Monday 18 June 2012

ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா


கடந்த மார்ச் மாதப் பிற்பகுதியில் ஏறத்தாழப் பத்து நாட்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் இலக்கம் 6, பழனியப்பா நகரில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகத்தில் அரிய புத்தகங்கள், பழம் பெரும் இதழ்களுடன் உறவாடி மகிழ்ந்து மிகுந்த பயன் அடைந்தேன். அங்கிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்து வந்தேன்.


ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய அரிய நூல்கள், இதழ்கள் தொடங்கிச் சமீபகால அனைத்து சிற்றிதழ்களும் முக்கிய நூல்களும் ஒருங்கே ஒரே கூரையின் கீழ் படிக்கக் கிடைப்பது கிடைத்தற்கரிய வாய்ப்பு. 

ஆய்வாளர்களுக்கென்றே அமைந்த இந்நூலகத்தில் உள்ள எண்பத்தைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், தொகுப்புகளைப் பராமரிக்கவும் உதவியாளர்களை நியமித்து ஆய்வாளர்களுக்குத் துணை புரியவும் ஆண்டொன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் கூடுதலாகவே செலவு ஆகிறது என்பதைக் கேட்டு அறிந்தேன்.

 
புத்தகங்களையும் இதழ்களையும் நேசிக்கும் பா. கிருஷ்ண மூர்த்தி, டோரதி கிருஷ்ண மூர்த்தி தம்பதியர் தங்களின் பணிக்காலக் கொடைகள் மாதாந்திர ஓய்வூதியங்கள் ஆகியவற்றின் பெரும் பகுதியை ஞானாலயா நூலகப் பராமரிப்பிற்குச் செலவிட்டு வருகிறார்கள். அப்படியும் இந்த அரிய நூலகத்தின் பராமரிப்பிற்கு அது போதுமானதாக இல்லை. மிகுந்த சிரமத்துடன் தம்பதியர் விடாப்பிடியாக நூலகத்தைப் பராமரித்து வருவது கண்டு மனம் நெகிழ்ந்தேன்.




இங்குள்ள நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய நூல்கள், இதழ் தொகுப்புகள் ஆகியவை கையாளும் நிலையில் இல்லை. இவற்றை உடனடியாக மின் புத்தகங்களாக மாற்றாவிடில் அவற்றை நாம் இழக்க வேண்டிவரும். இதற்கும் பெருமளவில் நிதி உதவி தேவைப்படுகிறது.


நூலகப் பராமரிப்பிற்கும் நவீன தொழில் நுட்பங்களைக் கையாண்டு அரிய நூல்களையும் இதழ் தொகுப்புகளையும் நிலைத்திருக்கச் செய்யவும் ஞானாலயா உதவிக் கரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. நற்பணிகளுக்கு உதவத் தயங்காத நண்பர்கள் ஞானாலயாவுக்கும் தங்களால் இயன்ற நிதி அளிக்க முன்வந்தால் மனம் மகிழ்வேன்.


அரசின் சக்கரங்கள் மிக மெதுவாகவே சுழலும் என்பதை அறிவீர்கள். உதவி கோரி அரசை அணுகுவதைவிட வாளாவிருந்துவிடலாம் எனச் சலிப்பு தோன்றிவிடுவதே நமது அனுபவமாக இருந்து வருகிறது. இந்திலையில் யூனெஸ்கோ போன்றவற்றின் உதவியை முறைப்படி அணுக என்ன வழி என்பதை அறிந்தோர் ஞானாலயாவுக்கு அந்தச் சரியான வழியைக் காட்டி உதவ வேண்டுகிறேன். மத்திய அரசின் கலாசாரத் துறையிடம் உதவி கோர எப்படி அணுக வேண்டும் என்ற விவரங்களை அறிந்தோர் அவற்றையும் தெரிவிக்கலாம்.


இவை உடனடியான தேவைகளை நிறைவு செய்யப் போதா. ஆகவே தனிப்பட்ட முறையில் நண்பர்கள் தம்மாலியன்ற நிதி உதவி செய்வதும் அவசியமாகிறது.


ஞானாலயாவின் முழு முகவரியினையும் வங்கி விவரங்களையும் கீழே கொடுத்துள்ளேன்.


அன்னை பராசக்தி தமிழ் அன்பர்களைத் தூண்டிவிட்டு ஞானாலயா வின் மீது கடைக்கண் காட்டி அருள்வாள் என்பதை அறிவேன்.


உதவிக் கரம் நீட்ட விரும்புவோர் தொடர்பு கொள்ள:



ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.


தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140


வங்கி விவரம்:


Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India)

.
IFS CODE: UCBA0000112

புதுத்திண்ணை இணைய இதழில் திரு மலர் மன்னன் அவர்கள் எழுதிய கட்டுரை. திரு மலர் மன்னன் அவர்களுக்கும், புதுத்திண்ணைக்கும் நன்றி.

No comments:

Post a Comment

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...