Monday 25 June 2012

ஞானாலயாவின் அவசியம்: வரலாற்று உணர்வு நம்மிடம் இருக்கிறதா?

சாஹித்ய அகாடெமி அவ்வப்போது இந்த மாதிரி எழுத்தாளர்களை அறிமுகம்செய்து வைக்கிற நிகழ்ச்சிகளை நடத்துக்கிறது! கும்பகோணத்தில் சென்ற ஆண்டு, திரு எம் வி வெங்கட்ராம் அவர்களைப்பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் ஞானாலயா திரு பா.கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டு உரையாற்றி  இருக்கிறார்.

தமிழின் மிகச்சமீபத்திய, முந்திய தலைமுறை எழுத்தாளர்களைக் கூட நமக்கு சரியான அறிமுகம் இல்லை!ஞானாலயா திரு பா. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இல்லையென்றால் இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்ற குறைந்தபட்ச வரலாற்றுச் செய்திகள் கூட வருகிற தலைமுறைக்கு மிஞ்சியிருக்காது.



இந்த நிகழ்ச்சியில் திட்டமிடாமல், சுமார் இருபத்திரண்டு பேச்சாளர்களைப் பேச ஏற்பாடு செய்திருந்தது, சாஹித்ய அக்கடமி ஏனோதானோ ரகத்தில் தான் நடத்தியமாதிரி ஒரு சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. இணையத்தில் தேடிய போது இந்த நிகழ்ச்சியைப் பற்றிய இந்தப் பகிர்வு கிடைத்தது. இதுவும் முழு சித்திரத்தைக் கொடுக்கவில்லை என்பது தனி விஷயம்!


இனி அந்தப் பதிவில்....

எம்.வி. வெங்கட்ராமுடனான தனது சந்திப்பு, நட்பு பற்றியும் சொல்லி அவரது எழுத்துக்களை சிலாகித்து பேசியவர்களாக வே.மு. பொதியவெற்பன், தேனுகா, தஞ்சை ப்ரகாஷ் ஆகியோர்களை பட்டியலிட்டு எம்.வி.வி. பற்றி இன்னமும் அதிக தகவல்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.  நேரம் கிடைக்கும்போது இடைஇடையே அச்செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று சொல்லி ஒரு நீண்ட அறிமுக உரையை இராம. குருநாதன் நிகழ்த்தினார்.



பின்னர் பேச வந்த சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் எம்.வி.வி.யின் நாவலைப் படிக்காமல் சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதப்பட்ட நாவல் என்று விமர்சனம் எழுதியதை குறிப்பிட்டு பேசினார்.  அ. மார்க்ஸ் போன்றவர்கள் தமிழிலக்கியத்தை தலித் இலக்கியம், செட்டியார் இலக்கியம், முதலியார் இலக்கியம் என்றெல்லாம் சாதி ரீதியாக வகைப்படுத்தி வைத்துள்ளனர் என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.  தமிழில் இப்படியெல்லாம் அணுகும் போக்கு உள்ளது என்பதை ‘கண்டுபிடித்து’  வெளிப்படுத்தினார்.



மேலும் இந்திய இலக்கிய சிற்பிகள் நூல் வரிசையில் எம்.வி.வி.யைப் பற்றிய நூல் ஒன்றை தேனுகாவை எழுதித் தருமாறும் அதை சாகித்திய அகாதெமி கண்டிப்பாக வெளியிடும் என்றும் அறிவித்தார்.  எம்.வி.வி.யின் நாவல்கள் மற்றும் படைப்புகள் பற்றி வந்துள்ள விமர்சனங்களை குறிப்பிட்டு சிற்பி பேசி முடித்தார்.

மைய உரையாற்றிய சாகித்திய அகாதெமி பொதுக்குழு மற்றும் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் இரா. மோகன், பி.எஸ். ராமையா எப்படி எம்.வி.வி.க்கு வழிகாட்டினார் என்பதைத் தெரிவித்தார்.   தி.ஜா., கு.ப.ரா., க.நா.சு. போன்ற சமகால எழுத்தாளர்களோடு எம்.வி.வி.யைத் தொடர்புப்படுத்தி தனது பேச்சை நிறைவு செய்தார்.

சிறப்பு விருந்தினர்களின் உரைக்குப் பிறகு நன்றியுரை சொல்ல வந்த ரவி சுப்பிரமணியன் எம்.வி. வெங்கட்ராமுடன் உள்ள தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.  அவரைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்கு நிறைய செலவு பிடிக்கும்.  எனவே சாகித்திய அகாதெமி உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முதல் அமர்வில் தலைமையேற்ற அ. மார்க்ஸ், கும்பகோணத்தில் நாங்கள் நெருங்கி உறவாடிய எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு என்றும் அவர் அளவிற்கு இல்லையென்றாலும் எம்.வி.வி.யுடனும் தொடர்பு இருந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார்.  இவரது படைப்புகளில் ‘காதுகள்’ தம்மை ஈர்க்கவில்லையயன்றும் ‘நித்ய கன்னி’, ‘வேள்வித் தீ’  போன்றவற்றை சிறந்த படைப்புகளாக பார்ப்பதாகவும் கூறினார்.

எம்.வி.வி. பாரதத்தின் மேல் அதிக ஈடுபாடு கொண்டவர்.  தமிழ்ச் சூழலில் கம்பராமாயணம் பேசப்பட்டதைப் போல வியாசபாரதமோ, நல்லாபிள்ளை பாரதமோ பேசப்பட்டதில்லை.  பாரதத்தின் மீது அதீத பற்றுடைய எம்.வி.வி. முயன்றிருந்தால் தமிழுக்கு ஒரு அருமையான பாரதம் கிடைத்திருக்கும் என்றார்.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழலில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எம்.வி.வி., அத்வானியை சந்தித்ததையும் குறிப்பிட்டு இந்துத்துவத்துடன் இணக்கமாக இருந்த எழுத்தாளர் என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொன்னார்.

தமிழ்நாட்டில் சிறுபான்மை சமூகமான செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த எம்.வி.வி.க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.  இன்றும் கூட செளராஷ்டிரா மொழிக்கு வரி வடிவம் இல்லை.  அவர்களது மொழி கூட பலரால் கிண்டல் செய்யப்படுகிறது.  இவர் தனது இறுதிக் காலத்தில் செளராஷ்டிரா மொழிக்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.  இந்தப் பின்னணியில் அவரது அடையாள அரசியலையும் இந்துத்துவத்தின்பால் அவர் சாய நேர்ந்ததையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த அமர்வில் பேசிய பேரா. மணி எம்.வி.வி.யின் படைப்புகளில் 7 மட்டும் அசலானது; அவர் எழுதியது.  எஞ்சியவை அனைத்தும் பிற மொழிகளிலிருந்து பெயர்க்கப்பட்டவை அல்லது தழுவப்பட்டவை.  இதை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.  என்னுடைய உயிர் வாழ்க்கைப் போராட்டத்திற்காக நான் இவற்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.  பதிப்பகத்தார் மொழி பெயர்ப்பு அல்லது தழுவல் என்பதை போட வியாபார நோக்கங்களுக்காக மறுத்து விட்டனர்  என்றும் எம்.வி.வி. சொன்னதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  அவர் இறந்து விட்டார் என்பதற்காக இதைச் சொல்லவில்லை என்றும் அவர் என்னிடம் நேரில் சொன்னவற்றையே சொல்கிறேன் என்றும் அந்த 7 நூற்களையும் பட்டியலிட்டார்.  இரா. மோகனின் துணைவியார் நிர்மலா மோகன் ‘வேள்வித்தீ’   பற்றி உரையாற்ற ‘காதுகள்’ பற்றி மதியழகன் பேசினார்.

மதிய உணவுக்குப் பிறகு இரண்டாவது அமர்வில் தலைமையேற்ற ந. விச்வநாதன், பேரா.மணியின் தழுவல் கருத்தை முற்றிலும் நிராகரித்தார்.   இதை என்னால் உறுதியாக மறுக்க முடியும்.  அதற்கான இடம் இதுவல்ல என்றார்.  எம்.வி.வி.யின் படைப்புகளுக்கு சாதி, மதம் போன்ற அடையாளங்களை அளிப்பது தவறு என்றார்.  தான் எம்.வி.வி.யுடன் கொண்ட நட்பு மற்றும் அவரது படைப்புகள் பற்றி விரிவாகப் பேசினார்.

இந்த அமர்வில் அமிர்தம் சூர்யா (என்று நினைக்கிறேன்) எம்.வி.வி.யின் நாவலை (‘நித்ய கன்னி’யாக இருக்கலாம்) பக்கம் பக்கமாக படித்துக் காட்டி, “மரங்கள் ஒன்றோடொன்று புணர்ந்து....” என்றெல்லாம் சொல்லி சுகி சிவத்திற்கு இணையாக எம்.வி.வி.யின் கற்பனைத் திறத்தை வியந்து கொண்டேயிருந்தார்.  அடுத்து வியாகுலன் கட்டுரை எழுதி வந்து காத்திருந்தார். 

வியாகுலன் கட்டுரை வாசிப்பதற்கு அமிர்தம் சூர்யா விடுவதாக இல்லை.  அதற்கு மேல் அரங்கில் இருக்க பொறுமையின்றி கிளம்பி வெளியேறி விட்டேன்.  அதனால் வியாகுலன் மட்டுமல்ல திருப்பூர் கிருஷ்ணன், தேனுகா, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி போன்ற பலரின் உரைகளைக் கேட்க வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது.

இந்த அமர்வுகளை ஏற்பாடு செய்யும் ‘சாகித்திய அகாதெமி’ போன்றவை ஏன் இவ்வாறு பணத்திற்கு செலவுக் கணக்கு காட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி அங்குள்ளவர்கள் யோசிக்க வேண்டும்.   ஒரே நாளில் எந்த விதமாக கால வரையறை ஏதுமின்றி 22 பேர்கள் பேச வேண்டும் என நினைப்பது எவ்வகையான நியாயம் என்று தெரியவில்லை.  ஒவ்வொருவரும் 30 நிமிடங்களுக்கு மேலாக எடுத்துக் கொள்ளும்போது 10 மணி நேரத்திற்கு மேல் ஒரு நாள் அரங்கை எப்படி நடத்துவது?  இதை பார்வையாளர்கள் மீதான வன்முறையாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.   ஒரு நாள் அமர்வில் 10 பேர் பேசுவதே போதுமானது.   இரண்டு நாள் அமர்வை ஒரே நாளில் திணிப்பது பார்வையாளர்களை விரட்டவும் தூரப்படுத்தவுமே பயன்படும்.

காலையில் அமர்வு தொடங்கிய போத இருந்த 50 பேரில் மதியம் 20 பேர்தான் மீதம் இருந்தனர்.  முடிக்கும்போது 10 பேராக இருந்திருக்கக் கூடும்.   எம்.வி.வி.க்காக வந்திருந்த அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உரைகளில் அரண்டு பாதியில் வெளியேறி விட்டனர்.  கூட்டமே இல்லாமல் அமர்வுகளை ஏற்பாடு செய்வது முன்பே சொன்னது போல செலவுக் கணக்கு காட்டத்தான் பயன்படுமே தவிர வேறு எந்த பயனும் கிட்டாது.

கும்பகோணத்தில் இரு அரசுக் கல்லூரிகளும் பல தனியார் சுயநிதிக் கல்லூரிகளும் உள்ளன.  அவர்களுடன் சாகித்திய அகாதெமி இணைந்து இதுமாதிரியான கருத்தரங்குகளை அங்குள்ள தமிழ்த் துறை மாணவர்களை மட்டுமாவது சேர்த்து ஒரு பெரிய அரங்கிலோ அல்லது கல்லூரி வளாகத்திலோ நடத்தியிருந்தால் எம்.வி.வெங்கட்ராம் பற்றிய சில செய்திகளாவது அவர்களைச் சென்றடைந்திருக்கும்.   ஒரு சிறு குழுக் கூட்டம் போல் தவிர்த்து பரவலாக சென்றடைய ஏதுவான முயற்சிகளை இனிமேலாவது சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு எடுக்க வேண்டியது அவசியம்.

நன்றி: மு.சிவகுருநாதன்  

http://musivagurunathan.blogspot.in/2011/01/blog-post_26.html 

No comments:

Post a Comment

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...