Showing posts with label குமரிமலர். Show all posts
Showing posts with label குமரிமலர். Show all posts

Saturday, 7 July 2012

ஏ.கே.செட்டியார்- முதல் தமிழ்ப் பயணி!

ஏ.கே.செட்டியார்- முதல் தமிழ்ப் பயணி

தமிழில் ஏன் பயண இலக்கியம் இல்லை என்று நீண்ட காலமாக யோசித்து வருகிறேன்.  பயணம் செய்பவர்களுக்கு எழுதத் தெரியவில்லை.  எழுதத் தெரிந்தவர்களுக்கு பயணம் செய்வதற்கான பொருள் வசதி இல்லை. எனக்குப் பிடித்தமான தமிழ் எழுத்தாளர் ஒருவர் அமெரிக்கா சென்றார்.  மூன்று மாதம் தங்கினார் என்றதும் ஆர்வத்துடன் அவரது அனுபவங்களைக் கேட்கத் தயாரானேன்.  ஆனால் அவர் சொன்னது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. எழுத்தாளர் ஒரு நண்பர் வீட்டில் தங்குவார். அந்த நண்பரும் அவர் மனைவியும் திங்கட் கிழமையிலிருந்து வெள்ளி வரை அலுவலகம் சென்று விடுவார்கள்.  அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப நள்ளிரவு ஆகி விடும்.  எழுத்தாளருக்கு அந்த ஒரு வாரமும் வீட்டுச் சிறை. அதிகபட்சம், அந்த வீதியில் நடக்கலாம். நமக்கு வரைபடத்தை வைத்துக்கொண்டு ஒரு இடத்தைக் கண்டு பிடித்துப் பழக்கமில்லை. யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டு செல்வதே நமக்குத் தெரிந்த வழி.  நியூயார்க் போன்ற ஒரு நகரத்தில் அது முடியுமா அல்லது ஒரு டாக்ஸி பிடித்து வெளியில் சென்று ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் அல்லது ரயிலிலோ பஸ்ஸிலோ இன்னொரு ஊருக்குப் போய் வரலாம். ஆனால் அதற்கெல்லாம் கை நிறைய காசு வேண்டும். நம்மூர் பணத்தில் லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு போனாலும் டாலராக மாற்றினால் சில தினங்களே வரும். ஒரு தமிழ் எழுத்தாளனால் வேறு என்ன செய்ய முடியும்?  மூன்று மாதங்கள் வீட்டுச் சிறையில் இருந்த அனுபவத்தை எப்படி அவர் பயணக் கட்டுரையாக எழுதுவார்?

வேறு சில நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் போகாத தேசமே இருக்காது.  ஆனால் எந்த தேசத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது. காரணம், விமானப் பயணம்; தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல். இப்படிச் செய்தால் எப்படி ஒரு தேசத்தை அறிந்து கொள்ள முடியும்? 


சமீபத்தில் Thor Heyerdahl (1914-2002) எழுதிய Kon-Tiki என்ற பயண நூலைப் படிக்க நேர்ந்தது. நார்வே நாட்டைச் சேர்ந்த இவர் சில காலம் உலகின் மிகப் பெரிய சமுத்திரமான பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பாலினேஷிய தீவுகளில் (ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தீவுகள்) ஒன்றான தஹித்தியில் இருந்திருக்கிறார். அப்போது அந்த மக்களின் கலாச்சாரத்தை மானுடவியல் ரீதியாக ஆராய்ந்தார்.  அந்த ஆராய்ச்சியில், அமெரிக்காவை கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே தென்னமெரிக்க ஆதிகுடிகள் பசிஃபிக் பெருங்கடலைத் தாண்டி வந்திருக்கிறார்கள் என்றும், தஹித்தி போன்ற பாலினேஷிய தீவுகளில் வாழும் மக்கள் பெரூவிலிருந்து வந்து குடியேறியவர்களே என்றும் கண்டுபிடித்து இருக்கிறார். அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. 


உடனே பெரூவிலிருந்து தஹித்திக்கு வந்த காலகட்டத்தில் அவர்கள் எப்படி வந்திருப்பார்கள் என்பதை உலகுக்கு நிகழ்த்திக் காட்ட விரும்பினார் தோர் ஹயர்தால்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தஹிதிக்கு வந்த பெரூவிய மாலுமிகள் கட்டியது போலவே ஒரு சிறிய கட்டுமரத்தைக் கட்டினார்.  ஒன்பது பெரிய மரக்கட்டைகள். கட்டையின் நீளம் 45 அடி; அகலம் 2 அடி. ஆக, 45 அடி நீளமும், 18 அடி அகலமும் கொண்ட அந்தக் கட்டுமரத்தை ஒரு ஆணிகூடப் பயன்படுத்தாமல் கயிற்றாலேயே கட்டினார்.  தளத்தில் மூங்கில் கம்புகளைக் கட்டி அதில் பாயை விரித்தார். கட்டுமரத்தின் மத்தியில் மூங்கிலாலேயே ஒரு சிறிய அறை ஒன்றை அமைத்து வாழை இலைகளால் கூரை செய்து கொண்டார். அறையின் அகலம் 8 அடி; உயரம் 14 அடி. அந்தக் கட்டுமரத்துக்கு ‘கோன்-டிகி’ என்று பெயரிட்டு பெரூவிலிருந்து தஹித்திக்கு தன்னுடன் ஐந்து சகாக்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.  திமிங்கலங்களால் ‘கோன்-டிகி’ உருத் தெரியாமல் போய்விடும் என்றும் இன்னும் பலவாறாகவும் அவரை ஏளனம் செய்தார்கள் பலர்.  ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் பயணத்தைத் தொடங்கினார் தோர் ஹயர்தால்.



மொத்தம் 102 நாட்கள். 102-ஆவது நாளில் ஒரு புயலால் கட்டுமரம் சேதமடைகிறது; ஆனால் அதிர்ஷ்டவசமாக அது ஒரு ஆளில்லாத தீவின் கடற்கரை.  அந்தத் தீவில் அவர்கள் சமைப்பதற்காகத் தீ மூட்டிய போது அங்கே மீன் பிடிக்க வந்தவர்கள் அவர்களைக் கண்டுபிடித்து தஹித்திக்கு அழைத்துச் சென்றனர்.  உடனடியாக அவர்களது பயணம் உலக அளவில் கவனிக்கப் பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஹயர்தாலைக் கௌரவித்தார்.  இது நடந்தது 1947-ஆம் ஆண்டு.  அத்தனை அனுபவங்களையும் ஹயர்தால் தன்னுடைய கோன்-டிகி என்ற நூலில் எழுதியிருக்கிறார். கோன்-டிகி என்று தன்னுடைய பயணத்தை சினிமாவாகவும் எடுத்திருக்கிறார். இந்த நூலைப் பற்றியும் தோர் ஹயர்தாலைப் பற்றியும் எனக்கு ஏ.கே. செட்டியாரின் ‘ஐரோப்பா வழியாக’ என்ற நூலைப் படித்த போது தெரிய வந்தது.

ஆனால் தோர் ஹயர்தாலை விட எனக்கு ஏ.கே. செட்டியார் சிறந்த பயணியாகத் தெரிகிறார்.  ஏனென்றால், உலகெங்கும் இனவாதம் மிகக் கடுமையாக நடை முறையில் இருந்த காலகட்டத்தில் பயணம் செய்திருக்கிறார் செட்டியார்.  அவர் செல்லாத நாடே இல்லையோ என்று நினைக்கும் அளவுக்கு உலக நாடுகள் பலவற்றுக்கும் கப்பலிலும், ரயிலிலும், பஸ்ஸிலும், காரிலுமாகச் சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களை 18 புத்தகங்களில் விரிவாக எழுதியிருக்கிறார். எங்குமே அவர் விமானத்தில் செல்லவில்லை. கடல் தாண்டிச் செல்வதாக இருந்தால் கப்பல்; நிலவழி என்றால் ரயில். இப்போதைய விமானப் பயணத்தில் அடுத்த மனிதர்களோடு உறவாட முடியவில்லை.  ஆனால் கப்பல் பயணத்தில் ஒரே இடத்தில் பல தினங்கள் ஒன்றாக இருக்க வேண்டியிருப்பதால் பல தேசங்களைச் சேர்ந்த பலதரப்பட்ட மனிதர்களோடும் உறவாட முடிகிறது. 


1930லிருந்து 1955 வரை 25 ஆண்டுகள் கப்பலிலேயே உலகம் முழுவதும் சுற்றியிருக்கும் ஒருவருக்கு எத்தகைய அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்பதற்கு சான்றாகத் திகழ்கின்றன ஏ.கே. செட்டியாரின் பயண நூல்கள்.  
 

சென்னையிலிருந்து நேபாளம் வரை ரயிலில் சென்ற அனுபவத்தை ஒரு புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.  கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன் ரயில் பயணம் எப்படி இருந்திருக்கும்? பல இடங்களில் இரண்டு மூன்று தினங்கள் கூட ரயில் நிலையத்தில் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கிறார். சமயங்களில் சரக்குப் பெட்டியில் சரக்குகளோடு சரக்காகக் கிடந்து பயணம் செய்திருக்கிறார்.  

இவ்வளவையும் அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் உலகமே கொண்டாடி ருக்கும்.  ஆனால் தமிழில் எழுதி விட்டதால் அவருடைய 18 பயண நூல்களும் 70 ஆண்டுகளாக மறு பதிப்பு இல்லாமல் கிடக்கின்றன.  தமிழர்களின் சுரணை, ணர்வை என்னவென்று சொல்வது?

இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது ஏதோ ஒரு தங்கப் புதையலைப் பார்ப்பது போல் இருக்கிறது. இந்த நூல்களில் காணக் கிடைக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு பத்துப் பேர் உலகப் பயணம் மேற்கொண்டால் பல நூறு அற்புதங்களைக் கண்டு பதிவு செய்யமுடியும்.  மிக முக்கியமாக, உலகிலுள்ள பல்வேறு தேசங்களின் ஊர்களும் வெவ்வேறுபட்ட மக்களும் 60/70 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தனர்; அவர்கள் வாழ்ந்த ஊர் எப்படி இருந்தது என்பதையெல்லாம் இந்த நூல்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.  செட்டியார் ஒரு தேர்ந்த புகைப்பட நிபுணராகவும் இருந்ததால் எல்லாவற்றையும் புகைப்படமாகவும் எடுத்து தன் புத்தகங்களில் இணைத்திருக்கிறார். 


செட்டியாரின் ஐரோப்பியப் பயண நூலில் ஒரு இடம்: 1953-ஆம் ஆண்டு.  இங்கிலாந்தின் New Castle on Tyne என்ற துறைமுக நகரத்திலிருந்து நார்வேயில் உள்ள பெர்கன் என்ற துறைமுகத்துக்கு கப்பல் ஏறுகிறார் செட்டியார். (டைன் நதிக்கரையில் இருப்பதால் முன்பு அப்படி அழைக்கப்பட்ட அந்த நகரம் இப்போது வெறும் நியூகேஸில்). பெர்கனை அடைய கப்பலில் 22 மணி நேரப் பயணம்.  ஐரோப்பா முழுவதுமே சுங்க அதிகாரிகள் அவருடைய பெட்டியைத் திறந்து பார்க்கவில்லை என்று எழுதும் செட்டியார், இந்திய சுங்க அதிகாரிகளிடமும், இந்தியத் தூதராலய அதிகாரிகளிடமும் தான் மாட்டிக் கொண்ட கதைகளைக் கண்ணீர் விட்டு எழுதியிருக்கிறார். அந்த நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது என்பதே என்னுடைய சொந்த அனுபவம்.

 

பெர்கன் துறைமுகத்தில் ஜான் ஹோயம், அவர் மனைவி எல்ஸி இருவரும் செட்டியாரைச் சந்தித்துத் தம் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர்.  இந்த ஜானும் எல்ஸியும் யார்?  1937-ஆம் ஆண்டு - அதாவது, 16 ஆண்டுகளுக்கு முன்பு - செட்டியார் அமெரிக்கா சென்றிருந்தபோது நான்கு மாணவர்களோடு சேர்ந்து 15,000 மைல்கள் (கிலோ மீட்டர் அல்ல) அமெரிக்கா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அப்போது அவருடன் வந்த நான்கு மாணவர்களில் ஒருவர்தான் ஜான் ஹோயம். சுற்றுப்பயணம் செய்த காரும் ஜானுடையதுதான்.  

அதற்குப் பிறகு 1939-ஆம் ஆண்டில் ஒருமுறை நார்வே வந்தபோதும் அவர் ஜானையும் எல்ஸியையும் சந்தித்திருக்கிறார். அந்தத் தம் பதியைத்தான் இப்போது 14 ஆண்டுகள் கழித்து பெர்கனில் மீண்டும் சந்திக்கிறார் செட்டியார்.  அன்று இரவு ஜானின் வீட்டில் 14 ஆண்டுக் கதையை இரவு முழுவதும் இருவரும் பேசுகிறார்கள்.  அப்போது ஜான் தங்களுடைய ஊரில் நாஜிகள் பல யூதர்களைக் குடும்பம் குடும்பமாக விஷவாயுக் கிடங்கில் உயிரோடு போட்டு எரித்தது பற்றிய கொடுங்கதைகளைச் சொல்கிறார்.  இப்போது அதெல்லாம் நமக்கு வரலாறு. ஆனால் செட்டியார் ஜானைச் சந்தித்த அந்த இரவில் அது அவர்களின் சமீபத்திய கொடுந்துயரம். 

பிறகு மறுநாள் காலை ரயில் பிடித்து அன்று மாலையே ஓஸ்லோ வந்து சேர்கிறார்.  பழைய நண்பர்களின் முகவரியைத் தொலைபேசி அட்டவணையைக் கொண்டு கண்டுபிடிக்கிறார். நண்பர்கள் என்றால் தமிழர்கள் இல்லை.  எல்லோரும் அவருடைய தேசாந்திரப் பயணத்தின்போது சினேகிதமான நார்வேக்காரர்கள்.


இப்போது தூரதேசங்களுக்குப் பயணம் செய்யும் எழுத்தாளர்கள் அந்தந்த ஊர்களில் வசிக்கும் தமிழர்களையே சந்தித்து விட்டு வந்து பயணக் கட்டுரை எழுதுகிறார்கள்.  அவர்களுக்குத் தெரிந்த தமிழ் நண்பர்கள்,  வாசகர்கள், தமிழ்ச் சங்கங்கள் என்பதைத் தவிர அந்த எழுத்தாளர்களின் கால்கள் எங்கேயும் நகர்வதில்லை.  தமிழ்ச் சங்கத்தைப் பார்ப்பதற்கா 14,000 கி.மீ. தாண்டி நியூயார்க் வரை செல்லவேண்டும்? இங்கேயே மும்பை அல்லது தில்லியில் இருக்கும் தமிழ்ச் சங்கத்துக்குச் செல்லலாமே? கடல் கடந்து சென்று அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் மாட்டியிருக்கும் திருவள்ளுவர் படத்தைப் பார்த்துவிட்டு வருவது தமிழர்களுக்கே உள்ள பிரத்தியேக குணம் என்று நினைக்கிறேன்.  


உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் தாங்கள் வாழ்கின்ற நாட்டு மக்களோடும், அங்குள்ள கலாச்சாரத்தோடும் தங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டு வினையாற்றுவதில்லை.  எங்கே இருந்தாலும் தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள், தமிழ் ஜனரஞ்சகப் பத்திரிகைகள், எந்திரன் சினிமா என்றே அவர்களின் வாழ்க்கை முடிந்து போகிறது.  இதற்குத் தமிழ் எழுத்தாளர்களும் விதிவிலக்காக இல்லாமல் நியூயார்க் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்று வந்ததையெல்லாம் பயணக் கட்டுரையாக எழுதுகிறார்கள். 

இந்தத் தமிழ்ச் சங்கக் கதையெல்லாம் ஏ.கே. செட்டியாரின் பயண நூல்களில் இல்லை. அவர் எழுதியிருக்கும் நூற்றுக் கணக்கான பயண அனுபவங்களில் அவர் ஒரே ஒரு இந்தியரைத்தான் சந்திக்கிறார். அவர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ். 





ஒவ்வொரு நாட்டிலும் தங்கி, அந்த மக்களோடு உறவாடி, பேசிப் பழகி எழுதியதால் ஏ.கே. செட்டியாரின் பயண நூல்கள் விசேஷமான கவனத்துக்கு
ரியவை ஆகின்றன. நார்வேஜியர்கள் அடிப்படையில் மிகவும் நல்லவர்கள்; அங்கே ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் மிகவும் குறைவு; பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கம்; உழைப்பாளிகள்; உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று கூறும் செட்டியார், அவர் சென்றிருந்த சமயத்தில் நார்வேஜிய மக்கள் இந்தியாவுக்குச்  செய்த ஒரு பெரிய உதவி பற்றியும் குறிப்பிடுகிறார்.  நார்வேஜிய மக்கள் தங்களுக்குள் பத்து லட்சம் ரூபாய் வசூலித்து மீன் பிடிக்கும் தொழிலில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை இந்தியாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.  ஆழ்கடலில் மீன் பிடிப்பதில் மிகுந்த திறமை கொண்டவர்கள் நார் வேஜியர்கள். 32 லட்சம் ஜனத்தொகை உள்ள நார்வே 36 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவுக்கு எந்தப் பிரதி பலனும் கருதாமல் செய்த உதவிக்கு இந்தியா என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது” என்கிறார் செட்டியார்.

செட்டியார் கூறும் வேறு சில தகவல்களும் சுவாரசியம் மிகுந்தவை.  ஒன்றே கால் லட்சம் சதுரமைல் கொண்ட நார்வேயில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 2 லட்சம். உலகிலேயே அதிகமாகப் புத்தகம் படிப்பவர்கள் நார்வேஜியர்கள்.  உலகின் அற்புதங்களில் ஒன்றான த்ரோந்தியம் (Trondheim) என்ற நார்வேஜிய நகரத்துக்குச் சென்றபோது நள்ளிரவில் சூரியனைப் பார்த்தது பற்றி எழுதுகிறார். குளிர் காலத்தில் மைனஸ் பத்து செல்ஷியஸ் கொண்ட அந்த ஊரில்தான் சர்வதேசப் புகழ்பெற்ற நடிகை லிவ் வுல்மன் வாழ்ந்தார். மற்றொரு நார்வே நகரமான போடோ பற்றி ஒரு விபரம்  சொல்கிறார் செட்டியார்.  அந்த நகரில் ஜூன் 2 முதல் ஜூலை 10 வரை நள்ளிரவில் சூரியனைப் பார்க்கலாம்.  அதே போல் டிசம்பர், ஜனவரியில் சூரியனை அறவே பார்க்க முடியாது. இவ்வளவையும் 1939-இல் நேரில் பார்த்து எழுதுகிறார் செட்டியார். 


உலகப் போர்களைப் பற்றியும், அதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் ஆய்வு செய்பவர்களுக்கு செட்டியாரின் நூல்கள் மிக முக்கியமான ஆவணமாக இருக்கும்.  ஐம்பதுகளின் ஐரோப்பா பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார் செட்டியார். 1953-இல் ட்ரினிடாடிலிருந்து கப்பலில் புறப்படுகிறார்.  எட்டாவது நாள் இங்கிலாந்தின் ப்ளிமத் (Plymouth) என்ற துறைமுக நகருக்கு வந்து சேர்கிறார்.  அக்டோபர் மாதக் குளிர்.  எங்கே தங்குவது என்று புரியவில்லை.  அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அப்போது நிறப்பாகுபாடு கடுமையாக இருந்திருக்கிறது.  கறுப்பு நிறத்தவரான செட்டியாருக்கு எளிதில் தங்க இடம் கிடைப்பதில்லை.


ஒவ்வொரு முறை இங்கிலாந்து வரும் போதும் இதுதான் பெரிய பிரச்சினை என்று எழுதுகிறார்.  அப்படியானால் 1953-க்குள் எத்தனை முறை இங்கிலாந்து வந்திருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  

ப்ளிமத்திலிருந்து ரயிலில் லண்டன் வந்து எங்கே தங்குவது என்ற கவலையுடன் சாலையைக் கடப்பதற்காக பிக்காடில்லி சதுக்கத்தில் நின்று கொண்டிருக்கும்போது இந்தியரைப் போல் தோற்றமளித்த ஒருவர் செட்டியாரிடம் வந்து பேசுகிறார்.  செட்டியாரின் கையில் வைத்திருந்த பையிலிருந்த கப்பலின் அடையாளச் சீட்டில் ட்ரினிடாடின் பெயர் இருக்கிறது.  அந்த இளைஞர் அது பற்றிக் கேட்கிறார்.  பிறகு அவர் செட்டியாரோடு சிநேகமாகிறார்.  காமரான் கார்டிஸ் என்ற அவர் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த செயிண்ட்வின் சென்ட் தீவைச் சேர்ந்தவர். அவர் பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்து அந்தத் தீவில் குடியேறியவர்கள்.

காமரான் அவரை நிறவேற்றுமை அதிகமில்லாத கில்போர்டு வீதியிலுள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். தான் கொஞ்சம் பழுப்பு நிறம் என்பதால் தப்பியதாகவும், நீக்ரோவாக இருந்தால் (அப்போது நீக்ரோ என்ற வார்த்தைதான் பழக்கத்தில் இருந்தது) தங்கும் அறை கிடைப்பது சாத்தியமே இல்லை என்றும் எழுதுகிறார் செட்டியார்.  தினம் ஒன்றுக்கு பதினான்கரை ஷில்லிங்கில் அங்கே ஒரு அறை கிடைக்கிறது. அறைக்குள் கனப்பு அடுப்பு இல்லை. ஒரே குளிர். குளிப்பதற்கும் வெந்நீர் இல்லை.  உடைந்த நாற்காலிகள்.  ஆடுகின்ற மேஜை.  எல்லாம் விக்டோரியா மகாராணி காலத்தில் வாங்கியவை போலும் என்று கிண்டலடிக்கிறார்.  மேலும் எழுதுகிறார்:


“கீழ் வீட்டில் சமையலறை. அங்கிருந்து தான் பலகாரம் மேல் வீட்டுக்கு வர வேண்டும். அதற்குக் கிணற்றில் தண்ணீர் இறைப்பது போல் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  கீழ் வீட்டில் ஒரு பெரிய மரப்பலகையில் பலகாரத்தை வைத்து உரக்கக் கத்தினார்கள். மேல் வீட்டில் சாப்பிடும் இடத்திலுள்ள வேலைக்காரப் பெண் தண்ணீர் இறைப்பது போல் கயிற்றை இழுத்தாள்.  மேலே வந்த பலகாரங்களை எடுத்துப் பரிமாறினாள். எச்சில் தட்டுகளை அதே பலகையில் வைத்துக் கீழ் வீட்டுக்கு அனுப்பினாள்.


மேலே இருந்தபடியே யார் யாருக்கு என்னென்ன பலகாரம் வேண்டும் என்று கீழே இருந்தவர்களிடம் அப்பெண் உரக்கக் கத்தினாள்.  அதுவும் தவிர அவள் கொண்டு வந்த தட்டு, கத்தி, கரண்டி, முள்கரண்டி எல்லாவற்றிலும் எண்ணெய்ப் பசை இருந்தது.  சுவையற்ற உணவுக்குப் பேர் பெற்றது இங்கிலாந்து.”


இங்கிலாந்து பற்றிய இப்படி ஒரு சித்திரத்தை நாம் வேறு எங்காவது படித்திருக்க முடியுமா?  தாமஸ் ஹார்டியின் நாவல்கள் தவிர வேறு எதுவும் எனக்கு ஞாபகம் வரவில்லை. ஆனால் ஹார்டியின் இங்கிலாந்து, செட்டியார் சித்தரிக்கும் இங்கிலாந்துக்கு 50 ஆண்டுகள் முற்பட்டவை. 




செட்டியாரின் இங்கிலாந்து இரண்டாம் உலகப் போரின் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம் அது.  1953-இல்தான் இங்கிலாந்தில் உணவுப் பங்கீட்டு முறையை நீக்கியிருந்தார்கள். அதுவரை எல்லாம் ரேஷன்தான். ஆங்கிலேயர்கள் சாப்பிட்டபின் டிப்ஸ் கொடுக்கும் வழக்கமுடையவர்கள் என்பதால் செட்டியார் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுத்ததும் அதை வாங்கிய பெண் மிகவும் அதிசயித்துப் போய் பலமுறை அவருக்கு நன்றி சொன்னதைப் பதிவு செய்கிறார். கில்போர்டு தெரு ஓட்டலில் செட்டியாருக்குப் பக்கத்து அறையைச் சேர்ந்த ஒரு ஆங்கிலேயர் அன்றைய இங்கிலாந்து வாழ்க்கையைப் பற்றிக் கூறிய ஒரு பதிவு இது:


“பஞ்சாப் மாகாணத்தில் பல ஆண்டுகள் உத்தியோகத்தில் சௌகரியமாக இருந்தேன். பங்களா, மூன்று வேலைக்காரர்கள்.  இப்போது லண்டனில் ரயில் இலாகாவில் வேலை செய்கிறேன். வாரம் ஐந்தரை பவுன் சம்பளம். அதைக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியவில்லை. தினந்தோறும் இரண்டு வேளைதான் சாப்பாடு. பகலில் சிறு ரொட்டியும் தேத்தண்ணீரும்தான் ஆகாரம். மாதத்துக்கு ஒருமுறைதான் படக்காட்சிக்கு செல்ல முடியும்.  நல்ல உடை வாங்குவதற்கு ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வருகிறேன். ஆங்கிலேயர் தவறு செய்து விட்டனர். இந்தியாவை விட்டு வந்திருக்கக் கூடாது. இந்தியாவை விட்டு வந்ததால் என்னைப் போல் எத்தனையோ ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது.”


இதைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியது இதுதான்: அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்த இங்கிலாந்து இன்று எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பதும், இந்தியா இந்த 60 ஆண்டுகளில் எந்த அளவுக்கு சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் சீரழிந்து விட்டது என்பதும்தான்.


இதேபோல் ஒருமுறை செட்டியார் டென்மார்க்கிலிருந்து ரயிலில் ஜெர்மனி வழியாக ஹாலந்திலுள்ள ரோட்டர்டாம் நகருக்குச் செல்கிறார். எட்டு பேர் அமரக்கூடிய மிக வசதியான அந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியில் செட்டியாரின் சக பயணிகள் ஐந்து பேர். அதில் ஒரு டேனிஷ்கார இளம் பெண்ணும் இருக்கிறாள்.  கிராமத்தில் பிறந்து, உயர்நிலைப்பள்ளிவரை படித்தவள்.  அவளுக்குப் பல மொழிகள் தெரிந்திருக்கிறது. செட்டியாரிடம் சரளமான ஆங்கிலத்தில் அவள் தன் கதையைச் சொல்கிறாள். அவளுக்கு ஊர் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசை. உத்தியோகத்துக்குச் சென்றால் போதுமான வருமானம் கிடைக்காது.  அதனால் ஸ்விட்ஸர்லாந்தில் சூரிச் நகரில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் சமையல் வேலை செய்கிறாள். உணவும் தங்குமிடமும் இலவசம் என்பதால் சம்பளப் பணத்தை சேமித்து வைத்து இத்தாலி, ஃப்ரான்ஸ் முதலிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறாள். 


இப்படி ஒரு வாழ்க்கை முறை இந்தியாவில் அந்த வேலையைச் செய்யும் ஒருவருக்கு - ஏன், அரசாங்க வேலையில் இருப்பவருக்குக் கூட - சாத்தியமாகுமா என்று யோசித்தேன்.


இப்படி சிறு சிறு உரையாடல்களின் வழியாக ஒரு தேசத்தைப் பற்றிய மனச் சித்திரத்தை உருவாக்குகிறார் செட்டியார். "நான் ஜெர்மனி சென்றிருந்தபோது அந்த நாட்டை ஒரு ஆசாரமான அக்கிரகாரம் போல் இருக்கிறது என்றும், அந்தக் காற்றிலேயே ஒருவித இறுக்கம் தெரிகிறது என்றும், திரும்பி ஃப்ரான்ஸ் வந்ததும்தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது என்றும் எழுதினேன். புரட்சி என்றால் கூட அதற்கும் டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் அதில் கலந்து கொள்வார்கள் ஜெர்மன்காரர்கள் என்பது லெனினின் புகழ்பெற்ற ஒரு வாக்கியம்". 


அந்த ரயில் பயணம் பற்றிய குறிப்புகளில் மற்றொன்று இது:

“ரயில் ஹாம்பர்க்கை அடைந்தது. எங்களுடன் இருந்த ஆடவர் இறங்கி விட்டார்.  ரயில் நிலையத்தில் தேர்த் திருவிழா மாதிரி ஏராளமான கூட்டம். பிரயாணிகள் நெருக்கியடித்துக் கொண்டு ஏறினர்.  மிகக் கனமான சாமான் பெட்டிகளைப் பின்னால் உள்ள சாமான் வண்டியில் போடாமல் எங்கள் பெட்டியிலேயே வைக்க முயன்றனர்.


அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டதும் பெண்கள் மிகவும் பயந்தவர்களாய் “தயவுசெய்து எங்கள் இடத்துக்குப் பக்கத்தில் உட்காருங்கள். ஜெர்மானியர் வருகிறார்கள்” என்றனர்.


“ஏனம்மா, ஜெர்மானியர் உங்கள் அண்டை நாட்டார்தானே? ஏன் பயப் படுகிறீர்கள்?” என்றேன்.


“உங்களுக்குத் தெரியாது.  அவர்கள் மிகவும் மிருகத்தனமாய் நடந்து கொள்வார்கள். அவர்களைக் கண்டாலே பயமும் வெறுப்பும் உண்டாகிறது” என்றாள் ஒரு பெண்.




“அவள் கூறியதில் எந்தத் தவறும் இல்லை” என்று சொல்லும் செட்டியார், அதற்கடுத்து அந்தப் பெட்டியில் நடந்த சம்பவங்களை சுவையாக விவரிக்கிறார். பாஸ்போர்ட்டை சோதிக்க வந்த ஜெர்மன் அதிகாரிகள் 'தேங்க் யூ’ சொல்வதே ஏதோ சண்டைக்கு அறைகூவுவது போல் இருந்தது என்றும், ஜெர்மானியர்கள் ஏதோ எந்திரங்களைப் போல் இருந்தனர் என்றும் கூறும் செட்டியார்,  பிறகு தன் பெட்டியில் இருந்த ஜெர்மானியர்களை ‘ஹெயில் ஹிட்லர்’ என்று கூறி சிரிக்க வைத்ததாக எழுதுகிறார்.


பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஜெர்மானிய அனுபவமும் செட்டியாரின் அனுபவத்திலிருந்து சற்றும் மாறுபடாமல் இருந்தது.  மிக மோசமான நிறவெறி, நியோ நாஜிகளின் வன்முறை ஆகியவற்றை நான் ஜெர்மனியில் நேரடியாகப் பார்த்தேன். 


நாற்பதுகளில் செட்டியார் மேற்கொண்ட இலங்கைப் பயணம் அவருடைய உலகப் பயணங்களிலேயே பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டியதாகும். 70 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணமும், மற்ற தமிழ்ப் பகுதிகளும், தமிழ் வாழ்க்கையும் எப்படி இருந்தன என்பது பற்றி இன்றைய ஈழத் தமிழர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. அவர்களுக்கு செட்டியாரின் இலங்கைப் பயண நூல் மிக முக்கியமான ஆவணமாகப் பயன்படும்.  பின்னாளில் சிங்கள இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும் ஏற்பட்ட பகைமைக்கும் முரண்பாடுகளுக்குமான காரணங்களையும் செட்டியாரின் இந்த நூலில் நம்மால் கண்டுகொள்ள முடியும். 


படங்கள் உதவி : ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி


Thanks and courtesy : http://srbc2010.blogspot.in/2010/11/blog-post_11.html 

தமிழில் பயண நூல்கள் ஏனில்லை என்ற கேள்வியோடு ஆரம்பித்து, ஏகே செட்டியாருடைய பயண நூல்களைத்தொகுத்து இவ்வளவு அற்புதமான விமரிசனக் கட்டுரையை எழுதியவர் பெயர் விவரம் எதுவும் தெரியவில்லை. தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தால், அதையும் இங்கே இணைத்து விடலாம்!

 

Wednesday, 4 July 2012

'உலகம் சுற்றும் தமிழர்’ ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் சொற்சித்திரம்!



'உலகம் சுற்றும் தமிழர்’ என்றவுடன் நம் நினைவுக்குச் சட்டென வருபவர் - அ.கரு.செட்டியார் என்னும் பெயருடைய ஏ.கே.செட்டியார் அவர்களே. இவர் உலகத்தைச் சுற்றியது எதற்காக? பயணம் செய்து பல நாடுகளைப் பார்த்து மகிழவேண்டும் என்பதற்காகவா?

இல்லவே இல்லை; வாழ்விக்க வந்த காந்தி மகாத்மாவின் வரலாற்றுக்குரிய வாழ்க்கைச் சம்பவங்களைச் செய்திப் படமாக்கிச் சிறப்பிக்க வேண்டும் என்ற தணியாத ஆவலே இவரைத் தரணியை வலம் வரச் செய்தது.



‘உலகத்தினர் இந்தியாவை மதிப்பதற்குக் காரணமே காந்தியடிகள்தான்’ என்ற கருத்தை அவர் அறிந்து வைத்திருந்ததினாலேதான் இவர் காந்தியைப் பற்றிய செய்திப்படம் தயாரிக்க உலகம் முழுதும் சுற்றினார். ‘‘உலகம் சுற்றும் தமிழன்’’ என்ற பயண நூலையும் எழுதினார்.

மேல்நாடு என்றால் இங்கிலாந்து மட்டுமே என்றிருந்த பிரிட்டிஷ் அரசாட்சிக் காலத்தில் அமெரிக்காவிற்குப் போய்வந்த புரட்சிவீரர் இவர். கொழுத்த பணக் காரர்கள்தான் மேல்நாடு பயணம் செய்ய முடியும் என்கின்ற காலகட்டத்தில்-சராசரி வகுப்பைச் சேர்ந்த செட்டியார் வெற்றிகரமாக உலகைச் சுற்றி வந்தது ஒரு சாதனையே.

இந்திய அரசு செய்திப்படம் ஒன்று எடுப்பதற்கு முன்னரே மகாத்மா காந்தியைப் பற்றிய புகைப்படங்களை எல்லாம் பாடுபட்டுச் சேகரித்து டாக்குமெண்டரியாகத் தொகுத்த முன்னோடி. 

‘குமரிமலர்’ என்ற மாத இதழை இலட்சியப் பிடிப்போடு 40 ஆண்டுகள் நடத்திய பத்திரிகையாளர். இப்படி இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.இவர் பிறந்தது 3.11.1911 இல் கோட்டையூரில்; இவர் மறைந்தது 10.9.1983 இல் சென்னையில். பள்ளிப் படிப்பு 8 ஆண்டுகள் (1920 - 1928) திருவண்ணாமலையில் இரங்கூனில் ‘தனவணிகன்’ என்ற இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று குறைந்த காலம் பணியாற்றினார். இளமையிலேயே தமிழில் கதை,கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவராகத் திகழ்ந்தார்.

1928 இல் எஸ்.எஸ்.வாசன் நடத்திய ஆனந்த விகடனில் ‘சாரதாம்பாள்-சிறுதமாஷ்’ என ஒரு சிறுகதையை இவர் எழுதினார். இவர் எழுதிய முதல் கதையும் இதுதான்;கடைசிக் கதையும் இதுதான்.ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த கதையைத் தழுவி அதனை எழுதினார்.

1936 ஆம் ஆண்டு, புகைப்படப் படிப்பின் பொருட்டு ‘ஜப்பான்’ சென்றார். படிப்பு முடிந்ததும் ‘பர்மா’ வந்தார். அப்போதுதான் தமது முதல் பயண நூலான ‘ஜப்பான்’ என்ற நூலை இவர் எழுதி இரங்கூனில் வெளியிட்டார். பின்னர் இந்த நூல், ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டது.

இந்த நூலின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அமெரிக்கா சென்றார். அங்கே பகுதி நேர வேலை செய்து புகைப்படத் தொழில் பற்றிய மேல் படிப்பைத் தொடர்ந்தார். தமது ஜப்பான் பயண அனுபவத்தை நூலாக எழுதினார்.


தமது முதல் நூலான ‘ஜப்பான்’ முன்னுரையில் ‘‘ஒரு நாட்டைப் பற்றி எழுதுவது என்றால் - அந்நாட்டில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தங்கி, அந்நாட்டு மொழியை நன்கு பயின்று, அந்நாட்டு மக்களோடு நெருங்கிப் பழகுதல் வேண்டும். ஆனால், நான் ஜப்பானில் தங்கி இருந்தது ஒரு மாத காலம்தான். நுனிப்புல்லை மேய்வது போன்ற இந்நிலையில், நான் அதிகம் எழுத முடியாது என்றாலும்,ஜப்பானைப் பற்றித் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலேயே இந்நூலை எழுத முன் வந்தேன்!’’ என்று திறந்த மனத்தோடும் பொறுப்புணர்ச்சியோடும் இவர் எழுதினார்.

2.10.1937 இல் - நியூயார்க்கிலிருந்து டப்ளினுக்கு ‘சமரியா’ என்னும் கப்பலில் இவர் பிரயாணம் செய்தார். அப்போது, கப்பலில் பிரயாணம் செய்தவர்கள் காந்திஜியின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 2.10.1937 என்பது காந்தியின் 68வது பிறந்த நாள் ஜெயந்தி அல்லவா!

இந்த காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட இவருக்கு,அப்போது ஒரு எண்ணம் உதித்தது. ‘புகைப்படத் தொழில் படிப்புப் படித்தவனாகிய நான், ஏன் காந்திஜி பற்றிய செய்திப்படம் ஒன்றைத் தயாரிக்கக் கூடாது?’ இந்த எண்ணம் இவருக்குத் தோன்றியவுடன் இவருக்கு காந்திப் பைத்தியம் பிடித்துவிட்டது.

அதே நினைவாக மூன்றாண்டுகள் உழைத்தார்.இந்தியாவைச் சுற்றிப் பல முறைகள் பயணம் செய்தார். உலகத்தின் பாதி நாடுகளுக்குக் கப்பலில் பயணம் செய்தும்,விமானத்தில் சுற்றிப்பறந்தும் வந்தார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பயணம் செய்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட செய்திப்பட கம்பெனிகளுக்குச் சென்று வந்தார். அவர்களோடு கலந்து ஆலோசித்தார்.

இப்படியாகக் கடுமையாக உழைத்து - முதலில் 50,000 அடி காந்திப்படம் எடுத்தார். பிறகு அதிலிருந்து 12,000 அடியில் காந்தி செய்திப் படத்தை உருவாக்கினார்.

இப்படத்தைத் தயாரிக்க நான்கு கண்டங்களில் இவர் இலட்சம் மைல் பிரயாணம் செய்தார்;பற்பல செய்திப் பட கம்பெனிகளில் ஏறி இறங்கினார்; ஒரு நூறு கேமராக்காரர்கள் எடுத்த படங்களைச் சேகரித்தார்.

ரோமன்ரோலந்து, போலிக் போன்றவர்களைப் பேட்டி கண்டார். காந்தி பற்றிய உலக அறிஞர்களின் கருத்தைக் கேட்டறிந்தார். அவற்றையெல்லாம் உரிய இடத்தில் இணைத்து ‘மகாத்மா காந்தி’ செய்திப்படத்தை 24.08.1940இல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முதலில் வெளியிட்டார். இந்தப் படத்தை 1952 இல் மீண்டும் ஆங்கிலப் பின்னை உரையுடன் தயாரித்தார். காந்தியின் புகழைப் பரப்பினார்.

மகாத்மா காந்தி உடலுடன், உயிருடன், உள்ளத்துடன் வாழ்ந்தபோது, அவருக்குச் செலுத்தப்பட்ட ஒரு தமிழனின் மகத்தான காணிக்கையாக இச்செய்திப் படம் ஏ.கே.செட்டியாரால் இந்தியாவிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டது.இதற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளலாம்.
இத்தகு சாதனையைச் செய்த செட்டியாரின் நூற்றாண்டு விழாவினை மத்திய அரசும்,மாநில அரசும் கொண்டாட வேண்டும் என்பதை அரசியல்வாதிகளுக்கு நான்,அப்போதைக்கு இப்போதே நினைவுபடுத்துகின்றேன். 2011இல் இவருடைய நூற்றாண்டு வருகிறது அல்லவா!

மகாத்மா காந்தி பற்றிய செய்திப்படத்தை எடுப்பதற்காகவே உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். அதன் விளைவே இவர் பயண நூல்கள் பலவற்றை எழுதக் காரணமாக அமைந்தது. பயண நூல்களின் முன்னோடியாக இவர் போற்றப்படுகிறார்; புகழப்படுகிறார்.


ஆம்! "இன்று எத்தனையோ விதமான பயண நூல்கள் வெளியாகின்றன. ஆனால், இலக்கியமாய் மதிக்கக் கூடிய பிரயாண நூல் வடிவெடுத்தது சந்தேகமின்றி ஏ.கே.செட்டியாரின் பேனாவில் தான் என்பதைப் பாரபட்சமில்லாத நெஞ்சங்கள் ஒப்புக்கொள்ளும்!"என்று அறிஞர் கி.சந்திரசேகரன் எழுதுகிறார்.

மாதப்பத்திரிகையான ‘குமரிமலர்’ தோன்றியது இரண்டாம் உலகப் போர்க் காலமான 1943இல். அந்நாளில் புதிதாக பத்திரிகை தொடங்க ஆங்கில அரசு அனுமதிக்காது என்பதனால் இங்கிலாந்து நாட்டில் வெளியான  பெங்குவின் ரீடர்  கட்டுரைக் களஞ்சியத்தைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ‘குமரிமலர்’ மாதம் ஒரு புத்தகமாக மலர்ந்தது.

தமிழில் முதன்முதலாக போட்டோ ஆப்செட் முறையில் படங்களையும், விளம்பரங்களையும் - அசோசியட் பிரஸ்ஸின் உதவி கொண்டு குமரிமலர் - தனது ஆண்டு மலரில் வெளியிட்டது. உலக மகாயுத்தத்தின் காரணமாக தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் திருக்கழுக்குன்றத்தில் வசித்த போது,அவருடைய அருமையான புகைப்படத்தை குமரிமலர் வெளியிட்டது. ஐயர் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் அதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘குமரிமலர்’ 1943 ஏப்ரல் முதல் 1983 ஏப்ரல் வரை ஏறக்குறைய 40 ஆண்டுகள் நடைபெற்றது. இடையில் 1.4.1945 முதல் 1.1.1946 வரை குமரிமலர் வெளிவருவது தடைப்பட்டது.மீண்டும் 1.2.1946 இல் வரத்தொடங்கியது. ஏ.கே.செட்டியார் வெளிநாடு சென்றபோது, அறிஞர் வெ.சாமிநாத சர்மா ஆசிரியப் பொறுப்பேற்று குமரிமலரை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் சுற்றிய தமிழரான ஏ.கே.செட்டியார் எழுதிய நூல்கள் இருபதிற்கு மேலாகும்.அவற்றில் சக்தி கோவிந்தன் பதிப்பகத்தாராலும் மற்றும் டி.வி.எஸ்.நிறுவனத்தாராலும் சில நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இனி இவர் எழுதிய நூல்களின் பட்டியலைக் காண்போம்.

1. ஜப்பான் (1936), 2. திரையும் வாழ்வும் (1943), 3. பிரயாணக் கட்டுரைகள் (1947), 4. மலேயா முதல் கானடா வரை (1955), 5. அமெரிக்க நாட்டில் (1956), 6. கரிபியன் கடலும் கயானாவும் (1957), 7. உலகம் சுற்றும் தமிழன் (1958), 8. அண்டை நாடுகள் (1958), 9. ஐரோப்பா வழியாக (1961), 10. இட்டபணி (1962), 11. குடகு (1967), 12. புண்ணியவான் காந்தி (1969).

பின்வருபவை சக்திமலர் வெளியீடுகள்.இவை சக்தி வை.கோவிந்தனால் வெளியிடப்பட்டவை ஆகும்.

1. ஜப்பான் (1940),

2. உலகம் சுற்றும் தமிழன் (1940),

3. அமெரிக்கா (1940) பின்வருபவை - இலவச வெளியீடுகளாக டி.வி.எஸ்.நிறுவன உதவியுடன் பள்ளி,கல்லூரி நிறுவனங்களுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன.

1. உணவு, 2. பண்பு, 3. கொய்தமலர்கள், 4. அவ்வையார்

பின்வருபவை - ஏ.கே.செட்டியாரால் விழாக்களின் போது தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை. இவைகளும் இலவச வெளியீடுகளே ஆகும்.

1. புத்தகம், 2. திருமணம்

இவற்றைத் தவிர - ஏஷியன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் - என்ற சென்னை நிறுவனம் இவருடைய தொகுப்பு நூலான ‘பயணக்கட்டுரைகள்’ என்ற நூலை 15.08.1968இல் வெளியிட்டுள்ளது. சென்ற 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பற்றி தமிழர் எழுதிய 140 பயணக் குறிப்புகளையும், கட்டுரைகளையும், பாடல்களையும் பழைய தமிழ் நூல்களிலிருந்தும், தமிழ் பத்திரிகைகளிலிருந்தும் இயன்ற அளவு திரட்டி இந்நூலில் ஏ.கே.செட்டியார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேயா முதல் கானடா வரை

இந்த நூல் ஏப்ரல் 1955 இல் வெளிவந்தது, 231 பக்கங்கள். நாற்பது மாதங்கள் வெளிநாடுகளில் பயணம் செய்த செட்டியார்,நான்கு புத்தகங்கள் வெளியிட எண்ணினார். இந்த நூலை முதலில் எழுதினார். தனது நண்பர்கள் வீட்டில் தங்கியபோது, திருப்பூரில் இந்த நூலை எழுதினார்.

உலகத்தின் பல நாடுகளில் பிரயாணம் செய்த போது ஜாதி, மதம், நிறம், மொழி என்கின்ற பேதம் இல்லாமல்,மனிதனை மனிதனாக நினைத்து, மதித்து,அன்போடு உபசரித்து,அரிய உதவிகள் புரிந்து எண்ணற்ற அன்பர்களுக்கு நன்றி.எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவனின் அருளுக்கு நன்றி என இந்த நூலின் முன்னுரையில் இவர் எழுதியுள்ளார்.

கரிபியன் கடலும் கயானாவும்

நாற்பது மாதங்கள் வெளிநாடுகளில் பயணம் செய்த செட்டியார் அந்த அனுபவம் பற்றி நான்கு நூல்கள் எழுதத் திட்டமிட்டார் அல்லவா? அந்த வரிசையில் மூன்றாவதாக எழுதப்பட்ட புத்தகம் இது.இதை 14.03.1957இல் வெளியிட்டார். 92 பக்கங்கள்; 16 படங்கள் தமது நூல்களில் படங்கள் இல்லாமல் செட்டியார் எந்த நூலையும் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலில் கயானாவைப் பற்றியும்,அங்கு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்குக் காரணமான பின்னணிச் சம்பவங்களையும் விளக்கமாக எழுதியுள்ளார். கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் வாழும் நமது மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவே இப்புத்தகங்களை எழுதியதாக ஏ.கே.செட்டியார் கூறுகிறார்.

பஹாமத்தீவுகள் - ஜமைக்கன் - பார்படோஸ் - டிரினிடாட் - பிரிட்டிஷ் கயானா - சூரிணம் - வெனிஸுவோல் ஆகிய பகுதிகளைப் பற்றி விரிவாகவும் அங்குள்ள தமிழர்கள் பற்றியும் சுவைபடக் கூறுகிறார்.

மலேயா - இந்தோனேஷ்யா - பாலித்தீவு ஜோக்ள காந்தா சுமத்ரா - ஆஸ்திரேலியா - பிஜித்தீவு - கானடா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அனுபவங்களையும், அங்கு தாம் கண்ட காட்சிகளையும், மக்களின் நடை, உடை, பாவனை, உணவு, பழக்க வழக்கங்களையும் விரிவாக எழுதியுள்ளார்.

இந்த நூலுக்கு வேறு எந்த நூலுக்கும் எழுதாத அளவு பதினேழு பக்கங்கள் மிக நீண்ட முன்னுரையை இவர் எழுதியுள்ளார்.இந்நீண்ட முன்னுரையானது இப்பயணங்களின் முக்கியத்துவத்தையும் இவர் கொண்ட பெருமிதத்தையும் வெளிப்படுத்துகின்றன என்றே சொல்லலாம்.

‘‘இப்புத்தகத்தில் உள்ளதெல்லாம் உண்மை என்று சொல்ல வேண்டாம். என்னால் காணப்பட்ட காட்சிகளே ஆகும். ஒவ்வொருவரும் உண்மையைத் தத்தமக்குத் தெரிந்தவாறு உணருகின்றனர். உண்மையை வரையறுத்துக் கூறுவது கடினம். கடவுள் ஒருவரே உண்மை!’’ என்று இவர் கூறுகிறார்.

இந்த வையத்தில் எத்தனையோ பேர் பிறந்து மறைகிறார்கள். ஆனால் ஒரு சிலரே தாங்கள் வாழ்ந்த காலத்தின் அடிச்சுவடுகளைப் பிறருக்குப் பயன் படும்படியாக விட்டுச் செல்கிறார்கள். அப்படி எண்ணக்கூடிய சிலரில் ஒருவர் புண்ணியவான் ஏ.கே.செட்டியார் அவர்கள்.

சுய விளம்பரத்தை என்றுமே விரும்பாத இவர் தமது புகைப்படத்தைக் கூட பத்திரிகைகளுக்குத் தந்ததில்லை. புகழையும் வேண்டாத புனிதராகப் பொலிந்தார். இப்பேர்ப்பட்ட மாமனிதர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து என்னுடன் பழகினார் என்பதும், எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பதும் பெருமை தரும் செய்திகள் ஆகும்.

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் பண்பாட்டுப் புலத்தில் ஏ.கே.செட்டியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட கட்டுரை.

கட்டுரையாளர் புதுக்கோட்டை ஞானாலயா நூலக நிறுவனர் திரு பா.கிருஷ்ணா மூர்த்தி 

Thanks and Courtesy: http://nermai-endrum.blogspot.in/2010/12/blog-post_1249.html 

 ஏ.கே  செட்டியாரைப் பற்றி, அவருடைய காந்தி ஆவணப்படத்தைப் பற்றி   ஒரு செய்தி ஹிந்து  நாளிதழில்  

 

தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அற்றவர்கள் தானா?

ஏ.கே.செட்டியார் காந்தியை நான் விற்க மாட்டேன் என்று நெஞ்சுறுதியோடு சொன்ன தமிழர் !


"தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அற்றவர்கள்: அவர்களுக்கு தங்களுடைய பாரம்பரியத்தை , வரலாற்றை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது " என்று பேச்சை தொடங்கினார் "ஞானாலயா" கிருஷ்ணமூர்த்தி அவர்கள் .

திரு ஏ.கே.செட்டியார் தொகுத்த காந்தி ஆவணப்படம் திரையிடல் மற்றும் தமிழ் மற்றும் தமிழர்களுக்காக ஏ.கே.செட்டியார் ஆற்றிய பங்கு பற்றிய கருத்தரங்கரகை தேசிய நாட்டுப்புறவியல் வளர்ச்சி மையம் (National folklore support centre) திங்களன்று (20.08.07) சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கில் துவக்க உரையை வழங்க வந்த தமிழாசிரியர் : திரு .ஏ.கே.செட்டியாருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மேற்சொன்ன குற்றச்சாட்டுடன் உரையை தொடங்கினார்.



காந்தி படம் என்றால் நமக்கு உடனே நினைவு வருவது  ரிச்சர்ட் அட்டன் பரோ  எடுத்த காந்தி திரைப்படம் தான்.ஆனால் அதற்கு முன்னரே காந்தி ஆவணப் படத்தை ஒரு தமிழர் தயாரித்து விட்டார்.  

1937 ல் தொடங்கி 1940 வரை மூன்று ஆண்டுகள் , சுமார் ஒரு லட்சம் மைல் பயணம் என்ற கடுமையான சோதனைகளுக்குப்பிறகே அவரால் ஐந்தரை மணி நேரம் கொண்ட காந்தி ஆவணப்படத்தை தயாரிக்க முடிந்தது.


ஏ.கே.செட்டியார் அவர்கள் காந்தி ஆவணப்படம் தொகுத்தவர் மட்டுமல்ல . தமிழகத்தின் மிகச்சிறந்த இரண்டு கவிஞர்களை சிறப்பான கவிதை எழுத தூண்டியவர். தன்னுடைய குமரிமலர் பத்திரிக்கை வழியாக பாரதிதாசனின்  அழகின் சிரிப்பு கவித்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். பாரதிதாசன் அழகின் சிரிப்பு எழுத காரணமானவரும் ஏ.கே.செட்டியார்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதை நூல்களை திரட்டி வெளியிட்டிருக்கிறார்.

குமரி மலர் முதல் இதழை பார்த்து விட்டு திரு.ராஜாஜி பாராட்டு கடிதம் எழுதியதுடன் , குமரிமலர் தடைபடாமல் வரவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இன்றைக்கு நாம் எல்லோரும் பார்க்கும் சுபாஷ் சந்திரபோஸ் புகைப் படத்தை எடுத்தவரும் இவரே. வியன்னாவில் 12 நாட்கள் போஸ் அவர்களுடன் தங்கி இருந்த போது ஏ.கே.செட்டியார் எடுத்த புகைப்படம் தான் இன்றளவிற்கும் இந்தியாவெங்கும் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம்.

காந்தி ஆவணப்படத்தை அமெரிக்காவின் 20th Century fox நிறுவனம் 20 லட்சம் ரூபாய்க்கு விலை பேசிய போது  காந்தியை நான் விற்கமாட்டேன் என்று நெஞ்சுறுதியோடு சொன்ன தமிழர்.

உலகம் சுற்றிய தமிழர்  என்று அன்போடு அழைக்கப்படும் ஏ.கே.செட்டியார் அவர்கள் 17 வயதில் பத்திரிக்கை ஆசிரியர் ஆனவர். 17 நூல்கள் எழுதி உள்ளார். வாழும் காலத்திலேயே  காந்தி  மகானைப்பற்றி ஆவணப் படம் இவர் எடுத்ததைப்போல இது வரை வரலாற்றில் எங்கும் நிகழ்ந்தது கிடையாது.

தற்புகழ்ச்சியை விரும்பாத , தன்னை புகைப்படம் கூட எடுக்க அனுமதிக்காத ஏ.கே.செட்டியார் பற்றிய இந்த தகவல்களையெல்லாம் ஞானாலயா  கிருஷ்ணமூர்த்தி சொல்ல சொல்ல , அவர் முதலில் சொன்னது உண்மை என்றே படுகிறது. நம்மவர்களுக்கு வரலாற்று பிரக்ஞை குறைவுதான்.

--கௌதம்


Courtesy: http://www.andhimazhai.com/news/printnews.php?id=5548

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...