொன்னாலும் நினைத்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். பலமுறை அவர் சோர்ந்தும், ஊக்கமிழந்தும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியையே சந்தித்தார். கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான Johann Fust என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சியந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட Fust குட்டன்பெர்க்கிறகு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க் பல முயற்சிகளுக்குப் பிறகு 'Movable type' எனப்படும் இயங்கக்கூடிய எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால் அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார்.
தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு லத்தீன் மொழியில் பைபிளை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் உருவானது. லத்தீன் மொழியில் இரண்டு தொகுதிகளில் பைபிள் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால் அது 'குட்டன்பெர்க் விவிலியம்' (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த முறையில் 200 பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பைபிள் புத்தகத்தின் ஒரு பக்கம் விற்பனைக்கு வந்தால்கூட அது நூறாயிரம் டாலர் வரை விலை போகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.
1455-ஆம் ஆண்டில் Bamberg புத்தக சந்தையில் தாம் அச்சிட்ட பைபிள் பிரதிகளை 300 florins-க்கு விற்றார் குட்டன்பெர்க். அது அப்போதைய ஒரு குமாஸ்தாவின் மூன்று ஆண்டு சம்பளத்திற்கு சமம். அனால் கையால் எழுதப்பட்ட பைபிளின் விலையை விட அது குறைவுதான். இதில் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் அந்தக்காலகட்டத்தில் ஒரு பைபிளை கையால் எழுதி முடிக்க ஒருவருக்கு 20 ஆண்டுகள் வரை தேவைப்படுமாம். புத்தக சந்தையில் கிடைத்த பணம் பெரிய தொகை இல்லை என்பதால் தான் கடன் வாங்கிய பணத்தை குட்டன்பெர்க்கால் திருப்பித்தர இயலவில்லை. பொறுமையிழந்த Fust குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை அப்படியே அபகரித்துக் கொண்டார்.
உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்தும் அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் ஏழ்மையில் இறந்து போனார் குட்டன்பெர்க் என்பதுதான் வேதனையான உண்மை. 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் இயற்கை எய்திய அவர் ஒரு Franciscan தேவலாயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்த தேவலாயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது இப்போது அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட சரிவரத் தெரியவில்லை. கடந்த 500 ஆண்டுகளில் உலகம் சந்தித்திருக்கும் பல மாற்றங்களுக்கு அடிப்படையான ஒரு கண்டுபிடிப்பு அந்த அச்சு இயந்திரம்தான். புத்தகங்களை விரைவாக பல பிரதிகள் எடுக்க முடியும் என்பதால் உலகம் முழுவதும் புத்தகங்கள் பரவத் தொடங்கின. கிறிஸ்துவ மதத்தில் frattances கிளைகள் உருவானதற்கும் ஒருவகையில் குட்டன்பெர்க்தான் காரணம் என்கின்றனர் வரலாற்று வல்லுனர்கள். ஏனெனில் அதுவரை சமயத்தலைவர்களிடம் மட்டுமே இருந்த பைபிள் சாமானியர்கள் கைகளிலும் தவழத் தொடங்கியது.
சிலர் பைபிளின் கருத்துகளை வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ள முற்பட்ட போது frattances கிளைகள் தோன்றத் தொடங்கின. இதைத்தவிர்த்து இன்னொன்றையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. குட்டன்பெர்க் இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் ஐரோப்பாவும், சீனாவும் தொழில்நுட்பத் துறையில் சரி நிகராகவே முன்னேறியிருந்தன. அச்சியந்திரம் வந்த பிறகு அதனை பரவலாக பயன்படுத்தத் தொடங்கிய ஐரோப்பா எல்லாத் துறைகளிலும் அபரிமித வளர்ச்சிக் காணத் தொடங்கியது. ஆனால் பழைய அச்சுப் பாலமுறையையே தொடர்ந்துப் பின்பற்றிய சீனா பல துறைகளில் பின்தங்கிவிட்டது. இந்த ஒரு சான்றே போதும் உலக வரலாற்றில் குட்டன்பெர்க்கின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்ற .
குட்டன்பெர்க்கின் எளிய வாழ்க்கை நமக்கு கூறும் பாடமும் எளிதானதுதான். அவர் பல தோல்விகளை சந்தித்த பிறகுதான் உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்ய முடிந்தது. இன்று நம் கைகளில் தவழும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் நாம் குட்டன்பெர்க்கிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால் கடந்த ஐந்து நூற்றாண்டின் உலக வரலாறே மாறிப்போயிருக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுபோகாமல் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடருவோருக்குதான் வரலாறும் இடம் தரும் அவர்கள் விரும்பிய வானமும் வசப்படும்.
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
வரலாறு, வரலாற்றுப் பிரக்ஞை, வரலாற்றைப் பேசுதல் என்றாலேயே நம்மில் பலருக்குக் கொஞ்சம் குழப்பம் வந்து விடுகிறது.இன்றைக்கு நாம் கேள்விப் படும்,வாசிக்கும் வரலாறு குறித்த செய்திகள் அந்த லட்சணத்தில் தான் இருக்கின்றன.இதைத்தான் ஞானாலயா பா.கிருஷ்ண மூர்த்தி ஐயா "தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அற்றவர்கள்: அவர்களுக்கு தங்களுடைய பாரம்பரியத்தை , வரலாற்றை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது " என்று சொல்வதாகஇந்தப் பதிவில் நாம் ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்.
என்ன தான் சொன்னாலும், வரலாறு, கடந்த நிகழ்வுகள் என்று சொன்ன உடனேயே குழப்பமும் அலட்சியமும், மறதியும் தான் முன்னே வந்து நிற்கிறது! \
கஞ்சிரா! கர்நாடக இசையில் பயன் படுத்தப்படுகிற ஒரு தாள வாத்தியம்! இது உருவாக்கப்பட்டு சுமார் நூற்றைம்பது ஆண்டுகளே ஆகின்றன. கச்சேரிகளில் பயன்பாட்டுக்கு வந்து ஒரு நூற்று முப்பது வருடங்களுக்குள் தான் இருக்கும்..
கஞ்சிராவைப்பற்றி ஹிந்து நாளிதழில் நான்காண்டுகளுக்கு முன்னால் வந்த ஒரு செய்தி! கஞ்சிராவைப் பற்றிகொஞ்சம் மேலோட்டமாகப் பேசப் பட்டிருக்கிறதே தவிர சரியான தகவல்கள் இல்லை. இந்த செய்தியின் கடைசி வரிகளில் பலாமரத்தில் செய்யப்படுவது, தோல் என்று மொட்டையாக இருக்கிறது. சரி! கட்டற்ற தகவல் களஞ்சியம் என்று சொல்லிக் கொள்கிறார்களே, அந்த விக்கி பக்கங்களில் போய்க் கஞ்சிரா பற்றிய தகவல்களைத் தேடினால்,உடும்புத்தோல் பயன் படுத்தப்படுவது பற்றிய விவரம் கிடைக்கிறது.அதோடு சரி! மேலதிக விவரங்களோ, முழுமையாகவோ இந்தத்தளமும் இல்லை.
தன்னை கஞ்சிரா மாஸ்ட்ரோ என்று அழைத்துக் கொள்கிற ஒரு கலைஞர் இவர்! இவருடைய வலைப்பக்கத்திலாவது கஞ்சிராவைப்பற்றி கொஞ்சம் முழுமையான தகவல் இருக்கிறதா என்று தேடினால் அதிலும் ஏமாற்றமே!
1850 களில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம். மாண் பூண்டியா பிள்ளை என்ற இளைஞர் வேலை எதுவுமில்லாமல் இருந்தார். அரண்மனை வைத்தியராக இருந்த யோகானந்த சுவாமிகள் என்பவர், மாண் பூண்டியா பிள்ளையை மன்னரிடம் அழைத்துச் சென்று ஏதாவது வேலை கொடுக்குமாறு வேண்டினார். இளைஞருக்கு நகரில் லாந்தர் விளக்கேற்றும் வேலை தரப்பட்டது.
கீழ மேல் தென்வடலாக நான்கு அடுக்கு வீதிகள் இருந்த நகரம் புதுக்கோட்டை. ஒரு தெருவுக்கு ஆறு லாந்தர் விளக்குகள், ஆக மொத்தம் 96 விளக்குகள். மாண் பூண்டியா பிள்ளை ஒரு கையில் மண்ணெண்ணெய் டின், இன்னொரு கையில் பெரிய திரி போட்ட தீவட்டித் தடியுடன் தொழில் சார்த்திக் கொண்டு ஒவ்வொரு வீதி விளக்காக ஏற்றிக் கொண்டே செல்வார். அப்படிச் செல்கிற சமயங்களில் தீவட்டித் தடியில் தாளம் போட்டபடியே போவது வழக்கம். இதை யோகானந்த சுவாமிகள் கவனித்திருக்கிறார். அகமுடையார் குலத்தில் பிறந்து, சங்கீதத்தில் இத்தனை ஆர்வமா என்று வியந்து, மாண் பூண்டியா பிள்ளையை, பகலில் சும்மா இருக்கும் நேரத்தில் வித்தை பழகட்டும் என்று அரண்மனை தவில் வித்வான் மாரியப்ப பிள்ளையிடம் சேர்த்து விட்டார்..லாந்தர் ஏற்றும் பணியில் சேர்ந்த தவில் வாசிப்பை முறையாகப் பயின்று, அரண்மனையிலேயே தவில் வித்வானாகவும் ஆகிப் போனார்.
தட்சிணாமூர்த்திப் பிள்ளை என்று ஒரு சமஸ்தானத்துப் பட்டாளத்துக்காரர்! துப்பாக்கிக் கட்டைகளைத் துடைக்கிறேன் பேர்வழி என்று துப்பாக்கிக் கட்டைகளை வைத்துத் தாளம் போட்டே பலதுப்பாக்கிகளை உடைத்தவர். இந்த மாதிரி ஆசாமிக்குப் பட்டாளத்து வேலை ஒத்து வராது என்பதைக் கவனித்த யோகானந்த சுவாமிகள், இவரை மாண் பூண்டியா பிள்ளையிடம் ஒப்படைத்து இசையைக் கற்றுக் கொடு என்று சேர்க்கிறார். மிருதங்க வித்வானாக தட்சிணாமூர்த்திப் பிள்ளை மிளிர வேண்டும் என்று இரவு பகல் சாதகம் செய்து கொண்டிருந்த நேரத்தில் இவர்களோடு பழனி முத்தையா பிள்ளை என்பவரும் சேர்ந்து கொள்கிறார்.
இந்த மூவரும் ஏட்டுக் கல்வி கற்றவர்கள் அல்ல.மிருதங்க வாசிப்பிலேயே அத்தனை தாளக் கட்டுக்களையும் படித்தார்கள். அடப்பன்வயலிலுள்ள மாந்தோப்பில் மூவரும் சேர்ந்து கூழாங்கற்களை வைத்துக் கணக்கிட்டு கோர்வைகள், ஓசைக் குறிப்போடு கூடிய சொற்கட்டுகள், தாள வரிசை வகைப்பாடுகள் என்று அத்தனையையும் பயிற்சி செய்தே கரைத்துக் குடித்தார்கள்.
இப்படி சாதகம் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே மாண் பூண்டியா பிள்ளைக்குப் புதிய வகை தாளக் கருவி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தீவீரமாக இருந்தது.எடுத்துச் செல்ல இலகுவாகவும், இசைக் கச்சேரிகளில் அதற்கு முக்கிய பங்கும் இருக்க வேண்டும் என்று பல்வேறு தாள இசைக் கருவிகளை ஒப்பு நோக்கித் தேட ஆரம்பித்தார்.நாகூர் பக்கிரிமார்கள் பயன்படுத்தி வந்த டேப் அவரை மிகவும் கவர்ந்தது.தவில், கடம், மிருதங்கம் போல இதை இருகரங்களையும் பயன்படுத்தி இசைக்க வேண்டியதில்லை.ஆனால், டேப் வடிவம் பெரியது. வட்டவடிவக் கட்டையில் பதினோரு இடங்களில் துளையிட்டு வட்டவடிவிலான பித்தளை அல்லது இரும்புத்தகடுகளை துவாரமிட்டுப் பொருத்தியிருப்பார்கள்.ஒரு புறத்தில் ஆட்டு சவ்வுத்தோலை இறுக்கி ஒட்டியிருப்பார்கள்.
இவ்வளவு பெரிதாக வேண்டாமே என்று யோசித்து தாழம்புதரில் நல்ல பருமனான கட்டையை வெட்டி ஒரு அடிக்கும் குறைவான வட்ட வடிவத்தில் ஆறுவிரற் கடையளவு தடிமனாகவும் சக்கரவடிவில் ஒழுங்கு படுத்திக் கொண்டு முதலில் மாட்டுத் தோலைப் பயன்படுத்திப் பார்த்தார்கள். ஒலி திருப்தி தரவில்லை. ஆட்டுத்தோலை மாற்றிப் பார்த்தும் பிரயோசனமில்லை. இப்படிப் பரிசோதித்துக் கொண்டு இருந்த தருணத்தில் ஒரு ஆண் உடும்பு தன்ஜோடியுடன் ஓடிய போது புதர், கூழாங்கற்களில் அவை செல்லுமிடத்து ஒருவகையான நாதம் வருவதைக் கண்டார்கள். உடும்பை பிடித்து வைத்து, முதலில் ஆண் உடும்பின் முதுகுத்தோலைப் பாடம் செய்ததில் எழுந்த நாதம் திருப்தியாக இருந்தாலும், முதுகுத்தோல் என்பதால் தடிமனாக இருந்தது. பெண் உடும்பின் வயிற்றுப் பகுதித்தோலைப் பாடம் செய்து பயன்படுத்திப் பார்த்ததில், எழுந்த நாதம் கம்பீரமாக இருந்தது!
தாழங்கட்டைக்குப் பதிலாக பலாக் கட்டையையும், ஆறு இடங்களில் துளையிட்டு காலணாக் காசுகளை ஜால்ராக்களாக வைத்திருந்ததை மாற்றி மூன்றே துளைகள், ஜால்ராக்கள் என வடிவமைத்து உருவானது தான் இப்போது கஞ்சிரா என்றழைக்கப்படும் இசைக்கருவி!
ஞானாலயா பா கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டையின் இசை மரபை அறிமுகம் செய்து வைத்து, யோகானந்த சுவாமிகளின் பேரன் திரு செல்லையா பிள்ளை மற்றும் கஞ்சிரா இசைக் கலைஞர் ராம் இருவரையும் காக்கைச் சிறகினிலே மாத இதழுக்காகக் கொடுத்த ஒரு நேர்காணலின் சுருக்கம் இது! காக்கைச் சிறகினிலே மாத இதழின் டிசம்பர் 2011 இதழில் வெளிவந்த இந்த நேர்காணலை இங்கே முழுமையாகப் படிக்கலாம்!
காக்கைச் சிறகினிலே திரு வி முத்தையா அவர்களை வெளியிடுபவர், ஆசிரியராகவும், இதழாசிரியராக வைகறையையும் கொண்டு சென்னையில் இருந்து வெளிவருகிறது.
தனி இதழ் ரூ.20 ஆண்டு சந்தா ரூ.225
தொடர்பு முகவரி:
காக்கை,
அறை எண் : 7, முதல் தளம், நோபிள் மேன்ஷன், 288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி சென்னை 600 005
பழைய புத்தகக்கடைகளும், பழைய நூலகங்களும் என்னை ஈர்க்கும் காந்தங்கள். நாற்பதுஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் திருவனந்தபுரம் மத்திய நூலகத்துக்குச் சென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில பழைய தமிழ்ப் புத்தகங்களைத் தூசு தட்டிப்புரட்டிக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன்.
திருவிதாங்கூரைஆண்ட சுவாதித் திருநாள் மகாராஜாவால் 1829-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தத்திருவனந்தபுரம் மத்திய நூலகம்தான் இந்தியாவில் அமைந்த முதல் பொது நூலகம்.கர்நாடக சங்கீத விற்பன்னராகவும், பல சாகித்யங்களை இயற்றிய புலவராகவும்இருந்த சுவாதித் திருநாள் மகாராஜா இந்த நூலகத்தை உருவாக்கும் பொறுப்பைகர்னல் எட்வர்ட் காடகன் என்கிற பிரிட்டிஷ் தூதுவரிடம் ஒப்படைத்தார்.அதுமட்டுமல்ல, மகாராஜா இந்த நூலகத்துக்கு வைத்த பெயர் திருவனந்தபுரம்மக்கள் நூலகம்என்பது.
அந்த நூலகத்தில் ஜெர்மானியர் ஒருவரைத்தற்செயலாக சந்தித்தேன். இளைஞனான எனக்கு ஓர் அந்நிய நாட்டவர் இந்தியநூலகத்தில் ஆர்வமுடன் பல விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்தது வியப்பாகஇருந்தது. மெல்லப் பேச்சுக் கொடுத்து அவருக்கு நெருக்கமானேன். நாற்பதுஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வு என்பதால் எனக்கு அவரது பெயர் நினைவில்இல்லை. அந்தத் தொடர்பு அத்துடன் முறிந்து விட்டதும் ஒரு காரணம்.
அந்தஜெர்மானியர் சொன்ன ஒரு செய்தி எனது மனதில் பதிந்தது. இன்றுவரைஉறுத்திக்கொண்டும் இருக்கிறது. அது- "இந்தியர்கள் உலகிலேயே மிகவும்புத்திசாலிகளாகவும், அறிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள்தங்களது கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும், பேரறிவையும் ஆவணப்படுத்தாமல்விட்டு விட்டார்கள். குறைந்தபட்சம், ஓலைச்சுவடிகளையாவது பராமரித்துப்பாதுகாத்தார்களா என்றால் இல்லை. அதனால்தான், இந்தியர்கள்பின்தங்கிவிட்டனர்!''
எவ்வளவு பெரிய உண்மை! இதை நான் நூலகங்களுக்குப்போகும் போதெல்லாம் நினைத்து வேதனைப்படுவேன். நல்லவேளை, தமிழ்த் தாத்தாஉ.வே.சா. முனைப்புடன் செயல்பட்டிருக்கா விட்டால் இப்போது நமக்குக்கிடைத்திருக்கும் செவ்விலக்கியங்கள்கூடக் கிடைக்காமல் போயிருக்கும் என்பதைஎப்படி மறக்க முடியும்?
இனியாவது அந்தத் தவறைச் செய்யாமல், நம்மிடம்இருக்கும் அரிய நூல்களையும், தகவல்களையும், ஓலைச்சுவடிகளையும்ஆவணப்படுத்துவோமா என்றால், உற்சாகமாக "ஆமாம்' என்று சொல்ல இயலவில்லை.
இந்தச்சூழ்நிலையில் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் சுவடி மற்றும் நூல்பாதுகாப்பாளராகவும், நூலகராகவும் பணியாற்றும் முனைவர் ப.பெருமாள், சுவடிப்பாதுகாப்பு வரலாறுஎன்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருப்பதைப்பாராட்டாமல் இருக்க முடியாது.
தனக்குத் தெரிந்த, தான் அனுபவத்தால் கற்றவித்தைகள், வருங்கால சந்ததியினருக்கும், தனக்குப் பின்னால் உருவாகப் போகும்நூலகர்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிற அவரது உயரிய நோக்கத்திற்காகவேமுனைவர் பெருமாளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அரிஸ்டாடில்கி.மு. 335-இல் எழுதிய "ஹிஸ்டரியோ அனிமலியம்' என்ற நூலில் புத்தகங்களின்மீது வாலில்லாத தேள் போன்ற பூச்சிகளைப் பார்த்ததாகக் குறிப்பிடுகின்றார்.புத்தகம் என்று அவர் குறிப்பிடுவது ஓலைச்சுவடிகளாகத்தான் இருக்க வேண்டும்.இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் புத்தகப் புழு, வெள்ளி மீன், கறையான், புத்தகப் பேன் போன்ற பூச்சிகளினால் காகிதச் சுவடிகள் அழிவுக்குஉள்ளாகின்றன.ஓலைச் சுவடிகள் புத்தகப் புழு, கரப்பான் பூச்சி மற்றும் கறையான்களால்அழிவுக்குள்ளாகின்றன'' என்று பதிவு செய்யும் முனைவர் பெருமாள், ஓலைச்சுவடிகள் பற்றிய எல்லா விவரங்களையும் தொகுத்து அளிக்கிறார்.
சுவடிகள்நம் சமூக வரலாற்றைப் பாதுகாத்த பெட்டகம். சுவடிகளைப் பாதுகாப்பது நமதுவரலாற்றைப் பாதுகாப்பதாகும்' என்கிற கடமை உணர்வுடன் செயல்பட்டு சுவடிகள்பற்றிய அத்தனை விவரங்களையும், சுவடிப் பாதுகாப்பு பற்றிய எல்லாஅம்சங்களையும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் முனைவர் பெருமாள்.
ஒவ்வொருபல்கலைக்கழகமும், ஒவ்வொரு தமிழ் அமைப்பும் முனைவர் ப.பெருமாளை அழைத்துகெüரவிக்க வேண்டும் என்பது எனது வேண்டு கோள். இவரைப் போலத் தனக்குத்தெரிந்தது வருங்கால சந்ததியருக்கும் தெரிய வேண்டும் என்று நமது முன்னோர்கள்நினைக்காததாலும், ஆவணப் படுத்தப்பட்ட அரிய பல விஷயங்களைப் பாதுகாக்கத்தவறியதாலும்தானே நாம் நமது சரித்திரத்தையும் சாதனைகளையும் நிலைநிறுத்தமுடியாமல் தவிக்கிறோம்.
முனைவர் ப.பெருமாளுக்கும், அவரதுபுத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட்ட காரைக்குடி கோவிலூர் மடாலயத்துக்கும்தமிழ்கூறு நல்லுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது!
கடந்த ஞாயிறு அன்று (05-08-2012)இந்த வாரம் கலாரசிகன் பகுதியில் தினமணி ஆசிரியர் எழுதிய கட்டுரையின் முழுவடிவமும் இங்கே!
இந்தப் பத்தியில் ஓலைச்சுவடிகளைக் குறித்துச் சொல்லியிருப்பது, ஞானாலயா ஆய்வு நூலகத்தில் இருக்கும் அரிய புத்தக சேகரத்துக்கும் அப்படியே பொருந்துகிறதே!வரலாற்றுப் பிரக்ஞையோடு ஆவணப் படுத்துகிற வேலை நம் முன்னால் காத்திருக்கிறது.
ஞானாலயா உங்கள் உதவிக்கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது! வாருங்கள்! கை கொடுங்கள்!