Monday, 9 July 2012

காந்திக்கு தமிழனின் முதல் மரியாதை! சாரு நிவேதிதா

 

மிழில் பயண இலக்கியம் இல்லை என்ற கருத்தை சமீபத்தில்
மாற்றிக் கொண்டுவிட்டேன். சுமார் 3,000 பக்கங்கள் (17 நூல்கள்) எழுதி இருக்கிறார், அந்த உலகம் சுற்றிய தமிழர். அதுவும் எப்போது? 80 ஆண்டுகளுக்கு முன்னால்!அவ்வளவாக விமானப் பயணம் இல்லாத காலம். பஸ், ரயில் வசதி எல்லாம் எப்படி இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம். உலகம் முழுவதும் கப்பலிலேயே பயணம். அமெரிக்காவில் 25,000 மைல்களுக்கு மேல் காரில் பயணம். தவிர, 1943 முதல் 1983 வரை 40 ஆண்டு காலம் 'குமரி மலர்' என்ற சிற்றிதழையும்நடத்தி இருக்கிறார். 'அழகின் சிரிப்பை' எழுத பாரதிதாசனை ஊக்குவித்து, அதை குமரி மலரில் வெளியிட்டு இருக்கிறார். இத்தனை சிறப்புக்கும் உரியவர்தான் ஏ.கே.செட்டியார் என்று அழைக்கப்பட்ட அ.ராம.அ.கருப்பன் செட்டியார் (பிறப்பு: 1911; மறைவு: செப்டம்பர் 10, 1983). காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர். தீவிர காந்தியவாதியான செட்டியார் எழுதிய பயண நூல்களில் ஒன்றிரண்டைத் தவிர, வேறு எதுவும் இப்போது கிடைப்பது இல்லை. ஆனால், அந்த நூல்களை எல்லாம் சேகரித்து வைத்து இருக்கிறார் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி. புதுக்கோட்டையில் அவரும் அவரது மனைவி டோரதியும் சேர்ந்து தமிழில் வெளிவந்துள்ள பழைய புத்தகங்கள் அனைத்தையும் பாதுகாத்துவைத்துள்ளனர். இதை ஒரு தவமாக செய்து வருகின்றனர். 

அடுத்த ஆண்டு ஏ.கே.செட்டியாரின் நூற்றாண்டு விழா வருகிறது. அதற்குள்ளாவது அவருடைய அத்தனை நூல்களும் மறுபதிப்பு செய்யப்பட வேண்டும். கிருஷ்ண மூர்த்தியின் உதவியால் ஏ.கே.செட்டியாரின் பயண நூல்களைப் படித்தபோது, கால எந்திரத்தில் ஏறி 80 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதுபோல் இருந்தது. 


சில நூல்கள் 1936-ம் ஆண்டு நாட்டுக்கோட்டை செட்டியார் சங்கத்தினால், ரங்கூனில் பிரசுரிக்கப்பட்டு உள்ளன. ஏ.கே.செட்டியாரின் கால எந்திரத்தில் ஏறி, அப்போதைய சென்னையும், வெளிநாட்டு நகரங்களும் எப்படித் தோற்றம் அளித்தன என்று ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. மேலும், நம் ஆட்சியாளர்கள் இந்தியாவை வல்லரசு என்று சொல்லிக்கொண்டாலும், நாம் 200 ஆண்டுகள் பின் தங்கியே இருக்கிறோம் என்றே இந்த நூல்களில் இருந்து தெரிகிறது. சந்தேகம் இருந்தால் ஷாங்காய் நகரின் (சீனா) நாங்கிங் சாலை புகைப் படத்தைப் பாருங்கள். உலகின் முக்கியமான நகரங்கள் அனைத்திலும் 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே பூமிக்குள் ஓடும் மெட்ரோ ரயில்கள் அறிமுகமாகிவிட்டன. ஆனால், இந்தியாவின் தலைநகரிலேயே சமீபத்தில் தான் மெட்ரோ ரயில் வந்தது. பெங்களூரிலும் சென்னையிலும் இன்னும் கட்டுமானப் பணியே முடியவில்லை.

செட்டியாரின் சீன அனுபவங்களும் அதே கருத்தை வலியுறுத்துகின்றன. சீனாவில் ஓர் இடத்தில்கூட திருடர்கள், விபசாரிகளின் தொல்லை இல்லாமல் சாலையில் நடக்க முடியவில்லை என்கிறார் செட்டியார். 1930-களின் சீனா ஒரு நரகத்தைப்போல் தோற்றம் தருகிறது. ஆனால், இன்றைய சீனா எப்படி இருக்கிறது? அமெரிக்காவில் நிறவெறி உச்சத்தில்இருந் ததைக் குறிப்பிடுகிறார். எல்லா இடத்திலுமே அவரைப் புறக் கடை வழியாகத்தான் வரச் சொன்னார்களாம். வெள்ளையர் அல்லாத அனைவருக்கும் அதுதான் அப்போது கிடைத்த மரியாதை. ஆனால், இப்போதைய அமெரிக்கா எப்படி இருக்கிறது? செட்டியாரின் பயண அனுபவங் களில் அவர் வெகுவாகப் பாராட்டி இருப்பது ஜப்பானைத்தான். 

ஜப்பானியர்களின் பணிவு, அன்பு, அடுத்த மனிதரிடம் காட்டும் அக்கறை, கடும் உழைப்பு ஆகிய பண்புகளால்தான் இரண்டாம் உலகப் போரில் தோற்றாலும், இன்று அமெரிக்காவுக்கே சவால்விடும் நிலையில் இருக்கிறது. ஒரு ஜப்பானியப் பத்திரிகையாளர், 'உங்கள் நாட்டில் தீண்டத் தகாதவர்கள் என்று ஒரு சாதியார் இருக்கிறார்களாமே; அவர்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறார்களா?' என்று கேட்கி றார். மிகவும் வெட்கத்துடன், 'இன்னும் 10 ஆண்டுகளில் அந்த நிலை மாறிவிடும்' என்று பதில் கூறுகிறார் செட்டியார். இது நடந் தது 1936-ல். ஆனால், மேலவளவு என்ற ஊரில், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒரே காரணத்துக்காக, முருகேசன் உட்பட ஆறு தலித்துகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஆண்டு 1997.

செட்டியார் ஒரு சினிமா பைத்தியம். எங்கே சென்றாலும் சினிமா பார்க்காமல் வர மாட்டார். ஜப்பானில் ஒரு சினிமா தியேட்டரில்கூட யாரும் விசில் அடித்தோ, கத்தியோ பார்க்கவில்லை என்று வியக்கிறார். டிக்கெட் வாங்குவதற்குக் கூட முண்டி யடிப்பது இல்லையாம். டிக்கெட் தீர்ந்துவிட்டால் அமைதியாகத் திரும்பிவிடுகிறார்கள் என்கிறார். சுருக்கமாகச் சொன்னால், இன்றைய லண்டனும் பாரிஸும் எப்படி இருக்கிறதோ அப்படி 1936-ல் இருந்து இருக்கிறது ஜப்பான். 

காந்தி பற்றிய சினிமா என்றால், நம் நினைவுக்கு வருவது ரிச்சர்ட் ஆட்டன்பரோ எடுத்த 'காந்தி' திரைப்படம்தான். ஆனால், 1940-லேயே காந்தி பற்றிய இரண்டரை மணி நேர ஆவணப்படம் ஒன்றை எடுத்துவிட்டார் ஏ.கே.செட்டியார். 1937-ம் ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி நியூயார்க்கில் இருந்து டப்ளினுக்கு கப்பலில் சென்றுகொண்டு இருந்தபோது, காந்தி பற்றி ஓர் ஆவணப் படம் தயாரிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றுகிறது. உடனடியாக, அதற்கான வேலைகளில் இறங்கிவிடுகிறார். அடுத்த மூன்று ஆண்டுகள் அதற்காக அவர் உலகம் முழுவதும் ஒரு லட்சம் மைல்கள் பயணம் செய்தார். \

நூற்றுக்கும் மேற்பட்ட ஒளிப்பதிவாளர்களைச் சந்தித்து, அவர்கள் காந்தியைப் பற்றி எடுத்த படச் சுருள்களைச் சேகரிக்கிறார். 50 ஆயிரம் அடிகள் நீண்ட அந்தப் படத்தை 12 ஆயிரம் அடிகளாக எடிட் செய்து 1940-ம் ஆண்டு வெளியிட்டார் ஏ.கே.செட்டியார். அப்போது அவர் வயது 29 என்பதைக் கவனியுங்கள். 

இந்தப் படத்தைத் திரையிட ஆங்கிலேய அரசு அனுமதி தராததால், வாஷிங்டனில் 1953-ல் ஆங்கில வர்ணனையுடன் வெளியிட்டார். இந்தியத் தூதரகத்தால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில், அப் போதைய அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவரும் பல வெளிநாட்டுத் தூதர்களும் கலந்து கொண்டார்கள். அதிபர் கலந்துகொள்வதால், பார்வையாளர்கள் அனைவரும் கோட், சூட்டுடன் வர வேண்டும் என்றது அழைப்பிதழ். 'அரை நிர்வாணமாக ஒரு சந்நியாசியைப்போல் வாழ்ந்த தலைவரின் படத்தைப் பார்க்க கோட்டு, சூட்டுடன் செல்ல வேண்டியிருந்தது!' என்று ஒரு விமர்சகர் அப்போது எழுதினார். 

இந்த ஆவணப்படத்தை அமெரிக்காவின் ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் 20 லட்சம் ரூபாய்க்கு விலை பேசியபோது, 'காந்தியை நான் விற்க மாட்டேன்' என்று சொன்னவர் செட்டியார். இன்று வரை காந்தி பற்றி எடுக்கப்பட்ட ஒரே ஆவ ணப்படம் இதுதான். இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு, காந்தி உயிருடன் இருக்கும் போதே எடுக்கப்பட்டது இது. ஆனால், தமிழர்களாகிய நாம் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதில் தலை சிறந்தவர்கள் ஆயிற்றே? அதனால், அந்த அரிய பொக்கிஷத்தைத் தொலைத்து விட்டோம். \\\

சுமார் 40 ஆண்டுகள் அந்தப் படம் எங்கே இருக்கிறது என்றே யாருக்கும் தெரியாமல் இருந்தது. பின்னர், ஆய்வாளர் வெங்கடாசலபதி இதை அமெரிக்காவில் கண்டுபிடித்துத் தமிழ் நாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறார். ஆனாலும், தனக்குக் கிடைத்து இருப்பது செட்டியார் ஹாலி வுட்டுக்காக எடிட் செய்த 50 நிமிடப் படம்தானே தவிர, தமிழ் ஒரிஜினல் அல்ல என்கிறார் வெங்கடாசலபதி. 

டோக்கியோ மற்றும் நியூயார்க் கல்லூரிகளில் புகைப்படக் கலையை முறையாகக் கற்றவர் செட்டியார். இன்று நாம் பார்க்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகைப்படத்தை எடுத்தவரும் அவரே. வியன்னாவில் 12 நாட்கள் நேதாஜியுடன் தங்கி இருந்தபோது செட்டியார் எடுத்ததுதான் இன்று இந்தியா முழுவதும் வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம். 

ஆனந்த விகடனில் மனம் கொத்திப் பறவை என்ற தலைப்பில் தொடராக சாரு நிவேதிதா எழுதிக் கொண்டிருந்த பக்கங்களில்  உலகம் சுற்றும் தமிழர் ஏகே செட்டியார் மற்றும் ஞானாலயா குறித்து எழுதிய பக்கம்  15-09-2010 இதழில் வெளியானது.

சாரு நிவேதிதா  மற்றும் ஆனந்த விகடனுக்கு நன்றியுடன்!


.

3 comments:

  1. திரு பிரபு! எதற்கு நன்றி என்பதைத் தெளிவாகச் சொல்லியிருந்தீர்களானால், நன்றாக இருந்திருக்கும்! இந்த வலைப்பக்கங்களில் நாங்கள் வேண்டுவதெல்லாம் , புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் எந்த அளவுக்கு ஒரு அறிவுத் திருக்கோவிலாகவே இருக்கிறது என்பதையும்,அதைத் தொடர்ந்து பாதுகாப்பதில் நமதுபங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற செய்தியைக் கொண்டு செல்வதும்,நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பது தான்!

    இந்த செய்தியை உங்கள் நண்பர்கள், வலைப்பக்கங்களில் பகிர்ந்து கொள்வது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். என்ன சொல்கிறீர்கள்!!

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...