Showing posts with label உதவிக்கரங்கள். Show all posts
Showing posts with label உதவிக்கரங்கள். Show all posts

Monday, 8 October 2012

ஞானாலயா ஒரு ஒலிப்பதிவு! முதல் முயற்சி!


அறிஞர்களின் அறிஞர் என்று சிறப்பிக்கப்பட்ட திரு மு. அருணாசலத்தின் வெளியிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாக இருந்த தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு இரண்டையும் பெருமுயற்சி எடுத்து வெளியிட்ட திரு உல.பாலசுப்ரமணியன், (மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்) உடன் ஞானாலயா ஆய்வு௮ நூலக நிறுவனர்  திரு பா.கிருஷ்ணமூர்த்தி.  


இந்தச் சுட்டியில் ஞானாலயா கிருஷ்ண மூர்த்தி ஐயா, தமிழில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெளிவர ஆரம்பித்தது முதல், தமிழின் ஆரம்பகால நூல்கள், நூலகங்கள், முதற்பதிப்பின் அவசியம், நூலகங்களின் பயன்பாடு, நம்மிடம் வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத குறை உட்பட நிறைய விஷயங்களை ஒரு அரை மணிநேர ஒலிப்பதிவில் விரிவாகப் பேசுகிறார்.கேட்டு விட்டு, உங்கள் கருத்துக்களை அந்தப்பக்கத்தில் சொல்லுங்கள்!

தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் புத்தகங்களை நேசிக்கிறவர்கள் அவசியம் கேட்க வேண்டிய உரை இது. கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கேளுங்கள்.

இந்த ஒலிப்பதிவை அனுப்பி வைத்து உதவிய தஞ்சை பாரத் கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் மணிமாறன் & குழுவினருக்கு நன்றி.

Thursday, 13 September 2012

அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்!

மு. அருணாசலம் - தமிழ் இசை இலக்கிய, இலக்கண வரலாற்று நூல்கள்



 
ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் தேவை என்ற செய்தியை முன்வைத்து கூகிள் ப்ளஸ்சிலும், ஞானாலயாவுக்கான வலைப்பூவிலும் இயங்கி வருகிற இந்த ஐந்து மாதங்களில்,நிறைய அனுபவங்கள், தொடர்புகள்! சென்ற வெள்ளிக்கிழமை (07/09/2012) மதுரை  அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரித் தமிழ்த்துறையும் சந்தியா பதிப்பகமும் இணைந்து எழுத்தாளர் வண்ணதாசன் தன்னுடைய பதினேழாம் வயதில் (1962 April) எழுத ஆரம்பித்து ஐம்பதாண்டுகள் பூர்த்தியானதற்காக ஒரு விழா எடுத்தார்கள்.அதற்காக மதுரை வந்திருந்த ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி  ஐயா எனக்கு அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் திரு உல.பாலசுப்ரமணியன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்..

பதிப்புத்துறையில் பழம் தின்று கொட்டைபோட்டவர்களே முன்னெடுக்கத்  தயங்கும் ஒரு சாதனையை இந்த இளைஞர் சாதித்திருக்கிறார்!

உண்மை!  அறிஞர்களுக்கெல்லாம் அறிஞர் என்று கொண்டாடப்படும் திரு மு.அருணாசலம் அவர்களின் படைப்புக்களில்  மிக முக்கியமான நூல்களான தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு ஆகிய இரண்டையும் தன்னுடைய சொந்த செலவில் பதிப்பித்திருக்கிறார்.இரண்டு தொகுதிகளும் சேர்ந்து ரூ.1200/-

சென்ற டிசம்பரில், தினமணி ஆசிரியர் இந்த வாரம் கலாரசிகன் பகுதியில் எழுதிய இந்தப் புத்தகங்களைக் குறித்த அறிமுகம் இங்கே  

கடந்த பிப்ரவரி மாதம் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ஹிந்து நாளிதழில் இந்தப் புத்தகங்களுக்கு எழுதிய மதிப்புரை இங்கே  

"அறிஞர் மு.அருணாசலம் பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக வெளியிட்டுப் புகழ்பெற்றவர்.அன்னாரின் நூல்கள் சான்றாதாரங்களாக விளங்கும் தரத்தன.அவர் தமிழிசை இலக்கிய வரலாறு,தமிழிசை இலக்கண வரலாறு என்னும் இருநூல்களை எழுதி வெளியிடாமல் கையெழுத்துப் படியாக வைத்தவண்ணம் இயற்கை எய்தினார்.மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல.பாலசுப்பிரமணியன் அவர்கள் இந்தக் கையெழுத்துப்படிகளை அரிதின் முயன்று வெளிக்கொண்டு வந்துள்ளார். நூலுருவம் தாங்கியதால் உலகத் தமிழர்கள் அனைவரும் பயன்பெற முடியும்.இத்தகு அரிய பணியில் ஈடுபட்ட முனைவர் உல.பாலசுப்பிரமணியன் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்"
என்கிறார் முனைவர் மு. இளங்கோவன் 

அதெல்லாம்  சரி!யார் இந்த மு அருணாசலம்? அறிஞர்களுக்கெல்லாம் அறிஞர் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? 

தினமணி நாளிதழில் மூன்றாண்டுகளுக்கு முன் வெளிவநத ஒரு கட்டுரையில் விரிவாக 

தமிழிசையில் ஆர்வம் கொண்டவர்கள் மற்றும்  ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த நூலைப் பரிந்துரை செய்யுங்கள்! பயன்படுத்துவோருக்கு வாங்கிப் பரிசளியுங்கள்!

தமிழ்ப் பதிப்புலகின் ஆவணக் காப்பகமாக இயங்கிவரும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் இதுபோன்ற எத்தனை நூல்களை வாசகருக்கு மிக நெருக்கமாகக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது, எத்தனை அரிய நூல்கள் மறுபதிப்புக் காண உதவியிருக்கிறது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை!

 


Wednesday, 8 August 2012

இந்த வாரம் கலாரசிகன்...!



பழைய புத்தகக் கடைகளும், பழைய நூலகங்களும் என்னை ஈர்க்கும் காந்தங்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் திருவனந்தபுரம் மத்திய நூலகத்துக்குச் சென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில பழைய தமிழ்ப் புத்தகங்களைத் தூசு தட்டிப் புரட்டிக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன்.

திருவிதாங்கூரை ஆண்ட சுவாதித் திருநாள் மகாராஜாவால் 1829-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தத் திருவனந்தபுரம் மத்திய நூலகம்தான் இந்தியாவில் அமைந்த முதல் பொது நூலகம்.கர்நாடக சங்கீத விற்பன்னராகவும், பல சாகித்யங்களை இயற்றிய புலவராகவும் இருந்த சுவாதித் திருநாள் மகாராஜா இந்த நூலகத்தை உருவாக்கும் பொறுப்பைகர்னல் எட்வர்ட் காடகன் என்கிற பிரிட்டிஷ் தூதுவரிடம் ஒப்படைத்தார். அதுமட்டுமல்ல, மகாராஜா இந்த நூலகத்துக்கு வைத்த பெயர் திருவனந்தபுரம் மக்கள் நூலகம் என்பது.

அந்த நூலகத்தில் ஜெர்மானியர் ஒருவரைத் தற்செயலாக சந்தித்தேன். இளைஞனான எனக்கு ஓர் அந்நிய நாட்டவர் இந்தியநூலகத்தில் ஆர்வமுடன் பல விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. மெல்லப் பேச்சுக் கொடுத்து அவருக்கு நெருக்கமானேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வு என்பதால் எனக்கு அவரது பெயர் நினைவில்இல்லை. அந்தத் தொடர்பு அத்துடன் முறிந்து விட்டதும் ஒரு காரணம்.

அந்த ஜெர்மானியர் சொன்ன ஒரு செய்தி எனது மனதில் பதிந்தது. இன்றுவரை உறுத்திக்கொண்டும் இருக்கிறது. அது- "இந்தியர்கள் உலகிலேயே மிகவும் புத்திசாலிகளாகவும், அறிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள்தங்களது கண்டு பிடிப்புகளையும், சாதனைகளையும், பேரறிவையும் ஆவணப் படுத்தாமல் விட்டு விட்டார்கள். குறைந்தபட்சம், ஓலைச் சுவடிகளையாவது பராமரித்துப் பாதுகாத்தார்களா என்றால் இல்லை. அதனால்தான், இந்தியர்கள் பின்தங்கிவிட்டனர்!''

எவ்வளவு பெரிய உண்மை! இதை நான் நூலகங்களுக்குப் போகும் போதெல்லாம் நினைத்து வேதனைப்படுவேன். நல்லவேளை, தமிழ்த் தாத்தா உ.வே.சா. முனைப்புடன் செயல்பட்டிருக்கா விட்டால் இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் செவ்விலக்கியங்கள்கூடக் கிடைக்காமல் போயிருக்கும் என்பதைஎப்படி மறக்க முடியும்? 

இனியாவது அந்தத் தவறைச் செய்யாமல், நம்மிடம்இருக்கும் அரிய நூல்களையும், தகவல்களையும், ஓலைச்சுவடிகளையும் ஆவணப் படுத்துவோமா என்றால், உற்சாகமாக "ஆமாம்' என்று சொல்ல இயலவில்லை.

இந்தச் சூழ்நிலையில் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் சுவடி மற்றும் நூல் பாதுகாப்பாளராகவும், நூலகராகவும் பணியாற்றும் முனைவர் ப.பெருமாள், சுவடிப் பாதுகாப்பு வரலாறு என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

தனக்குத் தெரிந்த, தான் அனுபவத்தால் கற்றவித்தைகள், வருங்கால சந்ததியினருக்கும், தனக்குப் பின்னால் உருவாகப் போகும் நூலகர்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிற அவரது உயரிய நோக்கத்திற்காகவேமுனைவர் பெருமாளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அரிஸ்டாடில் கி.மு. 335-இல் எழுதிய "ஹிஸ்டரியோ அனிமலியம்' என்ற நூலில் புத்தகங்களின்மீது வாலில்லாத தேள் போன்ற பூச்சிகளைப் பார்த்ததாகக் குறிப்பிடுகின்றார். புத்தகம் என்று அவர் குறிப்பிடுவது ஓலைச்சுவடிகளாகத்தான் இருக்க வேண்டும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் புத்தகப் புழு, வெள்ளி மீன், கறையான், புத்தகப் பேன் போன்ற பூச்சிகளினால் காகிதச் சுவடிகள் அழிவுக்கு உள்ளாகின்றன. ஓலைச் சுவடிகள் புத்தகப் புழு, கரப்பான் பூச்சி மற்றும் கறையான்களால் அழிவுக்குள்ளாகின்றன'' என்று பதிவு செய்யும் முனைவர் பெருமாள், ஓலைச்சுவடிகள் பற்றிய எல்லா விவரங்களையும் தொகுத்து அளிக்கிறார்.

சுவடிகள் நம் சமூக வரலாற்றைப் பாதுகாத்த பெட்டகம். சுவடிகளைப் பாதுகாப்பது நமது வரலாற்றைப் பாதுகாப்பதாகும்' என்கிற கடமை உணர்வுடன் செயல்பட்டு சுவடிகள் பற்றிய அத்தனை விவரங்களையும், சுவடிப் பாதுகாப்பு பற்றிய எல்லா அம்சங்களையும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் முனைவர் பெருமாள்.

ஒவ்வொரு பல்கலைக்கழகமும், ஒவ்வொரு தமிழ் அமைப்பும் முனைவர் ப.பெருமாளை அழைத்து கெüரவிக்க வேண்டும் என்பது எனது வேண்டு கோள். இவரைப் போலத் தனக்குத் தெரிந்தது வருங்கால சந்ததியருக்கும் தெரிய வேண்டும் என்று நமது முன்னோர்கள்நினைக்காததாலும், ஆவணப் படுத்தப்பட்ட அரிய பல விஷயங்களைப் பாதுகாக்கத் தவறியதாலும்தானே நாம் நமது சரித்திரத்தையும் சாதனைகளையும் நிலைநிறுத்த முடியாமல் தவிக்கிறோம்.

முனைவர் ப.பெருமாளுக்கும், அவரது புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட்ட காரைக்குடி கோவிலூர் மடாலயத்துக்கும்தமிழ்கூறு நல்லுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது!

--------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த ஞாயிறு அன்று (05-08-2012) இந்த வாரம் கலாரசிகன் பகுதியில் தினமணி ஆசிரியர் எழுதிய கட்டுரையின் முழுவடிவமும் இங்கே!

இந்தப் பத்தியில் ஓலைச்சுவடிகளைக் குறித்துச் சொல்லியிருப்பது, ஞானாலயா ஆய்வு நூலகத்தில் இருக்கும் அரிய புத்தக சேகரத்துக்கும் அப்படியே பொருந்துகிறதே!வரலாற்றுப் பிரக்ஞையோடு ஆவணப் படுத்துகிற வேலை நம் முன்னால் காத்திருக்கிறது.


ஞானாலயா உங்கள் உதவிக்கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது! வாருங்கள்! கை கொடுங்கள்!
..

Thursday, 2 August 2012

கொடி அசைந்ததால் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா?


சிரிக்கும் துறவிகள்என்ற தலைப்பில், ஞானாலயா திரு பா.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் காக்கைச்சிறகினிலே டிசம்பர் 2011 இதழில் ஜென் புத்தரியத்தைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையில் இருந்த ஒரு கதையை, முந்தைய பதிவொன்றில் பார்த்திருந்தோம், இல்லையா!



ஜென் என்பது என்ன? மதமாய் நிறுவப்படாத ஒரு அற்புத இயல்புத் தன்மை! சாதாரண மனதின் விழிப்புணர்ச்சிச் சிகரம்!முழுமையான விடுதலையை நோக்கிய எதார்த்தம்! தீவீரமான இயற்கைத்தன்மை கொண்ட வாழ்க்கையின் களிப்பு!

இப்படி ஒரு சுருக்கமான விளக்கத்தோடு ஜென் பற்றிய அறிமுகம் தொடங்குகிறது. அடுத்து, இத்தகைய குணாதிசயங்கள் மனிதனின் வாழ்க்கையில் சாத்தியம் தானா  என்று இயல்பாகவே எழும் மனித மனத்தின் சந்தேகப்படும் இயல்பைத் தொட்டு,விடை சொல்கிற மாதிரி ஜென் (பவுத்தத்தின்) தோற்றத்தின் பின்னணியைத் தொட்டு கட்டுரை விரிகிறது.

புத்தருக்கு முன்னாலேயே சீனாவில் லாவோட்சேயும், கன்பூசியசும், தத்துவார்த்தத் தேடலை தொடங்கி வைத்திருந்தாலும், ஜென் வாழ்க்கையின் எதார்த்தங்களை விட்டு விலகியோ, அல்லது எதார்த்தத்தில் இருந்து தப்பிச் செல்வதையோ ஏற்கவில்லை. ஜென் ஜப்பானிய தேசத்தில் பிறந்து, செழுமையடைந்ததைக் கட்டுரை, தெளிந்த நீரோட்டம் போல எடுத்துச் சொல்கிறது.அங்கங்கே ஜென்னை புரிய வைக்கும் முகமாக சிறு சிறு குட்டிக் கதைகள்!

ஒருமுறை இரு ஜென் துறவிகள் கொடிக்கம்பத்தில் ஒரு கோடி பறந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.தங்களுக்குள் விவாதம் செய்து  கொண்டிருந்தனர்.

"
காற்று தான் அசைகிறது" என்றார் ஒருவர்.

"
இல்லை, இல்லை!கொடிதான் அசைகிறது" என்றார் மற்றொருவர்.

இந்த விவாதத்தை கவனித்துக் கொண்டிருந்த ஜென் குரு இடை மறித்துச் சொன்னார்,"கொடியும் அசையவில்லை! காற்றும் அசையவில்லை!உங்கள் மனந்தான்அசைகிறது" என்று. இதைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இரு துறவிகளின் மனதில் பதியும்படி மேலும் தொடர்ந்தார் குரு. "வாயைத் திறந்ததும் அனைத்தும் தவறாகின்றன."

விவாதங்களும் அறிவுரைகளும் எப்போதும் முழுமையை எட்டுவதில்லை!



காக்கைச் சிறகினிலே திரு வி முத்தையா அவர்களை வெளியிடுபவர், ஆசிரியராகவும், இதழாசிரியராக வைகறையையும் கொண்டு சென்னையில் இருந்து வெளி வருகிறது.

தனி இதழ்  ரூ.20  ஆண்டு சந்தா ரூ.225
தொடர்பு முகவரி:

காக்கை,
அறை எண் : 7, முதல் தளம், நோபிள் மேன்ஷன்,
288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி

சென்னை 600 005


மின்னஞ்சல் : saalaramvaigarai@gmail.com

Thursday, 26 July 2012

ஞானாலயா! வாருங்கள் சேர்ந்து செயல்படலாம்!


இந்த வலைப்பக்கங்களை  நண்பர் நிகழ்காலத்தில் சிவா துவங்கி வைத்த நேரம், மிக மிக நல்ல நேரம் என்றே சொல்ல வேண்டும்!
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஆதரவுக் கரங்களை வேண்டி நிற்கிறது என்ற செய்தி, தமிழ் இணையத்தில் நிறைய நண்பர்களை சென்றடைந்திருக்கிறது..

செய்திகள் பரவிய அதே வேகத்தில் உதவிக்கரங்கள் நீளவில்லை என்பது உண்மையே!
ஆனாலும்,இந்த செய்தி நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் சிறுகச் சிறுக உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை, நன்றியோடு இந்தத் தருணத்தில் சொல்லியே ஆகவேண்டும்.

இப்படி முந்தைய பதிவொன்றில் சொல்லியிருந்ததில் கொஞ்சம் கூடப்பொய்யே இல்லை! சிவாவைத் தொடர்ந்து கழுகு குழுமத்திலும் தன்னுடைய வலைப்பதிவிலும் நண்பர் தேவா ஞானாலயாவுக்கு உதவிக் கரங்களைத் தேடுவதில் சேர்ந்து கொண்டார். இப்போது திருப்பூரில் இருந்து நண்பர் ஜோதிஜி இந்தக் குழுவில் சேர்ந்து கொண்டிருக்கிறார்
 
http://www.4tamilmedia.com/ தளத்தில் ஒரு பரந்த அளவிலான வாசகர்களிடம் ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்ற செய்தியைக் கொண்டு சென்றதிலும், தன்னுடைய நண்பர்கள் வழியாக முடிந்ததைச் செய்யும் பணியிலும் ஜோதிஜி  சேர்ந்து கொண்டிருக்கிறார். அதே மாதிரி இன்னொரு அமெரிக்க வாழ் நண்பர், தற்சமயம் இந்தியாவுக்கு வந்திருப்பவர், தொடர்பு கொண்டு தான் செய்யக் கூடியதென்ன என்பதைக் கேட்டறிந்தார்.

கூகிள் ப்ளஸ்சில் மட்டும் ரீஷேர் செய்யப்பட்ட,  பகிர்ந்து கொண்ட ப்ளஸ்சர்களைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையை அப்படியே எடுத்துக் கொண்டு இந்த செய்தி எத்தனை முறை வலம் வந்ததென்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்ற செய்தி சுமார் மூன்று லட்சம் பேர்களை, அல்லது மூன்று லட்சம் தடவை தமிழ் இணையத்தில், கூகிள் ப்ளஸ்ஸில் புழங்கிக் கொண்டு  இருப்பவர்களிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த செய்தியை எத்தனை பேர் உள் வாங்கிக் கொண்டார்கள், நாமும் இதில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று எத்தனை பேர் முன் வந்தார்கள் என்றுபார்த்தால், இருகை விரல் எண்ணிக்கைக்குள் அடங்கி விடும்!

அப்படியானால், இதுவரை செய்ததெல்லாம் வீண் தானா? இல்லவே இல்லை! 


Think differently  என்ற வலைப்பதிவில் சில மாதங்களுக்கு முன்னால், திரு மக்கின்னான், டெரெக் சிவெர்ஸ் என்பவர் யூட்யூபில் தலைமைப் பண்பு  குறித்து வலையேற்றம் செய்திருந்த வீடியோ ஒன்றை மேற்கோள் காட்டி இருந்தார். இந்த மூன்று நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். இதனுடைய டெக்ஸ்ட் வடிவமிங்கே

மேல் சட்டை அணியாத ஒருவர், சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், நடனமாட ஆரம்பிக்கிறார். சிறிது நேரமானதும் இன்னொருவரும் சேர்ந்து கொள்கிறார்.  
அந்த முதல் பின்பற்றும் நபர்  கிடைக்கும் அந்தத் தருணம் தான் மிக முக்கியம். 

இரண்டுபேர் சேர்ந்து நடனமாட ஆரம்பித்ததும், மூன்றாவதாக ஒருவர் சேர்ந்து கொள்ள, நடனமாடும் விருப்பம் ஒரு கூட்டத்தின் விருப்பமாக மாற ஆரம்பிக்கிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்!

மாற்றத்திற்குத் தயாராவதும் இப்படித் தான்! ஒரு முன்னோடி, மாற்றத்திற்கு வித்தாக இருக்கிறான். அவனைப் பின்பற்றும் அந்த முதலாவது, இரண்டாவது ஆர்வலர்கள் தான் முக்கியம். அப்புறம் அது எல்லோருக்கும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது!

இங்கே இந்த இடத்தில் அந்த முன்னோடியாக ஞானாலயா தம்பதியினரை வைத்துக் கொண்டு, அவர்களுடைய ஆயுட்கால உழைப்பை, சாதனையை உண்மையாக  பின்பற்றுகிற ஆர்வலர்கள் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள்!

இப்படி உண்மையான ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கில், ஏன் நூற்றுக் கணக்கில் கூட  வேண்டியதே இல்லை, ஒரு நாலைந்து பேர் சேர்ந்தாலே கூடப்போதுமானது! ஆயிரக்கணக்கானவர்களை ஈடு படுத்துகிற மாற்றத்தின் கருவிகளாக, விதை நெல்லாக  அவர்கள் தான் இருப்பார்கள்!

ஆலமரத்தின் விழுதுகளாக, விதைநெல்லாக, மாற்றத்தின் கருவிகளாக இருக்கச் சம்மதமா? வாருங்கள்! சேர்ந்து செயல்படலாம்!

செய்ய வேண்டிய வேலைகள் நிறைய காத்துக் கொண்டிருக்கின்றன!

..

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...