வாழ்நிலைகளை கல்வெட்டுக்கள் மூலமும், செப்பேடுகள் மூலமாகவும், ஆவணப்படுத்தி வந்த தமிழர்களின் ஆவணப்படுத்தல் என்பது காலவோட்டத்தில் அருகி வருகிறது. அதற்கான முன்னேற்பாடு செய்பவர்களை ஆதரிப்பது என்பதும் குறைந்து வருகிறது. காலம் காலமாக இப்படித்தான் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் தேய்ந்து வந்துள்ளது. எஞ்சியுள்ள சான்றுகளை வைத்து தான் மூத்தகுடி தமிழர்களின் வாழ்க்கை தடங்களை நம்மால் உணர முடிகின்றது.
ஒரு தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறைக்கு இந்த ஆவணங்கள் கடத்தப்படுவதில்லை. அதன் அவசியமும் உணரப் படுவதில்லை. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆவணப் படுத்தலை இலகு படுத்தலுக்கான ஏராளமான சாத்தியக் கூறுகள் நம்மிடம் உள்ளது. மனமிருந்தால் மார்க்கமுண்டு. ஆனாலும், ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஓராயிரம் காரணங்கள்.
உத்தேச கணக்காக இந்த உலகம் 460 கோடிகள் ஆனது. இந்த உலகத்தில் முதல் மனிதன் தோன்றி 30 லட்சம் ஆண்டுகள் ஆகி விட்டது. தன்னுடைய பிரச்சனையை உணரத் தொடங்கி, மனிதன் மிருகத்தன்மையில் இருந்து மாறி 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகி உள்ளதாக மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த 50 ஆயிரம் ஆண்டுகள் என்பது ஏறத்தாழ உத்தேச கணக்காக 600 தலைமுறைகள். இதில் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? சற்று ஏறக்குறைய 36 ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வெளி உலகம் ஏதும் தெரியாமல் தன்னுடைய குறைகள் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே வாழ்ந்து கழித்து இருக்கின்றான்.
கடந்த 70 தலைமுறைகளில் தான் எழுத்து, பேச்சு, விவசாயம் போன்ற அத்தனை முன்னேற்றங்களும், குறிப்பாக ஆறு தலைமுறைக்கு முன்னால் தான் அச்சடித்த வார்த்தைகள், எழுத்துக்கள் என்று அத்தனை முன்றேங்களும் நிகழ்ந்துள்ளது. அச்சடித்த வார்த்தைகள் உருவான பின்பு தான் நாகரிகம் என்பது மிக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது. ஆனால் இந்த கால கட்டத்தில் எத்தனை மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகள், எழுத்துக்கள்உருவாகி உள்ளது என்பது யோசித்துப் பாருங்கள்? வாழ்ந்த மக்களை எத்தனை விதமாய் புடம் போட்டு பார்த்து இருக்கிறது.
ஆனாலும் இந்த தமிழ் மொழி இன்று வரையிலும் சுட்ட தங்கம் போல ஜொலிப்பாய் தான் விளங்கிக்கொண்டு இருக்கிறது.
அமெரிக்காவின் மிக உயர்ந்து பொக்கிஷமாக கருதப்படும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல முப்பது மடங்கு பெரிதான பிரமிடுகளை தந்த எகிப்தியர்களின் எகிப்திய மொழி எங்கே போயிற்று?
3000 ஆண்டுகளுக்கு முன்னால் உலகில் சிறந்த மொழி சமஸ்கிருதம் தான் என்று சொல்லப்பட்ட மொழியின் இன்றைய நிலை என்ன ?
மாபெரும் வல்லரசை உருவாக்கிய ரோமபுரி மன்னர்களின் இலத்தின் மொழியை இன்று காணவில்லை?
புத்தர் பரப்பிய பாலி மொழி, மகா அலெக்சாண்டர் பேசிய கிரேக்க மொழி, ஏசு நாதரின் கிப்ரூ மொழி என்று இன்று வரையிலும் நீண்ட பட்டியல் உண்டு.
இவையெல்லாம் காத்திருப்பு பட்டியல் அல்ல? காணாமல் போன மொழிகளின் பட்டியல்? ஆனால் தமிழனின் தமிழ்மொழி?
இன்று வரையிலும் எத்தனையோ வேடதாரிகள் நாங்கள் தமிழை வளர்க்கின்றோம் என்று சொல்லியே தங்கள் குடும்பங்களுக்கான சொத்துக்களை வளர்த்துக்கொண்டார்களே தவிர வேறொன்றும் பெரிதாக நடக்கவில்லை. அவர்களின் உண்மையான அக்கறையை நாம் தினந்தோறும் செய்திதாள்களின் மூலம் பார்த்துக் கொண்டும் இருக்கின்றோம்.
கி.பி. 20ம் நூற்றாண்டில் பொது நூலகங்களின் வளர்ச்சி என்பது மிகவும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்று சொல்லாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நூலக இயக்கம் சிறந்து விளங்குகின்றது நூலகப் பாதையில் இருபதாம் நூற்றாண்டினைப் “பொற்காலம்” என்று குறிப்பிடலாம்.
சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவர். இந்த நூலகம். 1890-ல் மக்களுக்காக, மக்களே, மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டிய ஆளுநர் அவர்கள், 1890 மார்ச் 22ல் ஆற்றிய உரையின் சாரமானது, “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் பெற முடியவில்லை. காரணம் என்ன? படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள் இல்லை. நூல்கள் கொடுத்து உதவும் வகையில் நூலகங்கள் இல்லை என்ற குறையை போக்குகின்ற வகையில் தான், பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் உங்கள் முன் நிற்கின்றேன்” என்றார்.
“படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்றார்.
பிரிட்டிஷ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.
இந்தியாவை ஆள வந்த பிரிட்டன் ஆட்சியாளர்களைப் போல நமது தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா பங்களிப்பு என்பது தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாதொன்றாகும். ஓலைச்சுவடி வடிவிலும், கையெழுத்தேடு வடிவங்களிலும் இருந்த பழங்கால நூல்கள் அச்சில் ஏறுவதற்கு காரணமாக இருந்தவர் உ.வே.சா. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நெடுநல்வாடை என பல பழம் பொக்கிஷங்களும் அழியாமல் பாதுகாத்த பெருமை அவருக்குண்டு.
சமய நூலான சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதி அக்கால கட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள் தூண்டியது.
சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.
அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார் உ.வே.சா போலவே தற்போது தமிழ்நாட்டில் உள்ள புதுக் கோட்டையில் உள்ள ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது துணைவியார் தங்களால் முடிந்த மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறார். ஞானாலயாவைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வலைதளம் உதவுகின்றது.
வலைதள முகவரி http://www.gnanalaya-tamil.com/
தமிழை வளர்க்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை இந்த வலைதளத்தில் கொடுக்கப்பட்ட பல தலைப்புகளின் மூலம் புரிந்து கொள்ள முடியும். கடந்த கலைஞர் ஆட்சியில் சிறப்பான சாதனை என்று வர்ணிக்கப் பட்ட சென்னையில் கோட்டூர்புரத்தில் 180 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் தெற்காசியாவில் மிகப் பெரிய நூலகமாக கருதப்படுகின்றது.
அதுவே இப்போது ஆண்டு கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியினால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திருமணத்திற்கு வாடகை விடும் மண்டபமாக மாற்றி நீதிமன்றத்தால் குட்டு வாங்கியுள்ளது.
கலைஞருக்கு பெருமை சேர்த்த இந்த நூலகம் என்பது எப்படி உருவானது தெரியுமா?
32 மாவட்ட நூலகங்களின் வளர்ச்சிக்காகச் செலவிட வேண்டிய பெரும் பணத்தை அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம் கட்ட முடக்கி விட்டார்கள். ‘அந்தந்த மாவட்ட நூலக வரிப் பணம் அந்தந்த மாவட்டங்களுக்கே செலவழிக்கப்பட வேண்டும்’ என காமராஜர் ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக இருந்த நெ.து. சுந்தரவடிவேலு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவுகள் காற்றில் பறந்துவிட்டன..
ஞானலாயா போன்ற தனிப்பட்ட நபர்களை ஊக்குவித்து வளர்ப்பதை விட தனது நலன் சார்ந்து ஒவ்வொரு விசயத்தையும் பார்ப்பது தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பண்பாடு. மொத்த தமிழ்நாட்டில் உள்ள நூலக வளர்ச்சியை விட ஒரே இடத்தில் முடக்கப்பட்ட இந்த அறிவு சார் சொத்துக்களை பரவலாக்கப்பட வேண்டும். காரணம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர்களின் வாழ்க்கையில் பாதுகாக்கப்பட்ட நூலகங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செலுத்துவது மிகச் சவாலாகவே உள்ளது. ஓரளவுக்கேனும் தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை பாதுகாத்து வைத்திருப்பதை இனவெறி அல்லது படையெடுப்பாளர்களிடமிருந்து அரும்பாடுபட்டு தான் காத்து வந்துள்ளோம். பல சமயம் நூலகங்களை எறியூட்டி மகிழ்ந்துள்ளார்கள்.
1981 ஜுன் 1. யாழ்பாண நூலகம் மொத்த கலவரக்காரர்களால் தீ வைக்கப் பட்டது. உள்ளே இருந்த மொத்த நூல்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல். அரிய சுவடிகள் முதல் ஏராளமான தமிழ் புதையல் அது. ஆசியாவிலேயே முதன்மையானது.
ஆசியாவில் இதற்கு முன்னால் நடந்த கோரச்சுவடுகள்.
போர்த்துகீசியர்களால் (1619) எரிக்கப்பட்ட தமிழ்நாட்டு சரஸ்வதி மகால். 12ம் நூற்றாண்டில் நாலாந்தா பல்கலைக்கழகம்.
ஹிட்லர் படையெடுப்பின் போதுநூலகத்தை தவிர மற்றவற்றை கவனித்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் சிங்கள இன வெறியாளர்கள் ஹிட்லரையும் மிஞ்சி விட்டனர். இது போன்று ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்த கோரத்தையும் தாண்டி தான் இந்த தமிழ்மொழி இன்று வரைக்கும் வளர்ந்து இன்று இணையத் தமிழ் மூலம் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறது.
கிராம, நகர்ப்புற நூலகங்களை, அரசாங்கத்திற்கு வரும் ஆட்சியாளர்கள் சிறப்பான திட்டத்துடன் உதவி செய்வதன் மூலமும், ஞானலயா கிருஷ்ணமூர்த்தி போன்றோர்களுக்கு பொருளூதவி செய்வதன் மூலமும் பலரும் வந்து வாசிக்க வழி வகுக்கும்.
இதேவேளை 'ஞானாலயா'வின் சேகரிப்புகளை புதியதொழிட்பத்தின் அடிப்படையில் ஆவணப் படிவங்களாக்கி, இணையப் பெருவெளியில் இணைப்பதன் மூலம் அதன் சேவை விரிவாக்கம் பெறவும், பாது காக்கப்படவும் முடியும் என்பதனையும் இவ்வாறானபணிகளில் ஈடுபடும் அன்பர்கள் கருத்திலும், கவணத்திலும் கொள்ள வேண்டும்.
தாய் என்பது ஒரு தலைமுறைக்கான பந்தம். தாய் மொழி என்பது தலைமுறைகளை தாண்டிச் செல்லும் பந்தம்.. அந்த மொழியை ஆவணப்படுத்தி வளர்க்க உதவும்
திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளின் முயற்சிக்கு, ஒளிபடைத்த கண்ணினராய், உறுதி மிக்க நெஞ்சினராய் உதவுவோம் வாருங்கள்!
ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்கட்கு;
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=UCJ3XWKeEhw
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article824403.ece
ஞானாலயாவிற்கு நிதி உதவி செய்ய;
வங்கி விவரம்:
Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
Branch Code: IFS CODE UCBA 000112
நிதி உதவி அளிக்க விரும்புவர்கள் இந்த கோடு மூலம் பண பரிவர்த்தனை செய்ய முடியும்.
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059மொபைல்: (0) 9965633140
4தமிழ்மீடியாவிற்காக: ஜோதிஜி திருப்பூர்.