Showing posts with label ஜென். Show all posts
Showing posts with label ஜென். Show all posts

Thursday, 2 August 2012

கொடி அசைந்ததால் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா?


சிரிக்கும் துறவிகள்என்ற தலைப்பில், ஞானாலயா திரு பா.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் காக்கைச்சிறகினிலே டிசம்பர் 2011 இதழில் ஜென் புத்தரியத்தைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையில் இருந்த ஒரு கதையை, முந்தைய பதிவொன்றில் பார்த்திருந்தோம், இல்லையா!



ஜென் என்பது என்ன? மதமாய் நிறுவப்படாத ஒரு அற்புத இயல்புத் தன்மை! சாதாரண மனதின் விழிப்புணர்ச்சிச் சிகரம்!முழுமையான விடுதலையை நோக்கிய எதார்த்தம்! தீவீரமான இயற்கைத்தன்மை கொண்ட வாழ்க்கையின் களிப்பு!

ப்படி ஒரு சுருக்கமான விளக்கத்தோடு ஜென் பற்றிய அறிமுகம் தொடங்குகிறது. அடுத்து, இத்தகைய குணாதிசயங்கள் மனிதனின் வாழ்க்கையில் சாத்தியம் தானா  என்று இயல்பாகவே எழும் மனித மனத்தின் சந்தேகப்படும் இயல்பைத் தொட்டு,விடை சொல்கிற மாதிரி ஜென் (பவுத்தத்தின்) தோற்றத்தின் பின்னணியைத் தொட்டு கட்டுரை விரிகிறது.

புத்தருக்கு முன்னாலேயே சீனாவில் லாவோட்சேயும், கன்பூசியசும், தத்துவார்த்தத் தேடலை தொடங்கி வைத்திருந்தாலும், ஜென் வாழ்க்கையின் எதார்த்தங்களை விட்டு விலகியோ, அல்லது எதார்த்தத்தில் இருந்து தப்பிச் செல்வதையோ ஏற்கவில்லை. ஜென் ஜப்பானிய தேசத்தில் பிறந்து, செழுமையடைந்ததைக் கட்டுரை, தெளிந்த நீரோட்டம் போல எடுத்துச் சொல்கிறது.அங்கங்கே ஜென்னை புரிய வைக்கும் முகமாக சிறு சிறு குட்டிக் கதைகள்!

ருமுறை இரு ஜென் துறவிகள் கொடிக்கம்பத்தில் ஒரு கோடி பறந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.தங்களுக்குள் விவாதம் செய்து  கொண்டிருந்தனர்.

"
காற்று தான் அசைகிறது" என்றார் ஒருவர்.

"
இல்லை, இல்லை!கொடிதான் அசைகிறது" என்றார் மற்றொருவர்.

இந்த விவாதத்தை கவனித்துக் கொண்டிருந்த ஜென் குரு இடை மறித்துச் சொன்னார்,"கொடியும் அசையவில்லை! காற்றும் அசையவில்லை!உங்கள் மனந்தான்அசைகிறது" என்று. இதைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இரு துறவிகளின் மனதில் பதியும்படி மேலும் தொடர்ந்தார் குரு. "வாயைத் திறந்ததும் அனைத்தும் தவறாகின்றன."

விவாதங்களும் அறிவுரைகளும் எப்போதும் முழுமையை எட்டுவதில்லை!



காக்கைச் சிறகினிலே திரு வி முத்தையா அவர்களை வெளியிடுபவர், ஆசிரியராகவும், இதழாசிரியராக வைகறையையும் கொண்டு சென்னையில் இருந்து வெளி வருகிறது.

தனி இதழ்  ரூ.20  ஆண்டு சந்தா ரூ.225
தொடர்பு முகவரி:

காக்கை,
அறை எண் : 7, முதல் தளம், நோபிள் மேன்ஷன்,
288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி

சென்னை 600 005


மின்னஞ்சல் : saalaramvaigarai@gmail.com

Tuesday, 17 July 2012

சிரிக்கும் துறவிகள் - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி


காக்கை சிறகினிலே இந்த மாத இதழில் (December,2011) ஜென்னைப் பற்றி நீண்ட, சுவையான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி.


காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த கட்டுரையின் முதல் பக்கம்! வார்த்தைகளை வீணடிக்காத உழைப்பே தியானம் என்று நச்சென்று ஜென் பவுத்தத்தை விளக்க ஆரம்பிக்கிறது!
இதை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். அதனூடே சிரிக்கும் துறவிகள் என்ற கதை ஒன்றினை சொல்கிறார். அதை எனது மொழியில் இங்கே தருவதை எனது இன்றைய கடமையாகவே கருதுகிறேன்.

மூன்று துறவிகள் சீனாவில் இருந்தார்கள். மூவரும் சதா சர்வ காலமும் சிரித்துக் கொண்டே இருந்ததால் அவர்களை மக்கள் சிரிக்கும் துறவிகள்” என்றே அழைத்தார்கள். எதற்காக சிரிக்கிறோம் என்பது அவர்களுக்கே விளங்காத நிலையில் பையப் பைய மக்களும் அவர்களோடு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

ஒரு நாள் அந்த மூவரில் ஒரு துறவி இறந்து போனார். ஊரே திரண்டு நின்று அழுது தீர்த்தது. ஆனால் மற்ற இரண்டு துறவிகளும் நண்பனின் பிணத்தருகே நின்று சிரித்துக் கொண்டே இருந்தனர். எரிச்சலடைந்த மக்கள் அவர்களிடம் சென்றனர்.

“ நண்பனின் பிணமருகே நின்று சிரிக்கிறீர்களே. இது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?”

“இல்லை”

“பாவிகளா. உருப்படுவீங்களா”

“ பந்தயத்தில் எங்களை அவன் ஜெயித்து விட்டான். அதுதான் சிரிக்கிறோம்”

“பந்தயமா?”

“ஆமாம், எங்களில் யார் முதலில் சாவது என்பது பந்தயம். அவன் ஜெயித்து விட்டான். அதை நினைத்துதான் சிரிக்கிறோம்”

வாயடைத்துப் போனார்கள்.

செத்த துறவி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

“ நான் சதா சிரித்துக் கொண்டே இருந்ததால் அழுக்கென்னை அண்டவே இல்லை. எனவே நான் செத்துப் போனதும் என்னைக் குளிப்பாட்டாமல் அப்படியே எரித்து விடுங்கள்.”

அப்படியே செய்தார்கள்.

அப்போது அவர் தனது உடைகளுக்குள் ஒளித்து வைத்திருந்த வெடிகள் வெடித்தன. வானத்தில் சில ஜொளித்து வேடிக்கை காட்டின. எரியூட்ட வந்திருந்த எல்லோரும் சிரித்தார்கள்.

என்ன ஒரு பந்தயம்? வென்றவன் தனது வெற்றியைக் கொண்டாடவே இயலாது என்று தெரிந்திருந்தும் தோற்றவர்கள் தங்களது தோல்விக்காக துவளாமல் வென்று இல்லாமல் போனவனது, அல்லது இல்லாமல் போய் வென்றவனது வெற்ரியை கொண்டாடுவது என்பது இருக்கிறதே... அப்பப்பா... ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னமே கதை சொல்லி இருக்கிறார்கள். 

அநேகமாக தனது மரணத்திலும் மக்கள் சிரித்து மகிழ எதையோ வைத்து விட்டுப் போன மகத்தான மனிதன் இவனாகத்தானிருக்கும்!

Tuesday, December 13, 2011 

Thanks and courtesy:    http://www.eraaedwin.com/2011/12/blog-post_13.html

இந்தப் பதிவெழுதிய திரு இரா. எட்வின் காக்கைச் சிறகினிலே மாதஇதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார். 

"விழிப்புணர்வில் சற்று சுணக்கம் ஏற்படும் போது சீடனை அடிக்க குருவுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை சீடனுக்கும் உண்டு என்பது ஜென்னின் சிறப்புகளில் ஒன்று. எதையும் கற்றுத்தராத குருவுக்கு ஒரு ஜென் மாணவனால் தான் நன்றி கூறமுடியும் ஏனென்றால் சுயமான வளர்ச்சிக்கு அவர் வழிகாட்டினார்" என ஜென் பௌத்தத்தை விளக்கும் ஜென் பௌத்தம் ஓர் அறிமுகம் என்ற தொடரை ஞானாலயா கிருஷ்ண மூர்த்தி எழுதி வருகிறார்.

காக்கைச் சிறகினிலே திரு வி முத்தையா அவர்களை வெளியிடுபவர், ஆசிரியராகவும், இதழாசிரியராக வைகறையையும் கொண்டு சென்னையில் இருந்து வெளிவருகிறது.

தனி இதழ்  ரூ.20  ஆண்டு சந்தா ரூ.225

தொடர்பு முகவரி:

காக்கை,
அறை எண் : 7, முதல் தளம், நோபிள் மேன்ஷன்,
288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி
சென்னை 600 005


மின்னஞ்சல் : saalaramvaigarai@gmail.com

..


ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...