Thursday 28 June 2012

ஞானாலயா - அனுப்வம்

திரு சுந்தரராமன் அவர்களின் வலைப் பக்கங்களில் இருந்து...!

புதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக்கு வாருங்கள். கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலை இருக்கிறது என்றார். நானும் என் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டுக்குப்போனபின், பிரமித்துப்போனேன். அந்த வீடு முழுவதும் புத்தகங்கள்! வரிசைக்கிரமமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு நூலகம்போல் இருந்தது. அப்புறம்தான் உறைத்தது.



அது ஞானாலயா! தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தனியார் நூலகம்.! புதுக்கோட்டையின் பெருமைகளில் முக்கியமானது! இன்றைய தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் வந்துபோகும் கோவில்! அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை! :)




அதன் நிறுவனர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர் பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். திருமதி டோரதி அவர்கள் கல்லூரி முதல்வராய் இருந்தவர். இருவரும் பணி ஓய்வு பெற்று விட்டு ஞானாலயாவை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள்.

திரு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடலாலும், அறிவாலும், உள்ளத்தாலும் அளவிடமுடியா உயரமானவர்! மனிதர்களை நேசிப்பவர். நேர்மையை சுவாசிப்பவர். ஒரு செய்தியின் அடி ஆழம்வரை சென்று அலசுபவர்! அங்கு வரும் ஆர்வலர்களுக்கு முகம் கோணாமல் விபரங்களை அள்ளித்தருபவர். அவர் விளக்கம் சொல்லாமல் ஒரு புத்தகத்தை படிப்பது உப்பில்லாப்பண்டம் உண்பதைப்போல! அவர் ஒரு நூலகர் அல்ல.! நல்ல வாசகர்! நீங்கள் எந்த தமிழ்ப்புத்தகம் தேடிக்கொண்டிருந்தாலும் இங்கு இருக்கும் சாத்தியம் அதிகம்! மேலும் அதைப்பற்றிய பின்னணித் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.

திருமதி.டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அன்பான தாய் மற்றும் அறிவுசால் ஆசான்! கணவரின் எல்லாச்செயல்களிலும் துணை நின்று ஒரு நல்ல ஆலோசகராகவும் திகழ்பவர்! மிகவும் அற்புதமாகச் சமைப்பார். (நம்மல்லாம் படிக்க போகச்சொன்னா தின்னுப்புட்டு வர்ற கூட்டம்! என்ன பண்றது? ) தவிர..மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்! அவர் எழுதி பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் கௌரவப் படுத்தப்பட்டு, விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நம் மத்திய, மாநில அரசுகளோ...ம்ஹூம்.. !


இங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. தமிழில் அரிய நூல்கள் அனைத்தும் இருக்கின்றன. நான் ஒரு எழுத்தாளர் பற்றியோ, படைப்புகள் பற்றியோ தெரிந்துகொள்ள விரும்பினால், அடுத்து போய் விழும் இடம் அதுதான். இங்கு எல்லா சிற்றிதழ்களும் ஆரம்பம் முதல் உள்ளன. இன்றும் வந்துகொண்டிருக்கின்றன. வட அமெரிக்க FETNA வின் தென்றல் இதழைக்கூட நான் படித்திருக்கிறேன்.டெல்லியிலிருந்து வெளிவரும் வடக்கு வாசல் இங்கு வருகிறது.பல நாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த அறிவுப்பெட்டகத்துக்கு ஒரு மாதம் அந்துருண்டை வாங்கவே அவர்களுக்கு ஒரு தொகை செலவாகிறது. மேலும் இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.! . இவர்கள் இன்றுவரை தங்கள் சொந்த ஓய்வூதியத்தையும், சேமிப்பையும் வைத்தே நூலகத்தை பராமரித்து வருகிறார்கள். ஆர்வலர்கள் நிறைய புத்தகங்களைத் தந்து குவிக்கிறார்கள். ஆனால் பொருளுதவிக்காக இப்போதுதான் மத்திய, மாநில அரசுகளிடம் திட்ட முன்வரைவு வைக்கப்பட்டுள்ளது.

நாம் ஏதாவது இந்த நூலகத்துக்குச் செய்ய வேண்டும்.! என்ன செய்யலாம்?

ஏதாவது ஒரு நல்ல நோக்கத்தோடோ, பாராட்டவோ, உதவவோ அவரைத் தொடர்பு கொள்ள விரும்பினால்.. +91 99656 33140

பதிவுக்கு நன்றி: சுரேகா http://www.surekaa.com/2010/02/blog-post_18.html

Thursday, February 18, 2010 அன்று எழுதப்பட்ட இந்தப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் ஒன்று...

/இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.!/

அழிந்து வரும் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க,(புத்தகங்களும் இதில் அடக்கம்) தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மின்தமிழ் என்று கூகிள் க்ரூப்சில் தேடிப்பாருங்கள், இது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் வலைக் குழுமம்.

அவர்களைத் தொடர்புகொண்டாலேயே, digigitisation of books எப்படிச் செய்வது என்பதைச் சொல்வார்கள். தவிர, தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் இருக்கும் திரு நா.கணேசன் ஞானாலயாவைப் பற்றி மின்தமிழிலும், வேறு சில வலைக் குழுமங்களிலும் பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார். உள்ளூரிலேயே இருக்கும் பழைய மாணவர்கள், ஆர்வலர்கள் சேர்ந்தால், அங்கே இருக்கும் புத்தகச் செல்வங்களைக் கணினி மயமாக்கிப் பாதுகாக்க முடியும்.

இதே உதவியை, சென்னையில் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.முக்தா வி. ஸ்ரீநிவாசன் தி.நகரில் தன்னுடைய இல்லத்தில் வைத்துப் பராமரிக்கும் நூலகத்திற்கும், சென்னையில் உள்ள ஆர்வலர்கள் செய்து தரலாம்.

காப்புரிமைப் பிரச்சினையில் குறுக்கிடுவதாகவோ, எழுத்தாளர்கள், பதிப்பகத்தாரை ஏமாற்றும் முயற்சி அல்ல இது. பழைய, அரிய புத்தகச் செல்வங்களைப் பாதுகாக்கவும், நமக்கு அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கவும் செய்கிற கல்வித் தெய்வத்தின் பணி இது என்பதைப் புரிந்து கொண்டு ஆர்வமுள்ளவர்கள் பங்கு கொள்ளலாம்.

அரசின் உதவியையோ, ஒத்துழைப்பையோ இதில் எதிர்பார்க்காமல், நமக்கு நாமே என்பதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய அவசரமான கடமையும் இது!


Wednesday 27 June 2012

தமிழ்நாட்டுக்கு உள்ளே ஒரு தனி நாடு!

"இந்தியாவிலேயே பழம்பெருமைகள் வாய்ந்தது நமது தமிழ் மண். அதற்கு உள்ளும் பழமை வாய்ந்தது, தென் மாவட்டங்களே. குறிப்பாக, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, நாஞ்சில் நாட்டைக் குறிப்பிடலாம். இந்தப் பகுதிகளில்தான் கல்வெட்டுகளும், வரலாற்று ஆவணங்களும் கூடுதலாகக் கிடைக்கின்றன.


புதுக்கோட்டை மண்டலம், வெள்ளையர் ஆட்சியின்போதும் தனிநாடாகவே இயங்கியது என்பது வியப்புக்கு உரியது. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திற்கு உள்ளே, புதுக்கோட்டை கிடையாது. புதுக்கோட்டை மன்னர் ஆங்கில அரசுக்கு ஆதரவாக இருந்ததால், அவரது எல்லைக்கு உள்ளே வெள்ளையர்கள் தலையிடவில்லை. இந்திய விடுதலை வரையிலும், அது தனி நாடுதான். புதுக்கோட்டையின் வரலாறு குறித்துப் பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன. அரசு ஆவணங்களும் உள்ளன. சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு எதிரே உள்ள, அரசு ஆவணக் காப்பகத்தில் அந்த ஆவணங்களைப் பார்க்கலாம்".என்று ஆரம்பிக்கும் இந்தக் கட்டுரை, புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் இன்னொரு சிறப்பையும் தொட்டுச் செல்கிறது!


ஞானாலயா நூல் நிலையம்

புதுக்கோட்டை என்றாலே, பழம்பெருமைகள் நினைவுக்கு வருவது போல, ஆய்வாளர்களுக்கு புதுக்கோட்டை என்றாலே நினைவுக்கு வருவது, ஞானாலயா நூல் நிலையம்தான். ஆம்; புதுக்கோட்டையின் நுழைவாயிலில், திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள பழனியப்பா நகரில்தான், இந்த அறிவுத் திருக்கோயில் அமைந்து உள்ளது.

கல்வித்துறையில் பணி ஆற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியினர், இந்த நூல் நிலையத்தை அமைத்து உள்ளனர். 70,000 நூல்களைச் சேகரித்து வைத்து உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களைப் பற்றியும், நூலகத்தைப் பற்றியும் செய்தித்தாள்களில் வந்த செய்திகளைப் படித்து இருக்கின்றேன். புதுக்கோட்டைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால், இந்த நூல் நிலையத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.

புதுக்கோட்டை ஞானாலயா நூலகம் கிருஷ்ணமூர்த்தி - அருணகிரி

சென்னையில் இருந்து ரயிலில் புறப்படுகையில்தான், முகவரி இல்லை என்பது நினைவுக்கு வந்தது. எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு சென்றேன். காலையில் புதுக்கோட்டையில் ஆனந்த விகடன் புத்தகத்தை வாங்கினேன். அதில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, ஏ.கே. செட்டியாரது பயண நூல்களைப் பற்றியும், புதுக்கோட்டை ஞானாலயாவில் செட்டியாரது நூல்கள் அனைத்தும் உள்ளதாகவும் எழுதி இருந்தார். ஆப்பிள் தேசம் என்ற அமெரிக்கப் பயணக் கட்டுரைத் தொடரைத் தற்போது தினமணி கதிரில் எழுதி வருகின்ற எழுத்தாளர் ஞானியும், செட்டியாரது நூல்களைப் பற்றிக் கிருஷ்ணமூர்த்தி சொன்ன தகவலை எழுதி இருந்தார்.

புதுக்கோட்டையில் அந்த நூலகத்தைப் பற்றி விசாரித்த உடனேயே தகவல்கள் கிடைத்தன. நண்பர் தமிழ்மணியும், இந்த நூலகத்தைப் பற்றி அறிந்து இருந்தார். எனவே, எல்லோரும் அங்கே சென்றோம். ஐயா கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தோம். ஏ.கே. செட்டியாரின் நூல்களைக் காண்பித்தார். அவற்றைப் படங்கள் எடுத்துக் கொண்டேன். நான் எழுதிய, உலகம் சுற்றும் வாலிபன், கொடிவழி ஆகிய நூல்களை, நூலகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன். இந்த நூலகத்துக்கு, தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள் வருகை தந்து உள்ளனர். தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்து உள்ளனர்.

நூலகத்தைப் பற்றிய குறிப்புகளை மட்டுமே தொகுத்து, ஞானாலயா என்ற ஒரு புத்தகத்தையும் வெளியிட்டு உள்ளனர்.விலை ரூ.35. கிடைக்கும் இடம்: 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை-622 002. தொலைபேசி. 99656-33140

நன்றி:கட்டுரை ஆசிரியர் திருஅருணகிரி, மற்றும் கீற்று இணைய இதழ் நவம்பர் 8,2011 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17294:2011-11-08-03-00-33&catid=38:tamilnadu&Itemid=121 

Monday 25 June 2012

ஞானாலயாவின் அவசியம்: வரலாற்று உணர்வு நம்மிடம் இருக்கிறதா?

சாஹித்ய அகாடெமி அவ்வப்போது இந்த மாதிரி எழுத்தாளர்களை அறிமுகம்செய்து வைக்கிற நிகழ்ச்சிகளை நடத்துக்கிறது! கும்பகோணத்தில் சென்ற ஆண்டு, திரு எம் வி வெங்கட்ராம் அவர்களைப்பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் ஞானாலயா திரு பா.கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டு உரையாற்றி  இருக்கிறார்.

தமிழின் மிகச்சமீபத்திய, முந்திய தலைமுறை எழுத்தாளர்களைக் கூட நமக்கு சரியான அறிமுகம் இல்லை!ஞானாலயா திரு பா. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இல்லையென்றால் இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்ற குறைந்தபட்ச வரலாற்றுச் செய்திகள் கூட வருகிற தலைமுறைக்கு மிஞ்சியிருக்காது.



இந்த நிகழ்ச்சியில் திட்டமிடாமல், சுமார் இருபத்திரண்டு பேச்சாளர்களைப் பேச ஏற்பாடு செய்திருந்தது, சாஹித்ய அக்கடமி ஏனோதானோ ரகத்தில் தான் நடத்தியமாதிரி ஒரு சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. இணையத்தில் தேடிய போது இந்த நிகழ்ச்சியைப் பற்றிய இந்தப் பகிர்வு கிடைத்தது. இதுவும் முழு சித்திரத்தைக் கொடுக்கவில்லை என்பது தனி விஷயம்!


இனி அந்தப் பதிவில்....

எம்.வி. வெங்கட்ராமுடனான தனது சந்திப்பு, நட்பு பற்றியும் சொல்லி அவரது எழுத்துக்களை சிலாகித்து பேசியவர்களாக வே.மு. பொதியவெற்பன், தேனுகா, தஞ்சை ப்ரகாஷ் ஆகியோர்களை பட்டியலிட்டு எம்.வி.வி. பற்றி இன்னமும் அதிக தகவல்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.  நேரம் கிடைக்கும்போது இடைஇடையே அச்செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று சொல்லி ஒரு நீண்ட அறிமுக உரையை இராம. குருநாதன் நிகழ்த்தினார்.



பின்னர் பேச வந்த சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் எம்.வி.வி.யின் நாவலைப் படிக்காமல் சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதப்பட்ட நாவல் என்று விமர்சனம் எழுதியதை குறிப்பிட்டு பேசினார்.  அ. மார்க்ஸ் போன்றவர்கள் தமிழிலக்கியத்தை தலித் இலக்கியம், செட்டியார் இலக்கியம், முதலியார் இலக்கியம் என்றெல்லாம் சாதி ரீதியாக வகைப்படுத்தி வைத்துள்ளனர் என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.  தமிழில் இப்படியெல்லாம் அணுகும் போக்கு உள்ளது என்பதை ‘கண்டுபிடித்து’  வெளிப்படுத்தினார்.



மேலும் இந்திய இலக்கிய சிற்பிகள் நூல் வரிசையில் எம்.வி.வி.யைப் பற்றிய நூல் ஒன்றை தேனுகாவை எழுதித் தருமாறும் அதை சாகித்திய அகாதெமி கண்டிப்பாக வெளியிடும் என்றும் அறிவித்தார்.  எம்.வி.வி.யின் நாவல்கள் மற்றும் படைப்புகள் பற்றி வந்துள்ள விமர்சனங்களை குறிப்பிட்டு சிற்பி பேசி முடித்தார்.

மைய உரையாற்றிய சாகித்திய அகாதெமி பொதுக்குழு மற்றும் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் இரா. மோகன், பி.எஸ். ராமையா எப்படி எம்.வி.வி.க்கு வழிகாட்டினார் என்பதைத் தெரிவித்தார்.   தி.ஜா., கு.ப.ரா., க.நா.சு. போன்ற சமகால எழுத்தாளர்களோடு எம்.வி.வி.யைத் தொடர்புப்படுத்தி தனது பேச்சை நிறைவு செய்தார்.

சிறப்பு விருந்தினர்களின் உரைக்குப் பிறகு நன்றியுரை சொல்ல வந்த ரவி சுப்பிரமணியன் எம்.வி. வெங்கட்ராமுடன் உள்ள தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.  அவரைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்கு நிறைய செலவு பிடிக்கும்.  எனவே சாகித்திய அகாதெமி உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முதல் அமர்வில் தலைமையேற்ற அ. மார்க்ஸ், கும்பகோணத்தில் நாங்கள் நெருங்கி உறவாடிய எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு என்றும் அவர் அளவிற்கு இல்லையென்றாலும் எம்.வி.வி.யுடனும் தொடர்பு இருந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார்.  இவரது படைப்புகளில் ‘காதுகள்’ தம்மை ஈர்க்கவில்லையயன்றும் ‘நித்ய கன்னி’, ‘வேள்வித் தீ’  போன்றவற்றை சிறந்த படைப்புகளாக பார்ப்பதாகவும் கூறினார்.

எம்.வி.வி. பாரதத்தின் மேல் அதிக ஈடுபாடு கொண்டவர்.  தமிழ்ச் சூழலில் கம்பராமாயணம் பேசப்பட்டதைப் போல வியாசபாரதமோ, நல்லாபிள்ளை பாரதமோ பேசப்பட்டதில்லை.  பாரதத்தின் மீது அதீத பற்றுடைய எம்.வி.வி. முயன்றிருந்தால் தமிழுக்கு ஒரு அருமையான பாரதம் கிடைத்திருக்கும் என்றார்.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழலில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எம்.வி.வி., அத்வானியை சந்தித்ததையும் குறிப்பிட்டு இந்துத்துவத்துடன் இணக்கமாக இருந்த எழுத்தாளர் என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொன்னார்.

தமிழ்நாட்டில் சிறுபான்மை சமூகமான செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த எம்.வி.வி.க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.  இன்றும் கூட செளராஷ்டிரா மொழிக்கு வரி வடிவம் இல்லை.  அவர்களது மொழி கூட பலரால் கிண்டல் செய்யப்படுகிறது.  இவர் தனது இறுதிக் காலத்தில் செளராஷ்டிரா மொழிக்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.  இந்தப் பின்னணியில் அவரது அடையாள அரசியலையும் இந்துத்துவத்தின்பால் அவர் சாய நேர்ந்ததையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த அமர்வில் பேசிய பேரா. மணி எம்.வி.வி.யின் படைப்புகளில் 7 மட்டும் அசலானது; அவர் எழுதியது.  எஞ்சியவை அனைத்தும் பிற மொழிகளிலிருந்து பெயர்க்கப்பட்டவை அல்லது தழுவப்பட்டவை.  இதை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.  என்னுடைய உயிர் வாழ்க்கைப் போராட்டத்திற்காக நான் இவற்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.  பதிப்பகத்தார் மொழி பெயர்ப்பு அல்லது தழுவல் என்பதை போட வியாபார நோக்கங்களுக்காக மறுத்து விட்டனர்  என்றும் எம்.வி.வி. சொன்னதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  அவர் இறந்து விட்டார் என்பதற்காக இதைச் சொல்லவில்லை என்றும் அவர் என்னிடம் நேரில் சொன்னவற்றையே சொல்கிறேன் என்றும் அந்த 7 நூற்களையும் பட்டியலிட்டார்.  இரா. மோகனின் துணைவியார் நிர்மலா மோகன் ‘வேள்வித்தீ’   பற்றி உரையாற்ற ‘காதுகள்’ பற்றி மதியழகன் பேசினார்.

மதிய உணவுக்குப் பிறகு இரண்டாவது அமர்வில் தலைமையேற்ற ந. விச்வநாதன், பேரா.மணியின் தழுவல் கருத்தை முற்றிலும் நிராகரித்தார்.   இதை என்னால் உறுதியாக மறுக்க முடியும்.  அதற்கான இடம் இதுவல்ல என்றார்.  எம்.வி.வி.யின் படைப்புகளுக்கு சாதி, மதம் போன்ற அடையாளங்களை அளிப்பது தவறு என்றார்.  தான் எம்.வி.வி.யுடன் கொண்ட நட்பு மற்றும் அவரது படைப்புகள் பற்றி விரிவாகப் பேசினார்.

இந்த அமர்வில் அமிர்தம் சூர்யா (என்று நினைக்கிறேன்) எம்.வி.வி.யின் நாவலை (‘நித்ய கன்னி’யாக இருக்கலாம்) பக்கம் பக்கமாக படித்துக் காட்டி, “மரங்கள் ஒன்றோடொன்று புணர்ந்து....” என்றெல்லாம் சொல்லி சுகி சிவத்திற்கு இணையாக எம்.வி.வி.யின் கற்பனைத் திறத்தை வியந்து கொண்டேயிருந்தார்.  அடுத்து வியாகுலன் கட்டுரை எழுதி வந்து காத்திருந்தார். 

வியாகுலன் கட்டுரை வாசிப்பதற்கு அமிர்தம் சூர்யா விடுவதாக இல்லை.  அதற்கு மேல் அரங்கில் இருக்க பொறுமையின்றி கிளம்பி வெளியேறி விட்டேன்.  அதனால் வியாகுலன் மட்டுமல்ல திருப்பூர் கிருஷ்ணன், தேனுகா, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி போன்ற பலரின் உரைகளைக் கேட்க வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது.

இந்த அமர்வுகளை ஏற்பாடு செய்யும் ‘சாகித்திய அகாதெமி’ போன்றவை ஏன் இவ்வாறு பணத்திற்கு செலவுக் கணக்கு காட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி அங்குள்ளவர்கள் யோசிக்க வேண்டும்.   ஒரே நாளில் எந்த விதமாக கால வரையறை ஏதுமின்றி 22 பேர்கள் பேச வேண்டும் என நினைப்பது எவ்வகையான நியாயம் என்று தெரியவில்லை.  ஒவ்வொருவரும் 30 நிமிடங்களுக்கு மேலாக எடுத்துக் கொள்ளும்போது 10 மணி நேரத்திற்கு மேல் ஒரு நாள் அரங்கை எப்படி நடத்துவது?  இதை பார்வையாளர்கள் மீதான வன்முறையாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.   ஒரு நாள் அமர்வில் 10 பேர் பேசுவதே போதுமானது.   இரண்டு நாள் அமர்வை ஒரே நாளில் திணிப்பது பார்வையாளர்களை விரட்டவும் தூரப்படுத்தவுமே பயன்படும்.

காலையில் அமர்வு தொடங்கிய போத இருந்த 50 பேரில் மதியம் 20 பேர்தான் மீதம் இருந்தனர்.  முடிக்கும்போது 10 பேராக இருந்திருக்கக் கூடும்.   எம்.வி.வி.க்காக வந்திருந்த அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உரைகளில் அரண்டு பாதியில் வெளியேறி விட்டனர்.  கூட்டமே இல்லாமல் அமர்வுகளை ஏற்பாடு செய்வது முன்பே சொன்னது போல செலவுக் கணக்கு காட்டத்தான் பயன்படுமே தவிர வேறு எந்த பயனும் கிட்டாது.

கும்பகோணத்தில் இரு அரசுக் கல்லூரிகளும் பல தனியார் சுயநிதிக் கல்லூரிகளும் உள்ளன.  அவர்களுடன் சாகித்திய அகாதெமி இணைந்து இதுமாதிரியான கருத்தரங்குகளை அங்குள்ள தமிழ்த் துறை மாணவர்களை மட்டுமாவது சேர்த்து ஒரு பெரிய அரங்கிலோ அல்லது கல்லூரி வளாகத்திலோ நடத்தியிருந்தால் எம்.வி.வெங்கட்ராம் பற்றிய சில செய்திகளாவது அவர்களைச் சென்றடைந்திருக்கும்.   ஒரு சிறு குழுக் கூட்டம் போல் தவிர்த்து பரவலாக சென்றடைய ஏதுவான முயற்சிகளை இனிமேலாவது சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு எடுக்க வேண்டியது அவசியம்.

நன்றி: மு.சிவகுருநாதன்  

http://musivagurunathan.blogspot.in/2011/01/blog-post_26.html 

Wednesday 20 June 2012

2007 செப்டம்பர் தென்றல் இணைய இதழில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்!

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்!


http://www.tamilonline.com/thendral/content.aspx?id=82&cid=4

புதுக்கோட்டையில் 'ஞானாலயா' என்னும் பெயரில் பா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது சொந்தச் செலவில் 50000 நூல்கள், சஞ்சிகைகள், மலர்கள், தொகுப்புகள் என ஓர் அரிய களஞ்சியத்தையே சேகரித்து வைத்திருக்கிறார். இவருக்கு உறுதுணை திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி. இவரது சேவையைப் பாராட்டி மனிதநேய மாண்பாளர், புத்தக வித்தகர், வாழ்நாள் சாதனையாளர் என்று பல்வேறு விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஞானாலயா நூலக மேம்பாட்டுக் குழுவின் சார்பில் www.gnanalayalibrary.com என்னும் புதிய இணைய தள சேவையை கவிஞர் கனிமொழி, எம்.பி. தொடங்கி வைத்துள்ளார். எதிரொலி விசுவநாதன் எழுதிய 'அறிவுச் சோலை ஞானாலயா ஆய்வு நூலகம்' என்ற நூல் ஆர்.எம். வீரப்பன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

இனி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேட்டியில் இருந்து...

கே: புத்தகங்களைத் தேடித் தேடிச் சேகரித்து ஒரு நூலகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

ப: என்னுடைய தந்தையார் கே.வி. பாலசுப்ரமணியன் நல்ல படிப்பாளி. கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். எனது தாயார் மீனாட்சியும் நல்ல கல்வியறிவு உள்ளவர். தாத்தா கிருஷ்ணசுவாமி சிறந்த கல்வியாளர். இவர்களின் வழி வந்ததாலேயே எனக்கு சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பதிலும், சேகரிப்பதிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. என் தந்தையார் ஒருமுறை சில நூறு புத்தகங்களை என்னிடம் கொடுத்து இவற்றை கவனமாகப் பாதுகாத்து வா, இதுபோன்ற பல நூல்களை நீயும் சேகரி என்று அறிவுறுத்தினார். ஒருமுறை யதேச்சையாக அந்தப் புத்தகங்களைப் புரட்டிய போது, அதில் என்னுடைய தாய்வழித் தாத்தாவான பொன்னுசாமி முதலியார் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1873-ல் படித்த போது தமிழில் முதல் பரிசு பெற்றமைக்காக அளிக்கப்பட்ட பரிசுப் புத்தகத்தைக் கண்டேன். அத்தோடு என் தாத்தா கையெழுத்திட்ட 'தனிப்பாடல் திரட்டு' என்ற புத்தகமும் இருந்தது. அது எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்கள் வெகுநாட்களாய்த் தேடிக் கொண்டிருந்த புத்தகம் என்பதை அறிந்ததும் எனக்கு வியப்பாக இருந்தது. அதுமுதல் பழைய புத்தகங்களின் மீதான எனது காதலும் தேடுதலும் அதிகரித்தது. அதுதான் இன்று ஞானாலயாவாக வளர்ந்து நிற்கிறது.

கே: இந்த புத்தக சேகரிப்புப் பணியில் உங்களுக்கு உதவியாக இருந்தவர்கள் யார் யார்?

ப: என்னை உற்சாகப்படுத்தி, இவ்வளவு பெரிய நூலகம் உருவாவதற்கு மிக முக்கிய முழுமுதற் காரணமாக இருந்தவர் ஏ.கே. செட்டியார். பல புத்தகங்கள் எனக்குக் கிடைப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது அவர்தான். சிறந்த காந்தியவாதி, 'குமரி மலர்' என்ற இதழுக்கு ஆசிரியர். உலகம் சுற்றிய முதல் தமிழர். மகாத்மா காந்தி பற்றிய குறும்படம் எடுத்து அதை அமெரிக்க ஜனாதிபதியையே பார்வையிட வைத்தவர். எனது தந்தையாரும் என்னைப் புத்தகங்கள் படிக்க ஊக்கப்படுத்தினார். அவர் இறக்கும் வரை புத்தகம் படித்துக் கொண்டிருந்தவர். எங்கள் குடும்பத்தில் மொத்தம் பன்னிரண்டு குழந்தைகள். நான் எட்டாவது பிள்ளை. அதனால்தான் கிருஷ்ணரின் நினைவாக எனக்கும் கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைத்தார்கள்.

அடுத்து எனது வாழ்வில் நான் மிக முக்கியமானவராகக் கருதுவது வி.ஆர்.எம். செட்டியார் அவர்களைத்தான். சிறந்த தமிழறிஞர், செல்வந்தர். தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழி பெயர்த்தவர். அவரை நேரில் சந்தித்த போது, அவரிட மிருந்த புத்தகங்களின் எண்ணிக்கையைக் கண்டு மலைத்துப் போனேன்.

என் துணைவியாரான டோரதியும் எனக்குப் புத்தக சேகரிப்புப் பணியில் உதவி வருகிறார். அடுத்து மிக முக்கியமானவர் முறையூர் சொக்கலிங்கம் செட்டியார். சாமிநாத சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தை உருவாக்கியிருந்தார். ரோஜா முத்தையா செட்டியாருடனான தொடர்பும் எனக்குப் பல விதங்களில் உதவியாக இருந்தது.

கே: 'ஞானாலயா' என்ற பெயருக்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உள்ளதா?

ப: ஆரம்பத்தில் 'மீனாட்சி நூலகம்' என்று எனது தாயாரின் பெயரில் இந்த நூலகத்தை நடத்தி வந்தேன். நெருக்கமான பலரும் இது ஏதோ வாடகை நூல் நிலையத்தின் பெயர் போலவே உள்ளதாகத் தெரிவித்தனர். எனவே வேறு பெயர் சூட்டுவது என்று முடிவு செய்தோம். 'ஞான ஆலயம்' என்றால் அறிவுக் கோவில் எனப் பொருள், எனவே 'ஞானாலயா' என்று பெயர் சூட்டலாம் என என் மனைவி யோசனை கூறினார். 1987-ல் பிறந்த ஞானாலயா இன்று ஓர் ஆய்வுக் கூடமாகப் பரிணமித்து நிற்கிறது.

கே: உங்கள் துணைவியார் குறித்து...

ப: என் துணைவியார் நான் பணியாற்றிய பள்ளியில் உடன் பணியாற்றியவர். இருவருக்குமே ஒருவிதமான புரிதலும், ஒத்த சிந்தனைப் போக்கும், நல்ல நட்பும் இருந்தது. அது அவர் வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போன பின்னரும் தொடர்ந்தது. பின்னர் வி.ஆர்.எம். செட்டியாரின் ஆலோசனைப்படி நாங்கள் மணம் செய்து கொண்டோம். இருவரும் சேர்ந்து பல ஊர்களுக்கு, புத்தகங்களைத் தேடிப் பயணம் செய்திருக்கிறோம். இங்கு ஆராய்ச்சிக்கு வருவோரை அவர்தான் உடன் இருந்து கவனித்துக் கொள்கிறார். நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பராமரிப்பது முதல் அவற்றை ஒழுங்குபடுத்துவது, பைண்டிங் செய்வது, வரிசைப்படுத்துவது என அனைத்துப் பணிகளையும் நேர்த்தியாகச் செய்து வருவது அவர்தான்.

கே: இவ்வளவு புத்தகங்களையும் தனி ஒருவராக நீங்கள் எப்படிச் சேகரித்தீர்கள்? அது பற்றிய அனுபவங்கள் பற்றி..

ப: மிகவும் பொறுமை தேவை. அலைச்சல்களுக்கும் ஏமாற்றத்திற்கும் குறைவிருக்காது. குறிப்பாக செட்டிநாட்டுப் பகுதியில் நாள் முழுக்க, காலை முதல் மாலை வரை காத்திருந்து வெறும் கையுடன் திரும்பியிருக்கிறேன். ஆனாலும் உள்ளம் சோர்ந்து போவதில்லை. விளக்கு வைத்தபின் எதுவும் கொடுக்கக் கூடாது என்பது நகரத்தார்கள் பின்பற்றி வரும் பழக்கம் என்பதால் நான் அதற்காக வருத்தம் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வேன். அப்போதெல்லாம் இப்பொழுது உள்ளது போல் பேருந்து வசதி கிடையாது. வாடகை சைக்கிள் தான். நாமக்கல்லில் இருந்து பேருந்தில் புறப்பட்டுத் திருமயம் சென்று அங்கிருந்து சைக்கிளிலேயே ராயவரம் போன்ற பகுதிகளுக்குச் செல்வதுண்டு. விடுமுறை நாட்களை புத்தகம் தேடுவதற்காகவும், சேகரிப்பதற்குமாகவே ஒதுக்கிக் கொள்வேன். எனது 19ஆம் வயதிலிருந்தே இந்தப் பணியில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

கே: இந்த நூலகத்தை எப்படிப் பராமரிக்கிறீர்கள்? அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து...

ப: இதுநாள் வரை எங்கள் கைப்பணத்தைக் கொண்டுதான் இந்த நூலகத்தை உருவாக்கியுள்ளோம். அவ்வப்பொழுது சில நன்கொடையாளர்கள் அளிக்கும் பணமும் அலமாரிகள், நாற்காலிகள் வாங்கவும், நூலகப் பராமரிப்புக்குமே சரியாகப் போய்விடும். எங்கள் ஓய்வூதியம், பி.எ·ப்., கிராச்சுவிட்டி போன்றவற்றைக் கொண்டுதான் புத்தகங்கள் வாங்கினோம். நிலம் வாங்கினோம். கட்டடம் கட்டினோம். எல்லாமே சுய உழைப்புச் சம்பாத்தியமே அன்றி வேறில்லை. ஆனாலும் தற்பொழுது இதனை பராமரிப்பது சற்று கடுமையாகத்தான் உள்ளது. புத்தகங்களை பூச்சிகள் அரிக்காமல் இருக்க நாப்தலின் வாங்குவது, தூசி படியாமல் தினம்தோறும் சுத்தம் செய்வது, மின்சாரக் கட்டணம், பராமரிப்புக் கட்டணம் எனச் செலவு கட்டுகடங்காமல் போய்க் கொண்டு இருக்கிறது. மேலும், சமீபத்தில் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பெரிய விபத்தால், லட்சக்கணக்கான ரூபாய் கையிருப்பு மருத்துவ சிகிச்சைக்கே சரியாகப் போய்விட்டது. ஆகவே நூலகத்துக்கான நிதிக்கும், பராமரிப்புக்கும் மிகுந்த பணத்தேவை உள்ளது. ஆகவேதான், தற்பொழுது இங்கு வந்து தங்கி ஆய்வு செய்யும் மாணவர்களுக்காக ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளோம். அதன்படி ஆய்வு மாணவர் 1000 ரூபாய் மட்டும் செலுத்தினால் அவர் ஞானாலயாவின் ஆயுள் உறுப்பினர் ஆகி விடுவார். அவர் ஞானாலயாவை தனது ஆயுள்காலம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தப் பணமும் நூலகத்தின் பராமரிப்புக்குத் தானே அன்றி வேறு எதற்கும் இல்லை.

கே: யார் வேண்டுமானாலும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா? அல்லது மாணவர்கள், ஆய்வாளர்கள் போன்றோரை மட்டும் தான் இந்த நூலகத்தில் அனுமதிப்பீர்களா?

ப: மாணவர்கள், ஆய்வாளர்கள் மட்டுமல்ல; எல்லோருக்காகவும் தான் ஞானாலயா. யார் வேண்டுமானாலும் வரலாம். இங்குள்ள பள்ளி மாணவர்கள் அடிக்கடி வந்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர். பல்வேறு போட்டியில் பங்குபெறுகின்றனர். பரிசு பெறுகின்றனர். கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வந்து பார்வையிட்டு, குறிப்புகள் விவரங்கள் சேகரித்துச் செல்கின்றனர். சிறு கருத்தரங்கங்களும் அவ்வப்போது இங்கு நடப்பதுண்டு. சமீபத்தில் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளி லிருந்து கூட மாணவர்கள் வந்து தங்கி ஆய்வு செய்தனர்.

கே: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

ப: இது வெறும் நூலகம் மட்டும் அல்ல. நமது சமூகத்தின் பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் பற்றிய ஆவணக் காப்பகமும் கூட. பழைய நூல்கள் பலவற்றை டிஜிடைஸ் செய்ய வேண்டும். அல்லது மைக்ரோ ·பிலிமில் பதிய வேண்டும். பல்வேறு பழைய இதழ்கள், பத்திரிகைகள் முதலியவற்றைத் தேடிப் பாதுக்காக்க வேண்டும். அவற்றை ஆவணப்படுத்த வேண்டும். எனக்கு 65 வயதாகி விட்டது. எனது துணைவியாருக்கும் வயதாகி விட்டது. ஞானாலயா எங்கள் தனிப்பட்ட இருவரின் சொத்தல்ல. இந்த மொத்த தமிழ்ச் சமுதாயத்தினருக்கே உரித்தானது. இது உலகெங்கும் உள்ள தமிழர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இதற்காக, தற்பொழுது இங்குள்ள நூல்கள் பற்றிய விவரங்களை இணையத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறோம். அதற்கான கட்டணம், சேவை, மாதாந்திரத் தொகை போன்றவையும் மிக அதிகமாகும் போல் உள்ளது.

குறிப்பாக, இங்குள்ள புத்தகங்களின் விவரப் பட்டியலை, தலைப்பு வாரியாக, துறை வாரியாகப் பிரித்து தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அது மிகக் கடினமான ஒன்றாக உள்ளது. அதற்கான ஆள்பலம் எங்களிடம் இல்லை. சில நண்பர்களின் உதவியுடன் நாங்களே சிரமப்பட்டுச் செய்கிறோம். பட்டியலிடவும், அதைக் கணினியில் ஏற்றவும் உதவினால் மிகவும் நல்லது.

கே: உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை என்ன?

ப: எங்களிடம் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஆங்கிலப் புத்தகங்களும் அடங்கும். துறைவாரியாகவும், நூல் பெயர் வாரியாகவும் அவற்றை வரிசைப்படுத்தியுள்ளோம். ஆகவே தேடி எடுப்பது மிக எளிது. காந்தி, விவேகானந்தர், பாரதியார் என்று எழுத்தாளர் வாரியாகவும் வரிசைப்படுத்தி உள்ளோம். விழா மலர்கள், செய்தித் தொகுப்புகள், கட்டுரைகள், தின இதழ்கள் என்று தனியாகவும் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறோம். வாசனின் 'நாரதர்' தொகுப்பு எங்களிடம் உள்ளது. குமரிமலர், ஏ.கே.செட்டியாரின் உலக நாடுகள் குறித்த பயண நூல்கள், சக்தி வை. கோவிந்தனின் பிரசுரங்கள் என பல்வேறு இதழ்களையும், நூல்களையும் நாங்கள் தொகுத்து வைத்திருக்கிறோம்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தத்துவங்கள் பற்றிய பல பழைய தமிழ் நூல்கள் எங்களிடம் உள்ளன. அந்தக் காலத்திலேயே அவருக்குத் தமிழகத்தில் எவ்வளவு செல்வாக்கு இருந்தது என்பதை இந்த நூல்களைப் படித்தால் உணர முடியும். ஜம்புநாதன் தமிழாக்கிய வேதத் தொகுப்புகளும் உள்ளன. அக்காலத்தில் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்ட பல நூல்களும் எங்களிடம் உள்ளன.

எங்களிடமிருந்து பெற்று மறுபதிப்பு கண்ட நூல்கள் ஐநூறாவது இருக்கும் என்று தாராளாகச் சொல்லலாம்.

முதல் பதிப்புப் புத்தகம் சேகரிப்பதில் நான் தனி ஆர்வம் காட்டி வந்திருக்கிறேன். முதல் பதிப்புகள் அனைத்துமே பொக்கிஷம் போன்றவை. அவை வெறும் புத்தகமாக மட்டுமல்லாமல் பல்வேறு வரலாற்றுப் பின்னணி கொண்டவையாக இருக்கும். குறிப்பாக பாரதியின் சுதேச கீதங்கள், உ.வே.சா.வின் மணிமேகலை போன்றவற்றின் முதல் பதிப்பில் இடம்பெற்ற பல விஷயங்கள் அதற்குப் பிறகு வந்த பதிப்புகளில் இல்லை.

கே: நீங்கள் தமிழகத்தின் தனியார் நூலகங்களிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறீர்கள். இதை எப்படிச் சாதித்தீர்கள்?

ப: எங்களுக்கு ஆர்வம், பொழுது போக்கு எல்லாமே புத்தகம் சேகரிப்பதுதான். எங்களது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அதில் ஆர்வம் இருந்தது. எங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் வரை திரைப்படம், நாடகம் என எந்தப் பொழுது போக்கு அம்சங்களிலும் ஆர்வம் காட்டாமல் சதா புத்தகப் பணியிலேயே இருந்தோம். ஒருமுகப்பட்ட கடும் உழைப்புதான் நூலகத்தின் உயர்வுக்குக் காரணம்.

மற்ற நூலகங்களில் நூலகர் உங்களுக்குத் தேவையான நூல்களைத் தேடி எடுத்துத் தரலாம். ஆனால் இங்கு உங்களுக்குத் தேவையான நூல் என்ன, அதன் பின்னணி, பதிப்பு பற்றிய வரலாறு, அதோடு தொடர்புடைய பிற சம்பவங்கள், பிற நூல்கள் என எல்லாவற்றையும் ஒருங்கே தெரிந்து கொள்ள முடியும். என்னால் விளக்கவும் முடியும். இங்குள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களில் எந்தப் புத்தகம் எந்த அலமாரியில் எந்த வரிசையில் உள்ளது என்பதை என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். எங்களுக்கு வரும் எந்தப் புத்தகமாக இருந்தாலும், நான் படித்துப் பார்த்த பின்புதான் உள்ளே அலமாரிக்குச் செல்லும். அதுவரை அதைத் தனியாகத்தான் அடுக்கி வைத்திருப்போம்.

கே: இங்கு வந்து தங்கியிருந்து ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கு என்ன உதவிகளைச் செய்து வருகிறீர்கள்? அதற்கான கட்டணம் என்ன?

ப: இதுநாள் வரை இவ்வளவுதான் கட்டணம் என்று எதுவும் வசூலித்ததில்லை. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்து தங்கி ஆய்வு செய்பவர்களுக்குத் தங்கும் இடம், தனியறை போன்ற வசதிகளை நாங்கள் சொந்தச் செலவில்தான் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களிடம் முன்னரே இடவசதி பற்றி அறிந்து கொண்டபின் வருவதே நல்லது. இடம் கிடைக்காமல் போவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு.

கே: தென்றல் வாசகர்கள் உங்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும்?

ப: வாசகர்கள் தங்களிடமுள்ள பழங்கால இதழ்களை, தொகுப்புகளை, நூல்களை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். நூலகப் பராமரிப்பு, இணைய சேவை போன்றவற்றுக்கு உதவினால் மகிழ்ச்சிதான். நிலம் வாங்க வேண்டும், நூலகத்தை விரிவாக்க வேண்டும் என்று பல திட்டங்கள் உண்டு. சமீபத்தில் நூலகத்துக்கு வந்து பார்வையிட்ட பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு நூலக வளர்ச்சிக்கு ஆவன செய்வதாகக் கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் ரகுபதி அவர்களும் உதவி செய்வதாக உறுதி கூறியிருக்கிறார். ஆர்.எம்.வீ. போன்றவர்கள் உதவி புரிந்து வருகிறார்கள். வாசகர்களும் தங்கள் விருப்பத்துக்கேற்றவாறு உதவினால் மகிழ்ச்சிதான்.

முகவரி:
ஞானாலயா ஆய்வு நூலகம்
எண்.6, பழனியப்பா நகர்
திருக்கோகர்ணம் அஞ்சல்
புதுக்கோட்டை - 622002
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 04322-221059
செல்பேசி: +91 9965633140

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

ஞானாலயா ஒரு வித்தியாசமான தமிழ் ஞானப் பணி!


தமிழ் நாட்டில் ஞானாலயா ஒரு வித்தியாசமான தமிழ் ஞானப் பணி! - முனைவர். செ. அ. வீரபாண்டியன் -

தமது மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரிப் பேராசிரியர் பணிகளிலிருந்து ஒய்வு பெற்றுள்ள பா.கிருஷ்ணமூர்த்தி - டோரதி கலப்பு மணத் தம்பதியினர் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து, தமது சேமிப்பில், உருவாக்கிப் பாதுகாத்துவரும் தனியார் நூலகமே ஞானாலயா.பாரதியாரின் கவிதைகளில் அச்சில் வெளிவந்த முதல் கவிதை "தனிமை இரக்கம்'. அக்கவிதை வெளிவந்த இதழ் "விவேக பானு'. 1842 ஆம் வருடத்தில் வெளிவந்த நூல் வீரமாமுனிவரின் சதுரகராதி. 1850 ஆம் வருடத்தில் வெளிவந்த நூல் தமிழ் - இலத்தீன் - பிரெஞ்சு அகராதிகள் இவ்வாறு தமிழில் அச்சில் முதலில் வெளிவந்த நூல்களைத் தேடிக்கொண்டு வந்து பாதுகாத்து, ஆர்வமுள்ளவர்களுக்குப் படிக்க உதவும் இடமே தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா ஆகும். பாரதிதாசன், பெரியார், அண்ணா, உ.வெ.சா உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டப் படைப்புகளில் முதல் பதிப்பில் இருந்தவை எவை, அவற்றுள் பிந்தைய பதிப்புகளில் விடுபட்டவை எவை என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் இடம் ஞானாலயா. ஏன் அவை விடுபட்டன, பெரியார் நடைமுறைப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அவருக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் யார், 1908 இல் வெளிவந்த பாரதியாரின் "ஸ்வதேச கீதங்கள்' கவிதை நூலில் மதுரை ஸ்ரீ முத்துக்குமாரபிள்ளையின் கவிதை ஏன் இடம் பெற்றது உள்ளிட்ட அரிய விளக்கங்களை ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தியிடம் பெறலாம்.


மது மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரிப் பேராசிரியர் பணிகளிலிருந்து ஒய்வு பெற்றுள்ள பா.கிருஷ்ணமூர்த்தி - டோரதி கலப்பு மணத் தம்பதியினர் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து, தமது சேமிப்பில், உருவாக்கிப் பாதுகாத்துவரும் தனியார் நூலகமே ஞானாலயா.தமது மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரிப் பேராசிரியர் பணிகளிலிருந்து ஒய்வு பெற்றுள்ள பா.கிருஷ்ணமூர்த்தி - டோரதி கலப்பு மணத் தம்பதியினர் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து, தமது சேமிப்பில், உருவாக்கிப் பாதுகாத்துவரும் தனியார் நூலகமே ஞானாலயா. ரூபாய் பத்து லட்சம் செலவில் 1800 சதுர அடியில் அமைந்துள்ள இந்நூலகத்தில் அரிய நூல்கள் மட்டுமின்றி, முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்துக் கடிதங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள சுமார் 500க்கும் அதிகமான மறுபதிப்புகளின் மூலநூல்கள் ஞானாலயாவிடமிருந்தேப் பெறப்பட்டன. சக்தி கோவிந்தன் இலக்கியப் படைப்புகளை நாட்டுடைமையாக்கி, வறுமையில் உழன்ற அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி உதவக் காரணமாக இருந்தது ஞானாலயா. சுந்தர ராமசாமி தன் கதைத்தொகுப்பு முயற்சியின்போது தன்னிடமில்லாத பல கதைகளை பெற்ற இடம் ஞானாலயா.

வாரமின்றி அமைதியாக இது போன்று பல தமிழ்ஞானப் பணிகளை பா.கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியினர் ஆற்றி வருவதைக் கண்ணுற்ற தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் கீழ்வரும் கருத்தினைப் பதிவு செய்துள்ளார். '' எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியருக்கு பத்மபூஷன் விருது கிடைக்கச் செய்திருப்பேன்.''. பத்மபூஷன் விருது என்பது இந்திய அரசின் உயர்ந்தபட்ச விருதாகும்

இந்நூலகத்தில் அரிய நூல்கள் மட்டுமின்றி, முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்துக் கடிதங்களும் சேகரிக்கப்பட்டுள்ளனஞானாலயாவுக்கு வருகை தரும் ஆய்வாளர்களுக்கு தங்கும் இடமும் உணவு வசதியும் ஏற்பாடு செய்துதரப் படுகின்றன. 



விரும்பித்தரும் நன்கொடைகளைக் கொண்டு ஞானாலயாவினை நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் விரிவுபடுத்தும் முயற்சியிலும், தங்கள் காலத்திற்குப் பின்னும் இத்தமிழ்ஞானப் பணிகள் தொடர ஞானாலயாவை ஒரு பொது அறக்கட்டளையாக மாற்றும் முயற்சிகளிலும் கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.  

ஞானாலயா முகவரி: 

ஞானாலயா ஆய்வு நூலகம், 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம் அஞ்சல், 
புதுக்கோட்டை, 622002 இந்தியா 
தொலைபேசி: +91 4322221059. 

Gnanalaya Research Library, 
6, Pazhaniyappa Nagar, Thirukkokarnam, 
Pudukkottai, 622002, India. 
Phone: +91 4322221059.

ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்ற வேண்டுகோள் பலராலும் நீண்டகாலமாகவே பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் பதிவுகள் இணைய தளத்தில் 2007 நவம்பர் இதழில் வெளிவந்த ஒரு சிறு கட்டுரை.இங்கே பதிவுகள்,வ ந கிரிதரனுக்கும் கட்டுரை எழுதிய முனைவர். செ. அ. வீரபாண்டியன் இருவருக்கும் நன்றியுடன்!
http://www.geotamil.com/pathivukal/gnanalaya_research_library.htm  


சுமார் இருபது மாதங்களுக்கு முன்னால், புதுக்கோட்டை ஞானாலயா குறித்த ஒரு அருமையான செய்தி கட்டுரை ஹிந்து நாளிதழில், ஒலிம்பியா ஷில்பா ஜெரால்ட் எழுதியதை நண்பர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக–ஞானாலயா குறித்த தெளிவான சித்திரத்தை உங்களுக்கு இந்த செய்திக் கட்டுரை கொடுக்கும் என்றே நம்புகிறேன்.



ஞானாலயா, அரசு, பல்கலைக் கழக நூலகங்கள் செய்ய முடியாத அல்லது செய்ய முனையாத அபூர்வமான புத்தக சேகரமாக இன்றைக்கு திருமதி டோரதி- கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரின் தொடர்ச்சியான உழைப்பினால் உருவாகியிருக்கிறது.இந்தப் புத்தக சேகரத்தைப் பயன் படுத்திக் கொள்ளாத அரசியல், இலக்கியப் பிரபலங்களே அனேகமாக இல்லையென்று சொல்லி விடலாம்!பழைய இலக்கியங்கள், நூல்கள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்குக் கற்பகத் தருவாக, இந்த ஆய்வு நூலகம் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

எழுபது வயதிலும் இதன் நிறுவனர் திரு பா.கிருஷ்ணமூர்த்தி,தேனீ போல சுறுசுறுப்பாக இன்னமும் புத்தகங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார். நூல்களைக் குறித்து பதிப்பிக்கப்பட்ட விதம் குறித்து சுவாரசியமான தகவல்களை ஆர்வத்தோடு பலருடன் தனியாகவும் விழா மேடைகளிலும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.எழுதப்பட்ட நூல்களைக் குறித்த இவரது வாய்மொழித் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டிய வரலாற்றுத் தொகுப்பாகவும் இருக்கிறது.

புதுக்கோட்டை ஞானாலயா வெறும் நூல்களை சேகரிக்கும் கிடங்கி அல்ல!எந்தப்புத்தகத்தில் என்ன எழுதப் பட்டிருக்கிறதென்றே தெரியாத நூலகர்களைக் கொண்டிருக்கும் நூலகமும் அல்ல! ஒரு ஆராய்ச்சிக் கருவூலம்! மிகக் கவனமாகத் தகவல்களைத் தலைப்பு வாரியாகத் தொகுத்து வைத்திருக்கும் ஒரு அறிவுக் களஞ்சியம்!


ஞானாலயா, தன்னுடைய சேவையை விரிவுபடுத்தவும், சேகரத்தில் உள்ள புத்தகங்களை மின்னாக்கம் செய்வதிலும், அதிகரித்து வரும் புத்தகங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் புதிய கட்டடமொன்றை மாடியில் கட்டுவதற்காகவும், இன்னமும் அதிக அளவில் தேடி வருவோருக்குப் பயன்படும் விதத்தில் நூலகத்தைக் கணினிமயமாக்கவும், அதன் செலவினங்களுக்காகவும் உங்கள் ஒவ்வொருவரது உதவிக் கரங்களையும் எதிர்பார்க்கிறது.

எவ்வளவு சிறிய தொகையாக இருந்தபோதிலும், உங்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இந்த அறிவுக் களஞ்சியத்தைப் பாதுகாப்பதிலும், முன்னெடுத்துச் செல்வதிலும் இருக்க வேண்டும் என்று உங்களை இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறோம். இந்தத் தகவல்களை, உங்களுடைய கூகிள் ப்ளஸ், வலைப்பதிவுகள், தனிப்பட்ட முறையில் நண்பர்களுக்கு மின்னஞ்சல் என்ற வகையில் பகிர்ந்து கொள்ளவும் வேண்டிக் கொள்கிறோம். ஊருக்கே நீர் தரும் ஊருணியாக குறுகி நிற்காமல், தமிழ்கூறும் நல்லுலகத்துக்கே அறிவுக் கேணியாக இருக்கும் இந்த ஞான தீபத்தை ஏந்திச் செல்வது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.

தொடர்புக்கான முகவரி, மற்றும் நிதி அனுப்புவதற்குத் தேவையான விவரங்கள்:

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

e-mail: gnanalayapdk@gmail.com

வங்கி விவரம்:
Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
IFS CODE: UCBA0000112

பண்புடன் கூகிள் வலைக் குழுமம் மற்றும் வல்லமை மின்னிதழில் வெளியான செய்திக் கட்டுரையின் மீள்பதிவு. கட்டுரையாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

Monday 18 June 2012

ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா


கடந்த மார்ச் மாதப் பிற்பகுதியில் ஏறத்தாழப் பத்து நாட்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் இலக்கம் 6, பழனியப்பா நகரில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகத்தில் அரிய புத்தகங்கள், பழம் பெரும் இதழ்களுடன் உறவாடி மகிழ்ந்து மிகுந்த பயன் அடைந்தேன். அங்கிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்து வந்தேன்.


ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய அரிய நூல்கள், இதழ்கள் தொடங்கிச் சமீபகால அனைத்து சிற்றிதழ்களும் முக்கிய நூல்களும் ஒருங்கே ஒரே கூரையின் கீழ் படிக்கக் கிடைப்பது கிடைத்தற்கரிய வாய்ப்பு. 

ஆய்வாளர்களுக்கென்றே அமைந்த இந்நூலகத்தில் உள்ள எண்பத்தைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், தொகுப்புகளைப் பராமரிக்கவும் உதவியாளர்களை நியமித்து ஆய்வாளர்களுக்குத் துணை புரியவும் ஆண்டொன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் கூடுதலாகவே செலவு ஆகிறது என்பதைக் கேட்டு அறிந்தேன்.

 
புத்தகங்களையும் இதழ்களையும் நேசிக்கும் பா. கிருஷ்ண மூர்த்தி, டோரதி கிருஷ்ண மூர்த்தி தம்பதியர் தங்களின் பணிக்காலக் கொடைகள் மாதாந்திர ஓய்வூதியங்கள் ஆகியவற்றின் பெரும் பகுதியை ஞானாலயா நூலகப் பராமரிப்பிற்குச் செலவிட்டு வருகிறார்கள். அப்படியும் இந்த அரிய நூலகத்தின் பராமரிப்பிற்கு அது போதுமானதாக இல்லை. மிகுந்த சிரமத்துடன் தம்பதியர் விடாப்பிடியாக நூலகத்தைப் பராமரித்து வருவது கண்டு மனம் நெகிழ்ந்தேன்.




இங்குள்ள நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய நூல்கள், இதழ் தொகுப்புகள் ஆகியவை கையாளும் நிலையில் இல்லை. இவற்றை உடனடியாக மின் புத்தகங்களாக மாற்றாவிடில் அவற்றை நாம் இழக்க வேண்டிவரும். இதற்கும் பெருமளவில் நிதி உதவி தேவைப்படுகிறது.


நூலகப் பராமரிப்பிற்கும் நவீன தொழில் நுட்பங்களைக் கையாண்டு அரிய நூல்களையும் இதழ் தொகுப்புகளையும் நிலைத்திருக்கச் செய்யவும் ஞானாலயா உதவிக் கரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. நற்பணிகளுக்கு உதவத் தயங்காத நண்பர்கள் ஞானாலயாவுக்கும் தங்களால் இயன்ற நிதி அளிக்க முன்வந்தால் மனம் மகிழ்வேன்.


அரசின் சக்கரங்கள் மிக மெதுவாகவே சுழலும் என்பதை அறிவீர்கள். உதவி கோரி அரசை அணுகுவதைவிட வாளாவிருந்துவிடலாம் எனச் சலிப்பு தோன்றிவிடுவதே நமது அனுபவமாக இருந்து வருகிறது. இந்திலையில் யூனெஸ்கோ போன்றவற்றின் உதவியை முறைப்படி அணுக என்ன வழி என்பதை அறிந்தோர் ஞானாலயாவுக்கு அந்தச் சரியான வழியைக் காட்டி உதவ வேண்டுகிறேன். மத்திய அரசின் கலாசாரத் துறையிடம் உதவி கோர எப்படி அணுக வேண்டும் என்ற விவரங்களை அறிந்தோர் அவற்றையும் தெரிவிக்கலாம்.


இவை உடனடியான தேவைகளை நிறைவு செய்யப் போதா. ஆகவே தனிப்பட்ட முறையில் நண்பர்கள் தம்மாலியன்ற நிதி உதவி செய்வதும் அவசியமாகிறது.


ஞானாலயாவின் முழு முகவரியினையும் வங்கி விவரங்களையும் கீழே கொடுத்துள்ளேன்.


அன்னை பராசக்தி தமிழ் அன்பர்களைத் தூண்டிவிட்டு ஞானாலயா வின் மீது கடைக்கண் காட்டி அருள்வாள் என்பதை அறிவேன்.


உதவிக் கரம் நீட்ட விரும்புவோர் தொடர்பு கொள்ள:



ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.


தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140


வங்கி விவரம்:


Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India)

.
IFS CODE: UCBA0000112

புதுத்திண்ணை இணைய இதழில் திரு மலர் மன்னன் அவர்கள் எழுதிய கட்டுரை. திரு மலர் மன்னன் அவர்களுக்கும், புதுத்திண்ணைக்கும் நன்றி.

ஞானாலயா பற்றி ஹிந்து நாளிதழில்..

சுமார் இருபது மாதங்களுக்கு முன்னால், புதுக்கோட்டை ஞானாலயா குறித்த ஒரு அருமையான செய்தி கட்டுரை ஹிந்து நாளிதழில், ஒலிம்பியா ஷில்பா ஜெரால்ட் எழுதியதை நண்பர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக--ஞானாலயா குறித்த தெளிவான சித்திரத்தை உங்களுக்கு இந்த செய்திக் கட்டுரை கொடுக்கும் என்றே நம்புகிறேன்..

ஞானாலயா, அரசு, பல்கலைக் கழக நூலகங்கள் செய்ய முடியாத அல்லது செய்ய முனையாத அபூர்வமான புத்தக சேகரமாக இன்றைக்கு திருமதி டோரதி-கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரின் தொடர்ச்சியான உழைப்பினால் உருவாகியிருக்கிறது.இந்தப் புத்தக சேகரத்தைப் பயன் படுத்திக் கொள்ளாத அரசியல், இலக்கியப் பிரபலங்களே அனேகமாக இல்லையென்று சொல்லி விடலாம்!பழைய இலக்கியங்கள், நூல்கள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்குக் கற்பகத் தருவாக, இந்த ஆய்வு நூலகம் பயன் பட்டுக் கொண்டிருக்கிறது.



எழுபது வயதிலும் இதன் நிறுவனர் திரு பா.கிருஷ்ணமூர்த்தி,தேனீ போல சுறுசுறுப்பாக இன்னமும் புத்தகங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார். நூல்களைக்குறித்து பதிப்பிக்கப்பட்ட விதம் குறித்து சுவாரசியமான தகவல்களை ஆர்வத்தோடு பலருடன் தனியாகவும் விழா மேடைகளிலும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.எழுதப்பட்ட நூல்களைக் குறித்த இவரது வாய்மொழித் தகவல்கள் ஆவணப்படுத்தப்படவேண்டிய வரலாற்றுத் தொகுப்பாகவும் இருக்கிறது.

புதுக்கோட்டை ஞானாலயா வெறும் நூல்களை சேகரிக்கும் கிடங்கி அல்ல! எந்தப்புத்தகத்தில் என்ன எழுதப்
பட்டிருக்கிறதென்றே தெரியாத நூலகர்களைக் கொண்டிருக்கும் நூலகமும் அல்ல!ஒரு ஆராய்ச்சிக் கருவூலம்! மிகக் கவனமாகத் தகவல்களைத் தலைப்பு வாரியாகத் தொகுத்து வைத்திருக்கும் ஒரு அறிவுக் களஞ்சியம்!

ஞானாலயா, தன்னுடைய சேவையை விரிவுபடுத்தவும், சேகரத்தில் உள்ள புத்தகங்களை மின்னாக்கம் செய்வதிலும், அதிகரித்து வரும் புத்தகங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் புதிய கட்டடமொன்றை மாடியில் கட்டுவதற்காகவும், இன்னமும் அதிக அளவில் தேடிவருவோருக்குப் பயன்படும் விதத்தில் நூலகத்தைக் கணினிமயமாக்கவும், அதன் செலவினங்களுக்காகவும் உங்கள் ஒவ்வொருவரது உதவிக் கரங்களையும் எதிர்பார்க்கிறது.

எவ்வளவு சிறிய தொகையாக இருந்தபோதிலும், உங்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இந்த அறிவுக் களஞ்சியத்தைப் பாதுகாப்பதிலும், முன்னெடுத்துச் செல்வதிலும் இருக்க வேண்டும் என்று உங்களை இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறோம். இந்தத் தகவல்களை, உங்களுடைய கூகிள் ப்ளஸ், வலைப்பதிவுகள், தனிப்பட்ட முறையில் நண்பர்களுக்கு மின்னஞ்சல் என்ற வகையில் பகிர்ந்து கொள்ளவும் வேண்டிக் கொள்கிறோம். ஊருக்கே நீர் தரும் ஊருணியாக குறுகி நிற்காமல், தமிழ்கூறும் நல்லுலகத்துக்கே அறிவுக் கேணியாக இருக்கும் இந்த ஞான தீபத்தை ஏந்திச் செல்வது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.

தொடர்புக்கான முகவரி, மற்றும் நிதி அனுப்புவதற்குத் தேவையான விவரங்கள்:

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140


வங்கி விவரம்:

Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
IFS CODE: UCBA0000112



 The Hindu : NATIONAL / TAMIL NADU : Book collection his passion »


தகவல் உதவி. https://plus.google.com/u/0/101258957068620539200/posts/3i4sm3UECFM

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...