Monday, 10 September 2012

முதற் பதிப்பின் முக்கியத்துவம்

ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்:
தமிழ் மறுமலர்ச்சிக் கவிஞர்களில் முதல்வரான மகாகவி பாரதியார் 1908 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் நாள் ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற தமது கவிதை நூலை அவரே வெளியிட்டார். அந்நூலின் 13 ஆம் பக்கம் முதல் 16 ஆம் பக்கம் வரை ‘என் மகன்’ என்ற தலைப்பில் மதுரை ஸ்ரீ முத்துக்குமாரப்பிள்ளை இயற்றிய பாடல்கள், அவரது அனுமதியின் பேரில் பிரசுரிக்கப்பட்டது என்று உள்ளது. ‘‘என் மகன்’’ தலைப்பின்கீழ் (பாரத மாதா சொல்லுதல்) என அடைப்புக்குள் போடப்பட்டுள்ளது. அப்பாடலில் மொத்தம் 43 கண்ணிகள் உள்ளன.

‘‘சந்தோஷம்! இன்றேறுந் தன்னுரிமை வேண்டினையே
வர்தேமா தரந்தனையே வாழத்துவா யென் மகனே!
.........................................................
......................................................... (1)
எனத் தொடங்கி

என்னிடத் திலில்லா இயற்கைப் பொருளெவர்கள்
தன்னிடத்தி லுண்டதனைச் சாற்று வாயென் மகனே!

என அப்பாடல் முடிகிறது.

பாரதியார் கவிதைத் தொகுப்பில் மதுரை முத்துகுமாரப்பிள்ளையின் பாடலா? என்ன ஆச்சரியம்! இது பற்றி என் தந்தையாரிடம் கேட்டபோது அவர் சொன்னார் பாரதி தன் ‘‘ஸ்வதேச கீதங்களை’’ வெளியிடும் முன் ‘நாட்டுப் பற்றையும் மொழிப்பற்றையும் தூண்டும் விதத்தில் அமைந்த பாடல்களை எழுதியவர்கள் அவற்றை தனக்கு அனுப்பினால் தனது கவிதைகளோடு அவற்றையும் சேர்த்து வெளியிடுவதாக விளம்பரம் செய்தார். அதன் விளைவே இப்பாடல். பாரதியின் பரந்த மனத்தையும் உயர்ந்த நோக்கையும் இதன் மூலம் நாம் அறிய முடிகிறது. தனது கவிதா சக்தியில் அவருக்கு எத்துனை தன்னம்பிக்கை!

முதல் பதிப்பில் காணப்படும் இப்பாடல் பின் வந்த அவரது கவிதை பதிப்புகளில் இல்லை.

பாரதியின் கவிதை மண்டலத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன் கவிதைகள் 1938ல் முதலில் வெளிவந்தன. வெளியிட்டவர் குஞ்சிதம் குருசாமி. தனது மகளுக்கு ‘ரஷ்யா’ எனப் பெயர் வைத்த குஞ்சிதம் அப்போது கடலூரில் பணியாற்றி வந்தார். சுயமரியாதை தம்பதியரை நேரில் சந்தித்து வாழ்த்த பாண்டிச்சேரியிலிருந்து பாரதிதாசன் கடலூர் சென்றார். அந்த காலக்கட்டத்தில் தான் பேசும் படங்கள் (சினிமா) திரையிடப்பட்டன. அப்போது வந்த திரைப்படங்களில் எல்லாம் பக்தி,புராணப்பாடல்களே! குஞ்சிதம் தன் மகளை வாழ்த்த வந்த பாவேந்தரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். எங்கு பார்த்தாலும் ஒரே பக்தி புராணப்பாடல்களாகவே உள்ளன. ஆகவே தமிழ் உணர்வை ஊட்டக் கூடிய ஓர் தாலாட்டுப் பாட்டு எழுதித்தாருங்கள் எனக் கேட்டார். தமிழில் தாலாட்ட ஒரு பாடலும் இல்லையே என்றவுடன் பாவேந்தர் அங்கேயே அமர்ந்து எழுதிய பாடல்தான் ‘பெண் குழந்தை தாலாட்டும்’ ‘ஆண்குழந்தை தாலாட்டும்’ என்பதாகும்.

அப்போது பாவேந்தரைப் பார்த்து தங்களின் அற்புதமான கவிதைகளை ஏன் ஓர் கவிதைத் தொகுப்பாக வெளியிடக் கூடாது எனக் குஞ்சிதம் கேட்டபோது ‘எனக்கு வசதி இல்லை’ எனப் பாவேந்தர் மறுமொழி கூற ‘நான் வேண்டுமானால் வெளியிடட்டுமா எனக் குஞ்சிதம் கேட்க’ ‘எனக்கு ஆட்சேபமில்லை’ என்றார் பாவேந்தர். அப்போது கடலூரில் வாழ்ந்த சைவசித்தாந்த பெருமன்றத்தின் செயலர் நாராயணசாமி நாயுடுவின் உதவியை நாடி தன் கருத்தை வெளியிட்டார் குஞ்சிதம். ‘

ஆத்திகப் பெரியார் மனமுவந்து நாத்திகக் கவிஞரின் கவிதைகளை வெளியிட எல்லா உதவிகளையும் செய்தார். பண உதவியும் முழுக்கவே செய்தார். இதை அறிந்த பாவேந்தர் தன் முதல் கவிதை நூலையே அவருக்கு சமர்ப்பணம் செய்தார், காரணம் இருவரையும் பிணைத்தது தமிழ் உணர்வு அல்லவா! சமர்ப்பணப் பாடலில்

நாராயணசாமி நாயுடுகார் அன்னவர்க்கே
என்நூல் சமர்ப்பித்தேன்! இன்றேக்கம் என் நூலைப்
பொன்னுலாய்ச் செய்யும் பொருட்டு

என எழுதியுள்ளார்.

முதல் பதிப்பில் பாவேந்தரின் அபூர்வ படமும் அவரது வாழ்க்கைக் குறிப்பும் உள்ளன. மேலும் சிறப்புரைகள் (1) தோழர் ஈ. வெ. ராமசாமியார் - குடியரசு ஆசிரியர் இரண்டு பக்க முன்னுரை (2) கனம் S. ராமநாதன் B. A. B. L - சென்னை மாகாண விளம்பர இலாகா மந்திரியார் அரை பக்க சிறப்புரை (3) ராமசாமி ஐயங்கார் அவர்கள் பத்திரிகை ஆசிரியர் -மூன்று பக்க பாராட்டுரை இடம் பெற்றுள்ளன.

தற்போதைய பதிப்புகளில் இவைகள் இல்லை. எடுக்கப்பட்டு விட்டன. என்ன காரணம்?

பாவேந்தருக்கு மிகவும் புகழ் சேர்க்கும் அழியாப்புகழை என்றும் தரும் கவிதை நூல் ‘‘அழகின் சிரிப்பு’’ இது உலகம் சுற்றிய தமிழர் A.K. செட்டியார் தூண்டுதலினால் எழுதப்பட்டு அவரது குமரிமலரின் முதல் இதழில் ஏப்ரல் 1943ல் வெளிவந்தது. அழகின் சிரிப்பில் ‘‘சிற்றூர்’’ என்ற தலைப்பில் உள்ள கவிதையில் 5ஆவது விருத்தம்

வெற்றித் தோட்டம் கண்டேன்
மேற்சென்றேன் நான் கடந்து
முற்றிய குலைப் பழத்தை
முதுகினிற் சுமந்து நின்று
வற்றிய மக்காள் வாரீர்
என்றது வாழைத் தோட்டம்
சிற்றேடு கையில் ஏந்தி
ஒரு காணிப் பருத்தி தேற்ற
ஒற்றை ஆள் நீர்இ றைத்தான்
உழைப் பொன்றே செல்வம் என்பான்


‘சிற்றூர் என்ற தலைப்பில் வந்த மொத்த பாடல்கள் பத்து. ஐந்தாவது விருத்தத்தில் 5 அடிகள் உள்ளன. இது யாப்பை மீறியதல்லவா. 4 அடிகள் தானே வரவேண்டும். 1979ல் எங்கள் வீட்டிற்கு A.K. செட்டியார் வந்த போது இதுபற்றி கேட்டேன். அவர் சொன்னார் ‘‘வெளிவந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. நீதான் முதன் முதலில் இக்கேள்வியைக் கேட்கிறாய் எனக்கூறி விளக்கம் சொன்னார்.’’ கவிஞனின் உணர்ச்சிக்குத் தடைபோட நான் யார்-? அவர் எழுதியதில் கை வைக்க எனக்கு உரிமை இல்லை. ஆகவே அப்படியே போட்டேன்’’ என்றார்.

01.01.1944ல் முல்லை முத்தையா ‘அழகின் சிரிப்பு’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டபோது இவ்வரிகள் இருந்தன. பின் வந்த பதிப்புகளில் முதல் அடி எடுக்கப்பட்டுவிட்டது.

இன்று எல்லோரும் போற்றும் அண்ணா எதையும் ஒரு பின்னனியோடு விரிவாக எழுதி வாசகனை அச்சூழலுக்குத் தயார் செய்து, பொருளுக்கு வருவார். நேரடியாக எதையும் தொடங்கமாட்டார். அண்ணா எழுதிய ‘‘மக்கள் கரமும் மன்னவர் சிரமும்’’ அவர் நடத்திய திராவிட நாடு வார ஏட்டில் தொடராக வந்தது. காஞ்சிபுரத்திலுள்ள ‘பரிமளம் பதிப்பகம்’ 1968ல் அதை நூலாக வெளியிட்டது. அண்ணாவே பதிப்புரை எழுதியுள்ளார். அப்போது அவர் தமிழ் நாட்டின் முதலமைச்சர். நூலின் மொத்த பக்கங்கள் 129. பின்னால் 1981ல் புத்தகமாக வெளிவந்த போது 49 பக்கங்கள் மட்டுமே இருக்கின்றன.  

1969ல் வெளிவந்த முதல் பதிப்பில் 5ஆம் பக்கம் முதல் 77ஆம் பக்கம் வரை இருந்த 73 பக்கங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. புரட்சி தோன்றக் காரணமும் மக்கள் எழுச்சியும் 77 பக்கங்களில் அண்ணாவால் விரிவாக எழுதப்பட்டு பக்கம் 78ல் புரட்சி வெடித்தது’ எனத் தொடங்கும். இப்போதுள்ள பதிப்புகளில் பக்கம் 78லிருந்து பக்கம் 129 வரை மட்டுமே உள்ளன. அண்ணாவின் நூலுக்கே இக்கதி என்றால் மற்றவர்களின் நூல்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

தமிழ்த் தாத்தா எனப் போற்றப்படுபவரும் சங்கத் தமிழ் இலக்கியங்களைக் கண்டெடுத்துப் பதிப்பித்து வழங்கிய வருமான உ.வே.சாமிநாதய்யர் ஐம்பெருங்காப்பியங்களில் முதல் காப்பியமான நூல், சீவக சிந்தாமணியை 1887ல் வெளியிட்டார். மூன்றாவதான மணிமேகலையை 1898 இல் வெளிக் கொணர்ந்தார்.

அந்நூலின் முதல் பக்கத்தில் பாலவனத்தம் ஜமீன்தாரவர்களாகிய இராமநாதபுரம் மகா&-ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ பாண்டித் துரைத் தேவர் அவர்கள் உதவியைக் கொண்டு மேற்படி சாமிநாதய்யரால் சென்னை வெ. நா. ஸ்ரீலிபி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டன என்ற விஷயம் அச்சிடப்பட்டு இருக்கும். பொதுவாக அக்காலப் பதிப்புகளில் நூல் எழுத உதவியவர், நூலாசிரியர், அச்சிட்ட அச்சுக்கூடம் ஆண்டு போன்ற விபரங்கள் முதல் பக்கத்திலேயே அச்சாக்கப்பட்டிருக்கும். அதன் மூலமாக அரியபல வரலாற்றுச் செய்திகள் பலவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அண்மை காலங்களில் இதுபோன்ற விஷயங்கள் அடுத்தமறுபதிப்பில் எடுக்கப்பட்டுவிடுகின்றன.


உ.வே.சா மணிமேகலைக் காவியத்தைப் பதிப்பிக்கும் போது அவருக்கு பல ஐயங்கள் எழுந்தன. பௌத்தம் பற்றிய முழமையான விபரம் தெரியாத காரணத்தால் தன்னுடன் பணியாற்றும் ஆங்கிலப் பேராசிரியர்கள் உதவியை நாடினார். இலண்டன் பாலி மொழிக் கழகத்தோடு தொடர்பு கொண்டு அவர்கள் வெளியிட்ட நூல்களை வருவித்து ஆங்கிலப் பேராசிரியர்களைக் கொண்டு அவற்றை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டு தன் ஐயங்களைப் போக்கிக் கொண்டார். பின்னர் மணிமேகலையைப் பதிப்பித்தார். பௌத்தம் பற்றிய மூல வரலாறு தனக்குத் தெரியாததால் ஏற்பட்ட இடர்பாடுகளை உணர்ந்த அய்யரவர்கள் வாசகர்களுக்கு உதவும் பொருட்டு ‘‘புத்த சரித்திரம் (48 பக்கங்கள்) பௌத்த தருமம் (39 பக்கங்கள்) பௌத்த சங்கம் (19 பக்கங்கள்) என்ற தலைப்புகளில் மொத்தம் 106 பக்கங்கள் விளக்கங்கள் எழுதியுள்ளார்.

அபிதான விளக்கம் 16 பக்கங்கள், மணிமேகலைக் கதைச் சுருக்கம் 56 பக்கங்கள், மணிமேகலைக் நூலாசிரியர் மதுரைக் கூளவாணிகன் சீத்தலை சாத்தனாருடைய வரலாறு என எல்லாம் எழுதியுள்ளார். ஆனால் தற்போதுள்ள பதிப்புகளில் இவை எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன. தனிநூலாக வெளியிட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். மணிமேகலைக் காவியத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளத்தானே அய்யர் அவற்றை எல்லாம் எழுதினார். எதற்காக அவற்றை எடுக்க வேண்டும். முதல் மூன்று பதிப்புகளில் வந்த இப்பகுதிகளை இப்போது ஏன் நீக்க வேண்டும். ஆகவே முதல் பதிப்பைத் தேட வேண்டியதாகிறது.

இந்தியாவில் அரசோச்சிய ஆங்கிலேயர்கள் 1835ல்தான் அச்சகங்களைத் தொடங்குவதற்கும், புத்தகங்களை வெளியிடுவதற்குமான உரிமையை நம்மவர்களுக்கு அளித்தனர். எனவே தமிழ்நூல் பதிப்பக வரலாற்றுக்கு வயது 177 ஆண்டுகளே ஆகிறது. இக்காலக் கட்டத்தில் வெளிவந்த தினசரி பத்திரிகைகள், வார, மாத இதழ்கள், தனிப்பட்ட நூல்கள் அனைத்தும் கொண்ட நூலகம் ஒன்று இன்றுவரை அமைக்கப்படவில்லை. ஆகவே அத்தகைய நூலகம் ஒன்றை விரைவில் உருவாக்குவது தமிழர்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

Credits and Thanks to  Sandhya Publications Website

http://www.sandhyapublications.com/vaasipparai.aspx

Sunday, 2 September 2012

வரலாற்றைப் பேசுதல்!கஞ்சிரா பிறந்த கதை!



வரலாறு, வரலாற்றுப் பிரக்ஞை, வரலாற்றைப் பேசுதல் என்றாலேயே நம்மில் பலருக்குக் கொஞ்சம் குழப்பம் வந்து விடுகிறது.இன்றைக்கு நாம் கேள்விப் படும்,வாசிக்கும் வரலாறு குறித்த செய்திகள் அந்த லட்சணத்தில் தான் இருக்கின்றன.இதைத்தான் ஞானாலயா பா.கிருஷ்ண மூர்த்தி ஐயா "தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அற்றவர்கள்: அவர்களுக்கு தங்களுடைய பாரம்பரியத்தை , வரலாற்றை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது " என்று சொல்வதாக இந்தப் பதிவில் நாம் ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்.

ன்ன தான் சொன்னாலும், வரலாறு, கடந்த நிகழ்வுகள் என்று சொன்ன உடனேயே குழப்பமும் அலட்சியமும், மறதியும் தான் முன்னே வந்து நிற்கிறது! \




ஞ்சிரா! கர்நாடக இசையில் பயன் படுத்தப்படுகிற ஒரு தாள வாத்தியம்! இது உருவாக்கப்பட்டு சுமார் நூற்றைம்பது ஆண்டுகளே ஆகின்றன. கச்சேரிகளில் பயன்பாட்டுக்கு வந்து ஒரு நூற்று முப்பது வருடங்களுக்குள் தான் இருக்கும்..




ஞ்சிராவைப்பற்றி ஹிந்து நாளிதழில் நான்காண்டுகளுக்கு முன்னால் வந்த ஒரு செய்தி! கஞ்சிராவைப் பற்றிகொஞ்சம் மேலோட்டமாகப் பேசப் பட்டிருக்கிறதே தவிர  சரியான தகவல்கள் இல்லை. இந்த செய்தியின் கடைசி வரிகளில் பலாமரத்தில் செய்யப்படுவது, தோல் என்று மொட்டையாக இருக்கிறது. சரி! கட்டற்ற தகவல் களஞ்சியம் என்று சொல்லிக் கொள்கிறார்களே, அந்த விக்கி பக்கங்களில் போய்க் கஞ்சிரா பற்றிய தகவல்களைத் தேடினால்,உடும்புத்தோல் பயன் படுத்தப்படுவது பற்றிய விவரம் கிடைக்கிறது.அதோடு சரி! மேலதிக விவரங்களோ, முழுமையாகவோ இந்தத்தளமும் இல்லை.

ன்னை  கஞ்சிரா மாஸ்ட்ரோ என்று அழைத்துக் கொள்கிற ஒரு கலைஞர்  இவர்!  இவருடைய வலைப்பக்கத்திலாவது கஞ்சிராவைப்பற்றி கொஞ்சம் முழுமையான தகவல் இருக்கிறதா என்று தேடினால் அதிலும் ஏமாற்றமே!

1850 களில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம். மாண் பூண்டியா பிள்ளை என்ற இளைஞர் வேலை எதுவுமில்லாமல் இருந்தார். அரண்மனை வைத்தியராக இருந்த யோகானந்த சுவாமிகள் என்பவர், மாண் பூண்டியா பிள்ளையை மன்னரிடம் அழைத்துச் சென்று ஏதாவது வேலை கொடுக்குமாறு வேண்டினார். இளைஞருக்கு நகரில் லாந்தர் விளக்கேற்றும் வேலை தரப்பட்டது.

கீழ மேல் தென்வடலாக  நான்கு அடுக்கு வீதிகள் இருந்த நகரம் புதுக்கோட்டை. ஒரு தெருவுக்கு ஆறு லாந்தர் விளக்குகள், ஆக மொத்தம் 96 விளக்குகள். மாண் பூண்டியா பிள்ளை ஒரு கையில் மண்ணெண்ணெய் டின், இன்னொரு கையில் பெரிய திரி போட்ட தீவட்டித் தடியுடன் தொழில் சார்த்திக் கொண்டு ஒவ்வொரு வீதி விளக்காக ஏற்றிக் கொண்டே செல்வார். அப்படிச் செல்கிற சமயங்களில் தீவட்டித் தடியில் தாளம் போட்டபடியே போவது வழக்கம். இதை யோகானந்த சுவாமிகள் கவனித்திருக்கிறார். அகமுடையார் குலத்தில் பிறந்து, சங்கீதத்தில் இத்தனை ஆர்வமா என்று வியந்து, மாண் பூண்டியா பிள்ளையை, பகலில் சும்மா இருக்கும் நேரத்தில் வித்தை பழகட்டும் என்று அரண்மனை தவில் வித்வான் மாரியப்ப பிள்ளையிடம் சேர்த்து விட்டார்..லாந்தர் ஏற்றும் பணியில் சேர்ந்த தவில் வாசிப்பை முறையாகப் பயின்று, அரண்மனையிலேயே தவில் வித்வானாகவும் ஆகிப் போனார்.

ட்சிணாமூர்த்திப் பிள்ளை என்று ஒரு  சமஸ்தானத்துப் பட்டாளத்துக்காரர்! துப்பாக்கிக் கட்டைகளைத் துடைக்கிறேன் பேர்வழி என்று துப்பாக்கிக் கட்டைகளை வைத்துத் தாளம் போட்டே பலதுப்பாக்கிகளை உடைத்தவர். இந்த மாதிரி ஆசாமிக்குப் பட்டாளத்து வேலை ஒத்து வராது என்பதைக் கவனித்த யோகானந்த சுவாமிகள், இவரை மாண் பூண்டியா பிள்ளையிடம் ஒப்படைத்து இசையைக் கற்றுக் கொடு என்று சேர்க்கிறார். மிருதங்க வித்வானாக தட்சிணாமூர்த்திப் பிள்ளை மிளிர வேண்டும் என்று இரவு பகல் சாதகம் செய்து கொண்டிருந்த நேரத்தில் இவர்களோடு பழனி முத்தையா பிள்ளை என்பவரும் சேர்ந்து கொள்கிறார்.

ந்த மூவரும் ஏட்டுக் கல்வி கற்றவர்கள் அல்ல.மிருதங்க வாசிப்பிலேயே அத்தனை தாளக் கட்டுக்களையும் படித்தார்கள். அடப்பன்வயலிலுள்ள மாந்தோப்பில் மூவரும் சேர்ந்து கூழாங்கற்களை வைத்துக் கணக்கிட்டு கோர்வைகள், ஓசைக் குறிப்போடு கூடிய சொற்கட்டுகள், தாள வரிசை வகைப்பாடுகள் என்று அத்தனையையும் பயிற்சி செய்தே கரைத்துக் குடித்தார்கள்.

ப்படி சாதகம் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே மாண் பூண்டியா பிள்ளைக்குப் புதிய வகை தாளக் கருவி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தீவீரமாக இருந்தது.எடுத்துச் செல்ல இலகுவாகவும், இசைக் கச்சேரிகளில் அதற்கு முக்கிய பங்கும் இருக்க வேண்டும் என்று பல்வேறு தாள இசைக் கருவிகளை ஒப்பு நோக்கித் தேட ஆரம்பித்தார்.நாகூர் பக்கிரிமார்கள் பயன்படுத்தி வந்த டேப் அவரை மிகவும் கவர்ந்தது.தவில், கடம், மிருதங்கம் போல இதை இருகரங்களையும் பயன்படுத்தி  இசைக்க வேண்டியதில்லை.ஆனால், டேப் வடிவம் பெரியது. வட்டவடிவக் கட்டையில் பதினோரு இடங்களில் துளையிட்டு வட்டவடிவிலான பித்தளை அல்லது இரும்புத்தகடுகளை துவாரமிட்டுப் பொருத்தியிருப்பார்கள்.ஒரு புறத்தில் ஆட்டு சவ்வுத்தோலை இறுக்கி ஒட்டியிருப்பார்கள்.

வ்வளவு பெரிதாக வேண்டாமே என்று யோசித்து தாழம்புதரில் நல்ல பருமனான கட்டையை வெட்டி ஒரு அடிக்கும் குறைவான வட்ட வடிவத்தில் ஆறுவிரற் கடையளவு தடிமனாகவும் சக்கரவடிவில் ஒழுங்கு படுத்திக் கொண்டு முதலில் மாட்டுத் தோலைப் பயன்படுத்திப் பார்த்தார்கள். ஒலி திருப்தி தரவில்லை. ஆட்டுத்தோலை  மாற்றிப் பார்த்தும் பிரயோசனமில்லை. இப்படிப் பரிசோதித்துக் கொண்டு இருந்த தருணத்தில் ஒரு ஆண் உடும்பு தன்ஜோடியுடன் ஓடிய போது புதர், கூழாங்கற்களில் அவை செல்லுமிடத்து ஒருவகையான நாதம் வருவதைக் கண்டார்கள். உடும்பை பிடித்து வைத்து, முதலில் ஆண் உடும்பின் முதுகுத்தோலைப் பாடம் செய்ததில்  எழுந்த நாதம் திருப்தியாக இருந்தாலும், முதுகுத்தோல் என்பதால் தடிமனாக இருந்தது. பெண் உடும்பின் வயிற்றுப் பகுதித்தோலைப் பாடம் செய்து பயன்படுத்திப் பார்த்ததில், எழுந்த நாதம் கம்பீரமாக இருந்தது!

தாழங்கட்டைக்குப் பதிலாக பலாக் கட்டையையும், ஆறு இடங்களில் துளையிட்டு காலணாக் காசுகளை ஜால்ராக்களாக வைத்திருந்ததை மாற்றி மூன்றே துளைகள், ஜால்ராக்கள் என வடிவமைத்து உருவானது தான் இப்போது கஞ்சிரா என்றழைக்கப்படும் இசைக்கருவி!

ஞானாலயா பா கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டையின் இசை மரபை அறிமுகம் செய்து வைத்து, யோகானந்த சுவாமிகளின் பேரன் திரு செல்லையா பிள்ளை மற்றும் கஞ்சிரா இசைக் கலைஞர் ராம் இருவரையும் காக்கைச் சிறகினிலே மாத இதழுக்காகக் கொடுத்த ஒரு நேர்காணலின் சுருக்கம் இது!  காக்கைச் சிறகினிலே மாத இதழின் டிசம்பர் 2011 இதழில் வெளிவந்த இந்த நேர்காணலை இங்கே முழுமையாகப் படிக்கலாம்!

காக்கைச் சிறகினிலே திரு வி முத்தையா அவர்களை வெளியிடுபவர், ஆசிரியராகவும், இதழாசிரியராக வைகறையையும் கொண்டு சென்னையில் இருந்து வெளிவருகிறது.

தனி இதழ்  ரூ.20  ஆண்டு சந்தா ரூ.225

தொடர்பு முகவரி:

காக்கை,
அறை எண் : 7, முதல் தளம், நோபிள் மேன்ஷன்,
288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி

சென்னை 600 005



மின்னஞ்சல் :
saalaramvaigarai@gmail.com

Saturday, 1 September 2012

வரலாற்றைப் பேசுதல்!தியாகி எஸ் சத்திய மூர்த்தி!

..


தீரர் சத்திய மூர்த்தி நினைவாக சென்ற மாதம் ஆகஸ்ட் பதினேழாம் தேதி புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வரலாற்றுப் பேரவையின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஞானாலயா திரு பா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார் 




தியாகி சத்திய மூர்த்தியின் 125 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி நடந்த நிகழ்வு இது.

                                                      ..

Wednesday, 8 August 2012

இந்த வாரம் கலாரசிகன்...!



ழைய புத்தகக் கடைகளும், பழைய நூலகங்களும் என்னை ஈர்க்கும் காந்தங்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் திருவனந்தபுரம் மத்திய நூலகத்துக்குச் சென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில பழைய தமிழ்ப் புத்தகங்களைத் தூசு தட்டிப் புரட்டிக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன்.

திருவிதாங்கூரை ஆண்ட சுவாதித் திருநாள் மகாராஜாவால் 1829-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தத் திருவனந்தபுரம் மத்திய நூலகம்தான் இந்தியாவில் அமைந்த முதல் பொது நூலகம்.கர்நாடக சங்கீத விற்பன்னராகவும், பல சாகித்யங்களை இயற்றிய புலவராகவும் இருந்த சுவாதித் திருநாள் மகாராஜா இந்த நூலகத்தை உருவாக்கும் பொறுப்பைகர்னல் எட்வர்ட் காடகன் என்கிற பிரிட்டிஷ் தூதுவரிடம் ஒப்படைத்தார். அதுமட்டுமல்ல, மகாராஜா இந்த நூலகத்துக்கு வைத்த பெயர் திருவனந்தபுரம் மக்கள் நூலகம் என்பது.

ந்த நூலகத்தில் ஜெர்மானியர் ஒருவரைத் தற்செயலாக சந்தித்தேன். இளைஞனான எனக்கு ஓர் அந்நிய நாட்டவர் இந்தியநூலகத்தில் ஆர்வமுடன் பல விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. மெல்லப் பேச்சுக் கொடுத்து அவருக்கு நெருக்கமானேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வு என்பதால் எனக்கு அவரது பெயர் நினைவில்இல்லை. அந்தத் தொடர்பு அத்துடன் முறிந்து விட்டதும் ஒரு காரணம்.

ந்த ஜெர்மானியர் சொன்ன ஒரு செய்தி எனது மனதில் பதிந்தது. இன்றுவரை உறுத்திக்கொண்டும் இருக்கிறது. அது- "இந்தியர்கள் உலகிலேயே மிகவும் புத்திசாலிகளாகவும், அறிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள்தங்களது கண்டு பிடிப்புகளையும், சாதனைகளையும், பேரறிவையும் ஆவணப் படுத்தாமல் விட்டு விட்டார்கள். குறைந்தபட்சம், ஓலைச் சுவடிகளையாவது பராமரித்துப் பாதுகாத்தார்களா என்றால் இல்லை. அதனால்தான், இந்தியர்கள் பின்தங்கிவிட்டனர்!''

வ்வளவு பெரிய உண்மை! இதை நான் நூலகங்களுக்குப் போகும் போதெல்லாம் நினைத்து வேதனைப்படுவேன். நல்லவேளை, தமிழ்த் தாத்தா உ.வே.சா. முனைப்புடன் செயல்பட்டிருக்கா விட்டால் இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் செவ்விலக்கியங்கள்கூடக் கிடைக்காமல் போயிருக்கும் என்பதைஎப்படி மறக்க முடியும்? 

இனியாவது அந்தத் தவறைச் செய்யாமல், நம்மிடம்இருக்கும் அரிய நூல்களையும், தகவல்களையும், ஓலைச்சுவடிகளையும் ஆவணப் படுத்துவோமா என்றால், உற்சாகமாக "ஆமாம்' என்று சொல்ல இயலவில்லை.

ந்தச் சூழ்நிலையில் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் சுவடி மற்றும் நூல் பாதுகாப்பாளராகவும், நூலகராகவும் பணியாற்றும் முனைவர் ப.பெருமாள், சுவடிப் பாதுகாப்பு வரலாறு என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

னக்குத் தெரிந்த, தான் அனுபவத்தால் கற்றவித்தைகள், வருங்கால சந்ததியினருக்கும், தனக்குப் பின்னால் உருவாகப் போகும் நூலகர்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிற அவரது உயரிய நோக்கத்திற்காகவேமுனைவர் பெருமாளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ரிஸ்டாடில் கி.மு. 335-இல் எழுதிய "ஹிஸ்டரியோ அனிமலியம்' என்ற நூலில் புத்தகங்களின்மீது வாலில்லாத தேள் போன்ற பூச்சிகளைப் பார்த்ததாகக் குறிப்பிடுகின்றார். புத்தகம் என்று அவர் குறிப்பிடுவது ஓலைச்சுவடிகளாகத்தான் இருக்க வேண்டும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் புத்தகப் புழு, வெள்ளி மீன், கறையான், புத்தகப் பேன் போன்ற பூச்சிகளினால் காகிதச் சுவடிகள் அழிவுக்கு ள்ளாகின்றன. ஓலைச் சுவடிகள் புத்தகப் புழு, கரப்பான் பூச்சி மற்றும் கறையான்களால் அழிவுக்குள்ளாகின்றன'' என்று பதிவு செய்யும் முனைவர் பெருமாள், ஓலைச்சுவடிகள் பற்றிய எல்லா விவரங்களையும் தொகுத்து அளிக்கிறார்.

சுவடிகள் நம் சமூக வரலாற்றைப் பாதுகாத்த பெட்டகம். சுவடிகளைப் பாதுகாப்பது நமது வரலாற்றைப் பாதுகாப்பதாகும்' என்கிற கடமை உணர்வுடன் செயல்பட்டு சுவடிகள் பற்றிய அத்தனை விவரங்களையும், சுவடிப் பாதுகாப்பு பற்றிய எல்லா அம்சங்களையும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் முனைவர் பெருமாள்.

வ்வொரு பல்கலைக்கழகமும், ஒவ்வொரு தமிழ் அமைப்பும் முனைவர் ப.பெருமாளை அழைத்து கெüரவிக்க வேண்டும் என்பது எனது வேண்டு கோள். இவரைப் போலத் தனக்குத் தெரிந்தது வருங்கால சந்ததியருக்கும் தெரிய வேண்டும் என்று நமது முன்னோர்கள்நினைக்காததாலும், ஆவணப் படுத்தப்பட்ட அரிய பல விஷயங்களைப் பாதுகாக்கத் தவறியதாலும்தானே நாம் நமது சரித்திரத்தையும் சாதனைகளையும் நிலைநிறுத்த முடியாமல் தவிக்கிறோம்.

முனைவர் ப.பெருமாளுக்கும், அவரது புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட்ட காரைக்குடி கோவிலூர் மடாலயத்துக்கும்தமிழ்கூறு நல்லுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது!

--------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த ஞாயிறு அன்று (05-08-2012) இந்த வாரம் கலாரசிகன் பகுதியில் தினமணி ஆசிரியர் எழுதிய கட்டுரையின் முழுவடிவமும் இங்கே!

இந்தப் பத்தியில் ஓலைச்சுவடிகளைக் குறித்துச் சொல்லியிருப்பது, ஞானாலயா ஆய்வு நூலகத்தில் இருக்கும் அரிய புத்தக சேகரத்துக்கும் அப்படியே பொருந்துகிறதே!வரலாற்றுப் பிரக்ஞையோடு ஆவணப் படுத்துகிற வேலை நம் முன்னால் காத்திருக்கிறது.


ஞானாலயா உங்கள் உதவிக்கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது! வாருங்கள்! கை கொடுங்கள்!
..

Thursday, 2 August 2012

கொடி அசைந்ததால் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா?


சிரிக்கும் துறவிகள்என்ற தலைப்பில், ஞானாலயா திரு பா.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் காக்கைச்சிறகினிலே டிசம்பர் 2011 இதழில் ஜென் புத்தரியத்தைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையில் இருந்த ஒரு கதையை, முந்தைய பதிவொன்றில் பார்த்திருந்தோம், இல்லையா!



ஜென் என்பது என்ன? மதமாய் நிறுவப்படாத ஒரு அற்புத இயல்புத் தன்மை! சாதாரண மனதின் விழிப்புணர்ச்சிச் சிகரம்!முழுமையான விடுதலையை நோக்கிய எதார்த்தம்! தீவீரமான இயற்கைத்தன்மை கொண்ட வாழ்க்கையின் களிப்பு!

ப்படி ஒரு சுருக்கமான விளக்கத்தோடு ஜென் பற்றிய அறிமுகம் தொடங்குகிறது. அடுத்து, இத்தகைய குணாதிசயங்கள் மனிதனின் வாழ்க்கையில் சாத்தியம் தானா  என்று இயல்பாகவே எழும் மனித மனத்தின் சந்தேகப்படும் இயல்பைத் தொட்டு,விடை சொல்கிற மாதிரி ஜென் (பவுத்தத்தின்) தோற்றத்தின் பின்னணியைத் தொட்டு கட்டுரை விரிகிறது.

புத்தருக்கு முன்னாலேயே சீனாவில் லாவோட்சேயும், கன்பூசியசும், தத்துவார்த்தத் தேடலை தொடங்கி வைத்திருந்தாலும், ஜென் வாழ்க்கையின் எதார்த்தங்களை விட்டு விலகியோ, அல்லது எதார்த்தத்தில் இருந்து தப்பிச் செல்வதையோ ஏற்கவில்லை. ஜென் ஜப்பானிய தேசத்தில் பிறந்து, செழுமையடைந்ததைக் கட்டுரை, தெளிந்த நீரோட்டம் போல எடுத்துச் சொல்கிறது.அங்கங்கே ஜென்னை புரிய வைக்கும் முகமாக சிறு சிறு குட்டிக் கதைகள்!

ருமுறை இரு ஜென் துறவிகள் கொடிக்கம்பத்தில் ஒரு கோடி பறந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.தங்களுக்குள் விவாதம் செய்து  கொண்டிருந்தனர்.

"
காற்று தான் அசைகிறது" என்றார் ஒருவர்.

"
இல்லை, இல்லை!கொடிதான் அசைகிறது" என்றார் மற்றொருவர்.

இந்த விவாதத்தை கவனித்துக் கொண்டிருந்த ஜென் குரு இடை மறித்துச் சொன்னார்,"கொடியும் அசையவில்லை! காற்றும் அசையவில்லை!உங்கள் மனந்தான்அசைகிறது" என்று. இதைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இரு துறவிகளின் மனதில் பதியும்படி மேலும் தொடர்ந்தார் குரு. "வாயைத் திறந்ததும் அனைத்தும் தவறாகின்றன."

விவாதங்களும் அறிவுரைகளும் எப்போதும் முழுமையை எட்டுவதில்லை!



காக்கைச் சிறகினிலே திரு வி முத்தையா அவர்களை வெளியிடுபவர், ஆசிரியராகவும், இதழாசிரியராக வைகறையையும் கொண்டு சென்னையில் இருந்து வெளி வருகிறது.

தனி இதழ்  ரூ.20  ஆண்டு சந்தா ரூ.225
தொடர்பு முகவரி:

காக்கை,
அறை எண் : 7, முதல் தளம், நோபிள் மேன்ஷன்,
288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி

சென்னை 600 005


மின்னஞ்சல் : saalaramvaigarai@gmail.com

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...