‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு புத்தகப் பயணம்!
புத்தகக் காதலர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர், ‘ஞானாலயா’ பி.கிருஷ்ண மூர்த்தி (வயது 75). அரிய புத்தகங்களைச் சேகரிப்பதில் அலாதியான ஆர்வம் கொண்டவர். 1835-ல் தொடங்கி, 2016 வரை தமிழில் வெளி வந்த ஏராளமான புத்தகங்களின் அரிய முதல் பதிப்புகளையும், 1,500 சிறுபத்திரிகைகளையும் தனது ‘ஞானாலயா’ நூலகத்தில் சேகரித்து வைத்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. மொத்தம் ஒரு லட்சம் நூல்கள் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நூல்களைப் பாதுகாக்கவே வருடத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவிடுகிறாராம் கிருஷ்ணமூர்த்தி.
தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் என இந்த நூலகத்தைப் பயன்படுத்துவோரின் பட்டியல் மிகவும் நீண்டது. இந்த நூலகத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை என்பதுடன் வருபவர்களுக்குத் தேவைப்படும் நூல்களை எடுத்துத் தந்து அவை பற்றிய அரிய குறிப்புகளையும் தகவல்களையும் உடனிருந்து ஆதாரங்களோடு கூறி உதவவும் செய்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இந்நூலகத்தைப் பயன்படுத்தி இதுவரை சுமார் 100 பிஹெச். டி., 150 எம்.ஃபில். மாணவ-மாணவியர் உருவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்க செய்தி!
அரசுப் பள்ளி ஆசிரியரான கிருஷ்ணமூர்த்தியும், அரசுக் கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியரான அவரது மனைவி டோரதியும் தாங்கள் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணி ஓய்வுப் பலன் தொகையான 11 லட்ச ரூபாயையும் கொண்டு நூலகக் கட்டிடத்தை எழுப்பினார்கள். இன்றளவும் நூலகப் பராமரிப்புக்கும் நூல்களை வாங்குவதற்கும் தங்கள் ஓய்வூதியத் தொகையை இந்தத் தம்பதி பயன்படுத்திவருகிறார்கள்!
‘சக்தி’ இதழின் ஆசிரியராக இருந்த கு.அழகிரிசாமி கையெழுத்திட்டுக் கொடுத்த தாக ‘தனிப்பாடல் திரட்டு’ என்றொரு அரிய புத்தகத்தை கிருஷ்ணமூர்த்தியின் தந்தை, பதின்பருவத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தாராம். அதிலிருந்து அபூர்வமான புத்தகங்களைத் திரட்டினால் என்ன என்று சிந்தித்து அதைச் செயலிலும் காட்ட ஆரம்பித்தாராம் கிருஷ்ணமூர்த்தி.
நூல்கள் மட்டுமல்ல, இதழ்களும் இந்த நூலகத்தின் சிறப்பு. 1926-ல் பூதூர் வைத்தியநாத ஐயர் என்பவர் நடத்திவந்த ‘ஆனந்த விகடன்’ இதழைத்தான் எஸ்.எஸ்.வாசன் ரூ. 200 விலை கொடுத்து வாங்கி அந்த இதழைத் தானே நடத்த ஆரம்பித்தார். விகடனை விற்ற பிறகு, பூதூராரால் சும்மா இருக்க முடியவில்லை. ‘ஆனந்த விஜய விகடன்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கிச் சில காலம் நடத்தினார். பூதூரார் ‘ஆனந்த விகடன்’, அவரிடம் விலைக்கு வாங்கி வாசன் நடத்திய ‘ஆனந்த விகடன்’, பிறகு பூதூரார் நடத்திய ‘ஆனந்த விஜய விகடன்’ இதழ்கள் அனைத்துமே இந்த நூலகத்தில் காணக் கிடைக்கின்றன.
இன்றைக்கு ‘மியூசிக் அகாடமி’ உள்ள இடத்தில் தமிழகத்தின் பிரபலமான ‘சக்தி’ பத்திரிகை இயங்கிவந்தது. அச்சு நேர்த்தியுடன் அற்புதமான பல புத்தகங்களை ‘சக்தி’ பிரசுரம் பதிப்பித்தது! சாதாரண அச்சு இயந்திரத்தை வைத்துக்கொண்டே சக்தி வை. கோவிந்தன் நிகழ்த்திய அற்புதம் அது. அனைத்து ‘சக்தி’ இதழ்களும், ‘சக்தி’யின் அனைத்து வெளியீடுகளும் ‘ஞானாலயா’வின் பொக்கிஷ சேகரம்.
‘பயணக் கட்டுரைகளின் அரசர்’ ஏ.கே. செட்டியார் நடத்திய ‘குமரி மலர்’ இதழ்களும் இங்கு பராமரிக்கப்பட்டுவருகின்றன. தமிழ்த் தாத்தா உ.வே.சா. பதிப்பித்த சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, குறுந்தொகை முதலிய நூல்களும் இங்கு உள்ளன. அச்சு தொடங்கிய காலத்திய அரிய அகராதிகள் பலவும் உள்ளன.
நாட்டுப் பற்று, மொழிப் பற்று ஆகியவற்றைத் தூண்டும் பாடல்களை யாராவது எழுதியிருந்தால் அதைத் தமக்கு அனுப்பி வைக்கும்படி ‘சுதேசமித்திரன்’ இதழ் வாயிலாக பாரதியார் ஓர் அறிவிப்பைச் செய்திருந்தார். அவ்வாறு அனுப்பப்பட்ட புலவர் ஆறுமுகத்தின் பாடல், ‘சுதேச கீதங்கள்’ தொகுப்பில் 1908-ல் வெளிவந்தது. எவ்வளவு அரிய ஆவணம் அது!
‘‘யாழ்ப்பாணத்தின் ‘கலைமகள் நூலகம்’தான் உலகின் பெரிய தமிழ் நூலகம். அது 1983-ல் எரிக்கப்பட்டு சாம்பல் ஆகிவிட்டது. அடுத்த பெரிய தமிழ் நூலகம் தமிழ்நாட்டில் இருந்த மறைமலை அடிகள் நூலகம். அதுவும் இப்போது இல்லை. அந்த நூலகங்களின் இடத்தை நிரப்பும் சிறு முயற்சியே ‘ஞானாலயா’! தன்னந்தனியாக நாங்கள் ஒரு லட்சம் அரிய நூல்களைச் சேகரித்ததோ பராமரிப்பதோ பெரிய விஷயமில்லை. இந்த அரிய நூல்கள் காலப்போக்கில் நொறுங்கிப் போகாமல் இருக்க வேண்டுமே என்கிற பெரிய கவலைதான் எனக்கு. இந்த நூல்களை டிஜிட்டல் முறையில் கணினியில் ஸ்கேன் செய்து பாதுகாத்து வைக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். தற்போதைக்கு ஒரு ஸ்கேனர் தேவை. அதற்குப் பணம் தேட வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்’’ என்று கவலையோடு கூறினார் கிருஷ்ணமூர்த்தி. “ஒவ்வொரு புத்தகத்தையும் என் பேரக் குழந்தையைப் போல்தான் பூப் போல ஏந்துகிறேன்” என்று வாஞ்சையுடன் குறிப்பிடும் ‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தி, ‘‘நான் இந்தப் புத்தகங்களோடேயே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்று கூறி நமக்கு விடை கொடுத்தார்.
- ஜே.வி. நாதன்,
பத்திரிகையாளர்-எழுத்தாளர். தொடர்புக்கு: vaithiyanathan@gmail.com


மேலும் விபரங்களுக்கு..

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140