Wednesday 27 June 2012

தமிழ்நாட்டுக்கு உள்ளே ஒரு தனி நாடு!

"இந்தியாவிலேயே பழம்பெருமைகள் வாய்ந்தது நமது தமிழ் மண். அதற்கு உள்ளும் பழமை வாய்ந்தது, தென் மாவட்டங்களே. குறிப்பாக, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, நாஞ்சில் நாட்டைக் குறிப்பிடலாம். இந்தப் பகுதிகளில்தான் கல்வெட்டுகளும், வரலாற்று ஆவணங்களும் கூடுதலாகக் கிடைக்கின்றன.


புதுக்கோட்டை மண்டலம், வெள்ளையர் ஆட்சியின்போதும் தனிநாடாகவே இயங்கியது என்பது வியப்புக்கு உரியது. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திற்கு உள்ளே, புதுக்கோட்டை கிடையாது. புதுக்கோட்டை மன்னர் ஆங்கில அரசுக்கு ஆதரவாக இருந்ததால், அவரது எல்லைக்கு உள்ளே வெள்ளையர்கள் தலையிடவில்லை. இந்திய விடுதலை வரையிலும், அது தனி நாடுதான். புதுக்கோட்டையின் வரலாறு குறித்துப் பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன. அரசு ஆவணங்களும் உள்ளன. சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு எதிரே உள்ள, அரசு ஆவணக் காப்பகத்தில் அந்த ஆவணங்களைப் பார்க்கலாம்".என்று ஆரம்பிக்கும் இந்தக் கட்டுரை, புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் இன்னொரு சிறப்பையும் தொட்டுச் செல்கிறது!


ஞானாலயா நூல் நிலையம்

புதுக்கோட்டை என்றாலே, பழம்பெருமைகள் நினைவுக்கு வருவது போல, ஆய்வாளர்களுக்கு புதுக்கோட்டை என்றாலே நினைவுக்கு வருவது, ஞானாலயா நூல் நிலையம்தான். ஆம்; புதுக்கோட்டையின் நுழைவாயிலில், திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள பழனியப்பா நகரில்தான், இந்த அறிவுத் திருக்கோயில் அமைந்து உள்ளது.

கல்வித்துறையில் பணி ஆற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியினர், இந்த நூல் நிலையத்தை அமைத்து உள்ளனர். 70,000 நூல்களைச் சேகரித்து வைத்து உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களைப் பற்றியும், நூலகத்தைப் பற்றியும் செய்தித்தாள்களில் வந்த செய்திகளைப் படித்து இருக்கின்றேன். புதுக்கோட்டைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால், இந்த நூல் நிலையத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.

புதுக்கோட்டை ஞானாலயா நூலகம் கிருஷ்ணமூர்த்தி - அருணகிரி

சென்னையில் இருந்து ரயிலில் புறப்படுகையில்தான், முகவரி இல்லை என்பது நினைவுக்கு வந்தது. எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு சென்றேன். காலையில் புதுக்கோட்டையில் ஆனந்த விகடன் புத்தகத்தை வாங்கினேன். அதில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, ஏ.கே. செட்டியாரது பயண நூல்களைப் பற்றியும், புதுக்கோட்டை ஞானாலயாவில் செட்டியாரது நூல்கள் அனைத்தும் உள்ளதாகவும் எழுதி இருந்தார். ஆப்பிள் தேசம் என்ற அமெரிக்கப் பயணக் கட்டுரைத் தொடரைத் தற்போது தினமணி கதிரில் எழுதி வருகின்ற எழுத்தாளர் ஞானியும், செட்டியாரது நூல்களைப் பற்றிக் கிருஷ்ணமூர்த்தி சொன்ன தகவலை எழுதி இருந்தார்.

புதுக்கோட்டையில் அந்த நூலகத்தைப் பற்றி விசாரித்த உடனேயே தகவல்கள் கிடைத்தன. நண்பர் தமிழ்மணியும், இந்த நூலகத்தைப் பற்றி அறிந்து இருந்தார். எனவே, எல்லோரும் அங்கே சென்றோம். ஐயா கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தோம். ஏ.கே. செட்டியாரின் நூல்களைக் காண்பித்தார். அவற்றைப் படங்கள் எடுத்துக் கொண்டேன். நான் எழுதிய, உலகம் சுற்றும் வாலிபன், கொடிவழி ஆகிய நூல்களை, நூலகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன். இந்த நூலகத்துக்கு, தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள் வருகை தந்து உள்ளனர். தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்து உள்ளனர்.

நூலகத்தைப் பற்றிய குறிப்புகளை மட்டுமே தொகுத்து, ஞானாலயா என்ற ஒரு புத்தகத்தையும் வெளியிட்டு உள்ளனர்.விலை ரூ.35. கிடைக்கும் இடம்: 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை-622 002. தொலைபேசி. 99656-33140

நன்றி:கட்டுரை ஆசிரியர் திருஅருணகிரி, மற்றும் கீற்று இணைய இதழ் நவம்பர் 8,2011 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17294:2011-11-08-03-00-33&catid=38:tamilnadu&Itemid=121 

No comments:

Post a Comment

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...