Wednesday 4 July 2012

'உலகம் சுற்றும் தமிழர்’ ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் சொற்சித்திரம்!



'உலகம் சுற்றும் தமிழர்’ என்றவுடன் நம் நினைவுக்குச் சட்டென வருபவர் - அ.கரு.செட்டியார் என்னும் பெயருடைய ஏ.கே.செட்டியார் அவர்களே. இவர் உலகத்தைச் சுற்றியது எதற்காக? பயணம் செய்து பல நாடுகளைப் பார்த்து மகிழவேண்டும் என்பதற்காகவா?

இல்லவே இல்லை; வாழ்விக்க வந்த காந்தி மகாத்மாவின் வரலாற்றுக்குரிய வாழ்க்கைச் சம்பவங்களைச் செய்திப் படமாக்கிச் சிறப்பிக்க வேண்டும் என்ற தணியாத ஆவலே இவரைத் தரணியை வலம் வரச் செய்தது.



‘உலகத்தினர் இந்தியாவை மதிப்பதற்குக் காரணமே காந்தியடிகள்தான்’ என்ற கருத்தை அவர் அறிந்து வைத்திருந்ததினாலேதான் இவர் காந்தியைப் பற்றிய செய்திப்படம் தயாரிக்க உலகம் முழுதும் சுற்றினார். ‘‘உலகம் சுற்றும் தமிழன்’’ என்ற பயண நூலையும் எழுதினார்.

மேல்நாடு என்றால் இங்கிலாந்து மட்டுமே என்றிருந்த பிரிட்டிஷ் அரசாட்சிக் காலத்தில் அமெரிக்காவிற்குப் போய்வந்த புரட்சிவீரர் இவர். கொழுத்த பணக் காரர்கள்தான் மேல்நாடு பயணம் செய்ய முடியும் என்கின்ற காலகட்டத்தில்-சராசரி வகுப்பைச் சேர்ந்த செட்டியார் வெற்றிகரமாக உலகைச் சுற்றி வந்தது ஒரு சாதனையே.

இந்திய அரசு செய்திப்படம் ஒன்று எடுப்பதற்கு முன்னரே மகாத்மா காந்தியைப் பற்றிய புகைப்படங்களை எல்லாம் பாடுபட்டுச் சேகரித்து டாக்குமெண்டரியாகத் தொகுத்த முன்னோடி. 

‘குமரிமலர்’ என்ற மாத இதழை இலட்சியப் பிடிப்போடு 40 ஆண்டுகள் நடத்திய பத்திரிகையாளர். இப்படி இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.இவர் பிறந்தது 3.11.1911 இல் கோட்டையூரில்; இவர் மறைந்தது 10.9.1983 இல் சென்னையில். பள்ளிப் படிப்பு 8 ஆண்டுகள் (1920 - 1928) திருவண்ணாமலையில் இரங்கூனில் ‘தனவணிகன்’ என்ற இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று குறைந்த காலம் பணியாற்றினார். இளமையிலேயே தமிழில் கதை,கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவராகத் திகழ்ந்தார்.

1928 இல் எஸ்.எஸ்.வாசன் நடத்திய ஆனந்த விகடனில் ‘சாரதாம்பாள்-சிறுதமாஷ்’ என ஒரு சிறுகதையை இவர் எழுதினார். இவர் எழுதிய முதல் கதையும் இதுதான்;கடைசிக் கதையும் இதுதான்.ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த கதையைத் தழுவி அதனை எழுதினார்.

1936 ஆம் ஆண்டு, புகைப்படப் படிப்பின் பொருட்டு ‘ஜப்பான்’ சென்றார். படிப்பு முடிந்ததும் ‘பர்மா’ வந்தார். அப்போதுதான் தமது முதல் பயண நூலான ‘ஜப்பான்’ என்ற நூலை இவர் எழுதி இரங்கூனில் வெளியிட்டார். பின்னர் இந்த நூல், ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டது.

இந்த நூலின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அமெரிக்கா சென்றார். அங்கே பகுதி நேர வேலை செய்து புகைப்படத் தொழில் பற்றிய மேல் படிப்பைத் தொடர்ந்தார். தமது ஜப்பான் பயண அனுபவத்தை நூலாக எழுதினார்.


தமது முதல் நூலான ‘ஜப்பான்’ முன்னுரையில் ‘‘ஒரு நாட்டைப் பற்றி எழுதுவது என்றால் - அந்நாட்டில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தங்கி, அந்நாட்டு மொழியை நன்கு பயின்று, அந்நாட்டு மக்களோடு நெருங்கிப் பழகுதல் வேண்டும். ஆனால், நான் ஜப்பானில் தங்கி இருந்தது ஒரு மாத காலம்தான். நுனிப்புல்லை மேய்வது போன்ற இந்நிலையில், நான் அதிகம் எழுத முடியாது என்றாலும்,ஜப்பானைப் பற்றித் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலேயே இந்நூலை எழுத முன் வந்தேன்!’’ என்று திறந்த மனத்தோடும் பொறுப்புணர்ச்சியோடும் இவர் எழுதினார்.

2.10.1937 இல் - நியூயார்க்கிலிருந்து டப்ளினுக்கு ‘சமரியா’ என்னும் கப்பலில் இவர் பிரயாணம் செய்தார். அப்போது, கப்பலில் பிரயாணம் செய்தவர்கள் காந்திஜியின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 2.10.1937 என்பது காந்தியின் 68வது பிறந்த நாள் ஜெயந்தி அல்லவா!

இந்த காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட இவருக்கு,அப்போது ஒரு எண்ணம் உதித்தது. ‘புகைப்படத் தொழில் படிப்புப் படித்தவனாகிய நான், ஏன் காந்திஜி பற்றிய செய்திப்படம் ஒன்றைத் தயாரிக்கக் கூடாது?’ இந்த எண்ணம் இவருக்குத் தோன்றியவுடன் இவருக்கு காந்திப் பைத்தியம் பிடித்துவிட்டது.

அதே நினைவாக மூன்றாண்டுகள் உழைத்தார்.இந்தியாவைச் சுற்றிப் பல முறைகள் பயணம் செய்தார். உலகத்தின் பாதி நாடுகளுக்குக் கப்பலில் பயணம் செய்தும்,விமானத்தில் சுற்றிப்பறந்தும் வந்தார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பயணம் செய்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட செய்திப்பட கம்பெனிகளுக்குச் சென்று வந்தார். அவர்களோடு கலந்து ஆலோசித்தார்.

இப்படியாகக் கடுமையாக உழைத்து - முதலில் 50,000 அடி காந்திப்படம் எடுத்தார். பிறகு அதிலிருந்து 12,000 அடியில் காந்தி செய்திப் படத்தை உருவாக்கினார்.

இப்படத்தைத் தயாரிக்க நான்கு கண்டங்களில் இவர் இலட்சம் மைல் பிரயாணம் செய்தார்;பற்பல செய்திப் பட கம்பெனிகளில் ஏறி இறங்கினார்; ஒரு நூறு கேமராக்காரர்கள் எடுத்த படங்களைச் சேகரித்தார்.

ரோமன்ரோலந்து, போலிக் போன்றவர்களைப் பேட்டி கண்டார். காந்தி பற்றிய உலக அறிஞர்களின் கருத்தைக் கேட்டறிந்தார். அவற்றையெல்லாம் உரிய இடத்தில் இணைத்து ‘மகாத்மா காந்தி’ செய்திப்படத்தை 24.08.1940இல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முதலில் வெளியிட்டார். இந்தப் படத்தை 1952 இல் மீண்டும் ஆங்கிலப் பின்னை உரையுடன் தயாரித்தார். காந்தியின் புகழைப் பரப்பினார்.

மகாத்மா காந்தி உடலுடன், உயிருடன், உள்ளத்துடன் வாழ்ந்தபோது, அவருக்குச் செலுத்தப்பட்ட ஒரு தமிழனின் மகத்தான காணிக்கையாக இச்செய்திப் படம் ஏ.கே.செட்டியாரால் இந்தியாவிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டது.இதற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளலாம்.
இத்தகு சாதனையைச் செய்த செட்டியாரின் நூற்றாண்டு விழாவினை மத்திய அரசும்,மாநில அரசும் கொண்டாட வேண்டும் என்பதை அரசியல்வாதிகளுக்கு நான்,அப்போதைக்கு இப்போதே நினைவுபடுத்துகின்றேன். 2011இல் இவருடைய நூற்றாண்டு வருகிறது அல்லவா!

மகாத்மா காந்தி பற்றிய செய்திப்படத்தை எடுப்பதற்காகவே உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். அதன் விளைவே இவர் பயண நூல்கள் பலவற்றை எழுதக் காரணமாக அமைந்தது. பயண நூல்களின் முன்னோடியாக இவர் போற்றப்படுகிறார்; புகழப்படுகிறார்.


ஆம்! "இன்று எத்தனையோ விதமான பயண நூல்கள் வெளியாகின்றன. ஆனால், இலக்கியமாய் மதிக்கக் கூடிய பிரயாண நூல் வடிவெடுத்தது சந்தேகமின்றி ஏ.கே.செட்டியாரின் பேனாவில் தான் என்பதைப் பாரபட்சமில்லாத நெஞ்சங்கள் ஒப்புக்கொள்ளும்!"என்று அறிஞர் கி.சந்திரசேகரன் எழுதுகிறார்.

மாதப்பத்திரிகையான ‘குமரிமலர்’ தோன்றியது இரண்டாம் உலகப் போர்க் காலமான 1943இல். அந்நாளில் புதிதாக பத்திரிகை தொடங்க ஆங்கில அரசு அனுமதிக்காது என்பதனால் இங்கிலாந்து நாட்டில் வெளியான  பெங்குவின் ரீடர்  கட்டுரைக் களஞ்சியத்தைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ‘குமரிமலர்’ மாதம் ஒரு புத்தகமாக மலர்ந்தது.

தமிழில் முதன்முதலாக போட்டோ ஆப்செட் முறையில் படங்களையும், விளம்பரங்களையும் - அசோசியட் பிரஸ்ஸின் உதவி கொண்டு குமரிமலர் - தனது ஆண்டு மலரில் வெளியிட்டது. உலக மகாயுத்தத்தின் காரணமாக தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் திருக்கழுக்குன்றத்தில் வசித்த போது,அவருடைய அருமையான புகைப்படத்தை குமரிமலர் வெளியிட்டது. ஐயர் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் அதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘குமரிமலர்’ 1943 ஏப்ரல் முதல் 1983 ஏப்ரல் வரை ஏறக்குறைய 40 ஆண்டுகள் நடைபெற்றது. இடையில் 1.4.1945 முதல் 1.1.1946 வரை குமரிமலர் வெளிவருவது தடைப்பட்டது.மீண்டும் 1.2.1946 இல் வரத்தொடங்கியது. ஏ.கே.செட்டியார் வெளிநாடு சென்றபோது, அறிஞர் வெ.சாமிநாத சர்மா ஆசிரியப் பொறுப்பேற்று குமரிமலரை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் சுற்றிய தமிழரான ஏ.கே.செட்டியார் எழுதிய நூல்கள் இருபதிற்கு மேலாகும்.அவற்றில் சக்தி கோவிந்தன் பதிப்பகத்தாராலும் மற்றும் டி.வி.எஸ்.நிறுவனத்தாராலும் சில நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இனி இவர் எழுதிய நூல்களின் பட்டியலைக் காண்போம்.

1. ஜப்பான் (1936), 2. திரையும் வாழ்வும் (1943), 3. பிரயாணக் கட்டுரைகள் (1947), 4. மலேயா முதல் கானடா வரை (1955), 5. அமெரிக்க நாட்டில் (1956), 6. கரிபியன் கடலும் கயானாவும் (1957), 7. உலகம் சுற்றும் தமிழன் (1958), 8. அண்டை நாடுகள் (1958), 9. ஐரோப்பா வழியாக (1961), 10. இட்டபணி (1962), 11. குடகு (1967), 12. புண்ணியவான் காந்தி (1969).

பின்வருபவை சக்திமலர் வெளியீடுகள்.இவை சக்தி வை.கோவிந்தனால் வெளியிடப்பட்டவை ஆகும்.

1. ஜப்பான் (1940),

2. உலகம் சுற்றும் தமிழன் (1940),

3. அமெரிக்கா (1940) பின்வருபவை - இலவச வெளியீடுகளாக டி.வி.எஸ்.நிறுவன உதவியுடன் பள்ளி,கல்லூரி நிறுவனங்களுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன.

1. உணவு, 2. பண்பு, 3. கொய்தமலர்கள், 4. அவ்வையார்

பின்வருபவை - ஏ.கே.செட்டியாரால் விழாக்களின் போது தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை. இவைகளும் இலவச வெளியீடுகளே ஆகும்.

1. புத்தகம், 2. திருமணம்

இவற்றைத் தவிர - ஏஷியன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் - என்ற சென்னை நிறுவனம் இவருடைய தொகுப்பு நூலான ‘பயணக்கட்டுரைகள்’ என்ற நூலை 15.08.1968இல் வெளியிட்டுள்ளது. சென்ற 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பற்றி தமிழர் எழுதிய 140 பயணக் குறிப்புகளையும், கட்டுரைகளையும், பாடல்களையும் பழைய தமிழ் நூல்களிலிருந்தும், தமிழ் பத்திரிகைகளிலிருந்தும் இயன்ற அளவு திரட்டி இந்நூலில் ஏ.கே.செட்டியார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேயா முதல் கானடா வரை

இந்த நூல் ஏப்ரல் 1955 இல் வெளிவந்தது, 231 பக்கங்கள். நாற்பது மாதங்கள் வெளிநாடுகளில் பயணம் செய்த செட்டியார்,நான்கு புத்தகங்கள் வெளியிட எண்ணினார். இந்த நூலை முதலில் எழுதினார். தனது நண்பர்கள் வீட்டில் தங்கியபோது, திருப்பூரில் இந்த நூலை எழுதினார்.

உலகத்தின் பல நாடுகளில் பிரயாணம் செய்த போது ஜாதி, மதம், நிறம், மொழி என்கின்ற பேதம் இல்லாமல்,மனிதனை மனிதனாக நினைத்து, மதித்து,அன்போடு உபசரித்து,அரிய உதவிகள் புரிந்து எண்ணற்ற அன்பர்களுக்கு நன்றி.எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவனின் அருளுக்கு நன்றி என இந்த நூலின் முன்னுரையில் இவர் எழுதியுள்ளார்.

கரிபியன் கடலும் கயானாவும்

நாற்பது மாதங்கள் வெளிநாடுகளில் பயணம் செய்த செட்டியார் அந்த அனுபவம் பற்றி நான்கு நூல்கள் எழுதத் திட்டமிட்டார் அல்லவா? அந்த வரிசையில் மூன்றாவதாக எழுதப்பட்ட புத்தகம் இது.இதை 14.03.1957இல் வெளியிட்டார். 92 பக்கங்கள்; 16 படங்கள் தமது நூல்களில் படங்கள் இல்லாமல் செட்டியார் எந்த நூலையும் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலில் கயானாவைப் பற்றியும்,அங்கு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்குக் காரணமான பின்னணிச் சம்பவங்களையும் விளக்கமாக எழுதியுள்ளார். கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் வாழும் நமது மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவே இப்புத்தகங்களை எழுதியதாக ஏ.கே.செட்டியார் கூறுகிறார்.

பஹாமத்தீவுகள் - ஜமைக்கன் - பார்படோஸ் - டிரினிடாட் - பிரிட்டிஷ் கயானா - சூரிணம் - வெனிஸுவோல் ஆகிய பகுதிகளைப் பற்றி விரிவாகவும் அங்குள்ள தமிழர்கள் பற்றியும் சுவைபடக் கூறுகிறார்.

மலேயா - இந்தோனேஷ்யா - பாலித்தீவு ஜோக்ள காந்தா சுமத்ரா - ஆஸ்திரேலியா - பிஜித்தீவு - கானடா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அனுபவங்களையும், அங்கு தாம் கண்ட காட்சிகளையும், மக்களின் நடை, உடை, பாவனை, உணவு, பழக்க வழக்கங்களையும் விரிவாக எழுதியுள்ளார்.

இந்த நூலுக்கு வேறு எந்த நூலுக்கும் எழுதாத அளவு பதினேழு பக்கங்கள் மிக நீண்ட முன்னுரையை இவர் எழுதியுள்ளார்.இந்நீண்ட முன்னுரையானது இப்பயணங்களின் முக்கியத்துவத்தையும் இவர் கொண்ட பெருமிதத்தையும் வெளிப்படுத்துகின்றன என்றே சொல்லலாம்.

‘‘இப்புத்தகத்தில் உள்ளதெல்லாம் உண்மை என்று சொல்ல வேண்டாம். என்னால் காணப்பட்ட காட்சிகளே ஆகும். ஒவ்வொருவரும் உண்மையைத் தத்தமக்குத் தெரிந்தவாறு உணருகின்றனர். உண்மையை வரையறுத்துக் கூறுவது கடினம். கடவுள் ஒருவரே உண்மை!’’ என்று இவர் கூறுகிறார்.

இந்த வையத்தில் எத்தனையோ பேர் பிறந்து மறைகிறார்கள். ஆனால் ஒரு சிலரே தாங்கள் வாழ்ந்த காலத்தின் அடிச்சுவடுகளைப் பிறருக்குப் பயன் படும்படியாக விட்டுச் செல்கிறார்கள். அப்படி எண்ணக்கூடிய சிலரில் ஒருவர் புண்ணியவான் ஏ.கே.செட்டியார் அவர்கள்.

சுய விளம்பரத்தை என்றுமே விரும்பாத இவர் தமது புகைப்படத்தைக் கூட பத்திரிகைகளுக்குத் தந்ததில்லை. புகழையும் வேண்டாத புனிதராகப் பொலிந்தார். இப்பேர்ப்பட்ட மாமனிதர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து என்னுடன் பழகினார் என்பதும், எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பதும் பெருமை தரும் செய்திகள் ஆகும்.

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் பண்பாட்டுப் புலத்தில் ஏ.கே.செட்டியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட கட்டுரை.

கட்டுரையாளர் புதுக்கோட்டை ஞானாலயா நூலக நிறுவனர் திரு பா.கிருஷ்ணா மூர்த்தி 

Thanks and Courtesy: http://nermai-endrum.blogspot.in/2010/12/blog-post_1249.html 

 ஏ.கே  செட்டியாரைப் பற்றி, அவருடைய காந்தி ஆவணப்படத்தைப் பற்றி   ஒரு செய்தி ஹிந்து  நாளிதழில்  

 

1 comment:

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...