Sunday 15 July 2012

ஆலம் விழுதுகளாய் இருப்போம்! வேர்களைக் காப்பாற்றுவோம்!

எதற்கும் காலம் கனிந்து வர வேண்டும் என்று சொல்வது சரிதான் போல!
 

2007 ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி,ஞானாலயாவுக்கு உதவுகிற நோக்கத்தில் ஞானாலயா மேம்பாட்டுக் குழு நடத்திய ஒரு கூட்டம், மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி, அன்றைக்கு மத்திய இணை அமைச்சராக இருந்த திரு ரகுபதி, முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் உள்ளிட்டு நிறையப் பிரபலங்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் செய்திகளைத்தான் கீழே இரண்டு கிளிப்பிங்குகளாகப் பார்க்கிறீர்கள்.

திரு ரகுபதி, நூலகத்தைப் பார்த்து விட்டு நெகிழ்ந்துபோய் தன்னுடைய எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய்களை உடனடியாகத் தரவிருப்பதாக அறிவித்ததும் இந்த இரண்டு செய்தித்தாள் க்ளிப்பிங்கிலும் இருக்கிறது.

ஆனாலும் சாமிகள் வரம் கொடுத்தாலும் பூசாரிகள் குறுக்கே நிற்கிற தேசமல்லவா இது!திரு ரகுபதி நல்லெண்ணத்தோடு உதவுவதாக வாக்களித்ததும் கூட அப்படித்தான் எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தனியார் நூலகங்களுக்கெல்லாம்  நிதி ஒதுக்க முடியாதென்று அன்றைய மாவட்ட ஆட்சியர் திரு சிரு சுட்டிக் காட்ட, அந்த ஒதுக்கீடு தடைப்பட்டது. ஆனால், மத்திய அரசின் வழிகாட்டுதல் வேறு மாதிரித்தான் இருக்கிறது


ஆனால் திரு.ரகுபதி,புதுக்கோட்டை மாவட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமான அரசியல்வாதியாக, தொகுதி மக்களுடன், கட்சி எல்லைகளைத் தாண்டியும் செல்வாக்குடனிருப்பவர்.தனிப்பட்ட முறையில் கூடத் தனியாகவோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ இப்போது கூட இந்த ஆய்வு நூலகத்துக்குக் கை கொடுக்கலாம்! அப்படி ஒரு நேரம் கைகூடி வர வேண்டுவோம்!,



கனிமொழி ஆரம்பித்து வைத்த வலைத்தளம், ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு  சரி! அப்புறமாக இயங்கவில்லை என்பதில் அவருடைய குற்றம் ஏதுமில்லை! இந்த விஷயத்தில் கலந்து கொண்ட அத்தனை பேருமே ஞானாலயா ஆய்வு நூலகம் செழித்தோங்க வேண்டும் என்று தான் விரும்பினார்கள்.அதில் சந்தேகமே இல்லை!.

ஆனால், அதை எப்படி முன்னெடுத்துச் செல்வது,உள்ளூரிலேயே தேவையான ஆர்வலர்களைத் திரட்டி டிஜிடைஸ் செய்வதற்கு, சரியான தொழில்நுட்பத்தை, தொழில் நுட்பம் தெரிந்தவர்களை ஈடுபடுத்துவது, அப்புறம் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது என்பதில் ஒரு சரியான செயல் திட்டத்தோடு அன்றைக்கே ஆரம்பித்திருந்தால் இரண்டு வருடங்களுக்குள்ளாகவே நிறைவேறியிருக்கும்.

Better late than never என்று சொல்கிற மாதிரி, இனிமேலாவது காலம் கடத்தாமல், நமக்கு நாமே என்று நூல்களை நேசிக்கிற ஒவ்வொருவருமே இந்தப்பொதுக் காரியத்தில் நம்மால் முடிந்த அளவுக்குப் பங்கெடுத்துக் கொள்வதும், அது ஒரு நாளோடு முடிந்து விடுகிற ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொண்டோமானால்  புத்தகங்கள் காலத்தின் கண்ணாடி, அவைகளைப் பாதுகாப்பதென்பது வரலாற்றுப் பிரக்ஞையோடு  கூடியது என்பதையும் தனியாகச்சொல்ல வேண்டியதில்லை!
 
ஆலம் விழுதுகளாய்  இருப்போம்! வேர்களைக் காப்பாற்றுவோம்!
 
.

No comments:

Post a Comment

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...