Sunday, 2 September 2012

வரலாற்றைப் பேசுதல்!கஞ்சிரா பிறந்த கதை!



வரலாறு, வரலாற்றுப் பிரக்ஞை, வரலாற்றைப் பேசுதல் என்றாலேயே நம்மில் பலருக்குக் கொஞ்சம் குழப்பம் வந்து விடுகிறது.இன்றைக்கு நாம் கேள்விப் படும்,வாசிக்கும் வரலாறு குறித்த செய்திகள் அந்த லட்சணத்தில் தான் இருக்கின்றன.இதைத்தான் ஞானாலயா பா.கிருஷ்ண மூர்த்தி ஐயா "தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அற்றவர்கள்: அவர்களுக்கு தங்களுடைய பாரம்பரியத்தை , வரலாற்றை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது " என்று சொல்வதாக இந்தப் பதிவில் நாம் ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்.

ன்ன தான் சொன்னாலும், வரலாறு, கடந்த நிகழ்வுகள் என்று சொன்ன உடனேயே குழப்பமும் அலட்சியமும், மறதியும் தான் முன்னே வந்து நிற்கிறது! \




ஞ்சிரா! கர்நாடக இசையில் பயன் படுத்தப்படுகிற ஒரு தாள வாத்தியம்! இது உருவாக்கப்பட்டு சுமார் நூற்றைம்பது ஆண்டுகளே ஆகின்றன. கச்சேரிகளில் பயன்பாட்டுக்கு வந்து ஒரு நூற்று முப்பது வருடங்களுக்குள் தான் இருக்கும்..




ஞ்சிராவைப்பற்றி ஹிந்து நாளிதழில் நான்காண்டுகளுக்கு முன்னால் வந்த ஒரு செய்தி! கஞ்சிராவைப் பற்றிகொஞ்சம் மேலோட்டமாகப் பேசப் பட்டிருக்கிறதே தவிர  சரியான தகவல்கள் இல்லை. இந்த செய்தியின் கடைசி வரிகளில் பலாமரத்தில் செய்யப்படுவது, தோல் என்று மொட்டையாக இருக்கிறது. சரி! கட்டற்ற தகவல் களஞ்சியம் என்று சொல்லிக் கொள்கிறார்களே, அந்த விக்கி பக்கங்களில் போய்க் கஞ்சிரா பற்றிய தகவல்களைத் தேடினால்,உடும்புத்தோல் பயன் படுத்தப்படுவது பற்றிய விவரம் கிடைக்கிறது.அதோடு சரி! மேலதிக விவரங்களோ, முழுமையாகவோ இந்தத்தளமும் இல்லை.

ன்னை  கஞ்சிரா மாஸ்ட்ரோ என்று அழைத்துக் கொள்கிற ஒரு கலைஞர்  இவர்!  இவருடைய வலைப்பக்கத்திலாவது கஞ்சிராவைப்பற்றி கொஞ்சம் முழுமையான தகவல் இருக்கிறதா என்று தேடினால் அதிலும் ஏமாற்றமே!

1850 களில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம். மாண் பூண்டியா பிள்ளை என்ற இளைஞர் வேலை எதுவுமில்லாமல் இருந்தார். அரண்மனை வைத்தியராக இருந்த யோகானந்த சுவாமிகள் என்பவர், மாண் பூண்டியா பிள்ளையை மன்னரிடம் அழைத்துச் சென்று ஏதாவது வேலை கொடுக்குமாறு வேண்டினார். இளைஞருக்கு நகரில் லாந்தர் விளக்கேற்றும் வேலை தரப்பட்டது.

கீழ மேல் தென்வடலாக  நான்கு அடுக்கு வீதிகள் இருந்த நகரம் புதுக்கோட்டை. ஒரு தெருவுக்கு ஆறு லாந்தர் விளக்குகள், ஆக மொத்தம் 96 விளக்குகள். மாண் பூண்டியா பிள்ளை ஒரு கையில் மண்ணெண்ணெய் டின், இன்னொரு கையில் பெரிய திரி போட்ட தீவட்டித் தடியுடன் தொழில் சார்த்திக் கொண்டு ஒவ்வொரு வீதி விளக்காக ஏற்றிக் கொண்டே செல்வார். அப்படிச் செல்கிற சமயங்களில் தீவட்டித் தடியில் தாளம் போட்டபடியே போவது வழக்கம். இதை யோகானந்த சுவாமிகள் கவனித்திருக்கிறார். அகமுடையார் குலத்தில் பிறந்து, சங்கீதத்தில் இத்தனை ஆர்வமா என்று வியந்து, மாண் பூண்டியா பிள்ளையை, பகலில் சும்மா இருக்கும் நேரத்தில் வித்தை பழகட்டும் என்று அரண்மனை தவில் வித்வான் மாரியப்ப பிள்ளையிடம் சேர்த்து விட்டார்..லாந்தர் ஏற்றும் பணியில் சேர்ந்த தவில் வாசிப்பை முறையாகப் பயின்று, அரண்மனையிலேயே தவில் வித்வானாகவும் ஆகிப் போனார்.

ட்சிணாமூர்த்திப் பிள்ளை என்று ஒரு  சமஸ்தானத்துப் பட்டாளத்துக்காரர்! துப்பாக்கிக் கட்டைகளைத் துடைக்கிறேன் பேர்வழி என்று துப்பாக்கிக் கட்டைகளை வைத்துத் தாளம் போட்டே பலதுப்பாக்கிகளை உடைத்தவர். இந்த மாதிரி ஆசாமிக்குப் பட்டாளத்து வேலை ஒத்து வராது என்பதைக் கவனித்த யோகானந்த சுவாமிகள், இவரை மாண் பூண்டியா பிள்ளையிடம் ஒப்படைத்து இசையைக் கற்றுக் கொடு என்று சேர்க்கிறார். மிருதங்க வித்வானாக தட்சிணாமூர்த்திப் பிள்ளை மிளிர வேண்டும் என்று இரவு பகல் சாதகம் செய்து கொண்டிருந்த நேரத்தில் இவர்களோடு பழனி முத்தையா பிள்ளை என்பவரும் சேர்ந்து கொள்கிறார்.

ந்த மூவரும் ஏட்டுக் கல்வி கற்றவர்கள் அல்ல.மிருதங்க வாசிப்பிலேயே அத்தனை தாளக் கட்டுக்களையும் படித்தார்கள். அடப்பன்வயலிலுள்ள மாந்தோப்பில் மூவரும் சேர்ந்து கூழாங்கற்களை வைத்துக் கணக்கிட்டு கோர்வைகள், ஓசைக் குறிப்போடு கூடிய சொற்கட்டுகள், தாள வரிசை வகைப்பாடுகள் என்று அத்தனையையும் பயிற்சி செய்தே கரைத்துக் குடித்தார்கள்.

ப்படி சாதகம் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே மாண் பூண்டியா பிள்ளைக்குப் புதிய வகை தாளக் கருவி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தீவீரமாக இருந்தது.எடுத்துச் செல்ல இலகுவாகவும், இசைக் கச்சேரிகளில் அதற்கு முக்கிய பங்கும் இருக்க வேண்டும் என்று பல்வேறு தாள இசைக் கருவிகளை ஒப்பு நோக்கித் தேட ஆரம்பித்தார்.நாகூர் பக்கிரிமார்கள் பயன்படுத்தி வந்த டேப் அவரை மிகவும் கவர்ந்தது.தவில், கடம், மிருதங்கம் போல இதை இருகரங்களையும் பயன்படுத்தி  இசைக்க வேண்டியதில்லை.ஆனால், டேப் வடிவம் பெரியது. வட்டவடிவக் கட்டையில் பதினோரு இடங்களில் துளையிட்டு வட்டவடிவிலான பித்தளை அல்லது இரும்புத்தகடுகளை துவாரமிட்டுப் பொருத்தியிருப்பார்கள்.ஒரு புறத்தில் ஆட்டு சவ்வுத்தோலை இறுக்கி ஒட்டியிருப்பார்கள்.

வ்வளவு பெரிதாக வேண்டாமே என்று யோசித்து தாழம்புதரில் நல்ல பருமனான கட்டையை வெட்டி ஒரு அடிக்கும் குறைவான வட்ட வடிவத்தில் ஆறுவிரற் கடையளவு தடிமனாகவும் சக்கரவடிவில் ஒழுங்கு படுத்திக் கொண்டு முதலில் மாட்டுத் தோலைப் பயன்படுத்திப் பார்த்தார்கள். ஒலி திருப்தி தரவில்லை. ஆட்டுத்தோலை  மாற்றிப் பார்த்தும் பிரயோசனமில்லை. இப்படிப் பரிசோதித்துக் கொண்டு இருந்த தருணத்தில் ஒரு ஆண் உடும்பு தன்ஜோடியுடன் ஓடிய போது புதர், கூழாங்கற்களில் அவை செல்லுமிடத்து ஒருவகையான நாதம் வருவதைக் கண்டார்கள். உடும்பை பிடித்து வைத்து, முதலில் ஆண் உடும்பின் முதுகுத்தோலைப் பாடம் செய்ததில்  எழுந்த நாதம் திருப்தியாக இருந்தாலும், முதுகுத்தோல் என்பதால் தடிமனாக இருந்தது. பெண் உடும்பின் வயிற்றுப் பகுதித்தோலைப் பாடம் செய்து பயன்படுத்திப் பார்த்ததில், எழுந்த நாதம் கம்பீரமாக இருந்தது!

தாழங்கட்டைக்குப் பதிலாக பலாக் கட்டையையும், ஆறு இடங்களில் துளையிட்டு காலணாக் காசுகளை ஜால்ராக்களாக வைத்திருந்ததை மாற்றி மூன்றே துளைகள், ஜால்ராக்கள் என வடிவமைத்து உருவானது தான் இப்போது கஞ்சிரா என்றழைக்கப்படும் இசைக்கருவி!

ஞானாலயா பா கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டையின் இசை மரபை அறிமுகம் செய்து வைத்து, யோகானந்த சுவாமிகளின் பேரன் திரு செல்லையா பிள்ளை மற்றும் கஞ்சிரா இசைக் கலைஞர் ராம் இருவரையும் காக்கைச் சிறகினிலே மாத இதழுக்காகக் கொடுத்த ஒரு நேர்காணலின் சுருக்கம் இது!  காக்கைச் சிறகினிலே மாத இதழின் டிசம்பர் 2011 இதழில் வெளிவந்த இந்த நேர்காணலை இங்கே முழுமையாகப் படிக்கலாம்!

காக்கைச் சிறகினிலே திரு வி முத்தையா அவர்களை வெளியிடுபவர், ஆசிரியராகவும், இதழாசிரியராக வைகறையையும் கொண்டு சென்னையில் இருந்து வெளிவருகிறது.

தனி இதழ்  ரூ.20  ஆண்டு சந்தா ரூ.225

தொடர்பு முகவரி:

காக்கை,
அறை எண் : 7, முதல் தளம், நோபிள் மேன்ஷன்,
288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி

சென்னை 600 005



மின்னஞ்சல் :
saalaramvaigarai@gmail.com

1 comment:

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyagam.com/vote-button/

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...