Monday 23 July 2012

விழுதுகளைத் தேடும் ஞானாலயா!



இன்று காலையில், இரு நண்பர்களிடமிருந்து, ஞானாலயா குறித்து தொலைபேசியில் அழைப்புக்கள்! ஞானாலயாவுக்குத் தாங்கள் எந்த விதத்தில் உதவியாய் இருக்க முடியும் என்ற கேள்வியுடன் வந்த அழைப்புக்கள்!
 
இந்த வலைப்பக்கங்களை  நண்பர் நிகழ்காலத்தில் சிவா துவங்கி வைத்த நேரம், மிக மிக நல்ல நேரம் என்றே சொல்ல வேண்டும்! புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஆதரவுக் கரங்களை வேண்டி நிற்கிறது என்ற செய்தி, தமிழ் இணையத்தில் நிறைய நண்பர்களை சென்றடைந்திருக்கிறது..

செய்திகள் பரவிய அதே வேகத்தில் உதவிக்கரங்கள் நீளவில்லை என்பது உண்மையே!ஆனாலும்,இந்த செய்தி நிறைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது, எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் சிறுகச் சிறுக உதவிகள்வந்து கொண்டிருக்கின்றன என்பதை, நன்றியோடு இந்தத் தருணத்தில் சொல்லியே ஆக வேண்டும்.

அமுத சுரபி மாத இதழின் ஆசிரியராகவும், கல்கி, சாண்டில்யன் இருவருக்குப் பிறகு அதிக அளவில் சரித்திரப் புதினங்களை எழுதியவருமான எழுத்தாளர் விக்கிரமன் எண்பத்திரண்டு வயதான போதிலும் கூட இலக்கிய பீடம் என்ற மாத இதழைத் தற்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஸ்ரீராம் நிறுவனங்களுடைய ஸ்பான்சர்ஷிப்பில், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, விருதுகள் வழங்கிச் சிறப்பித்துக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில், 2011 ஆம் ஆண்டு இலக்கியப்பீட விருதை ஞானாலயா தம்பதியினருக்கு அளித்து, பிப்ரவரி மாத இதழின் அவர்களுடைய முகப்பு அட்டையிலும், தன்னுரையாக இரண்டு பக்கங்களில் மிகவும் நெகிழ்ந்து போய் எழுதியதையும்  தன்னுடைய தந்தை கொடுத்த நூறு புத்தகங்களுடன், எப்படி இன்றைக்கு ஞானாலயா ஆய்வு நூலகம் என்ற பெயருடன் ஒரு ஆல மரமாக, சுமார் தொண்ணூறாயிரம் புத்தகங்கள், ஆயிரத்தைநூறு சிற்றிதழ்கள், பல அபூர்வமான கடிதங்கள் என்று வளர்ந்திருக்கிறது என்பதை தன்னுடைய வார்த்தைகளிலேயே ஞானாலயா திரு பா.கிருஷ்ண மூர்த்தி சொல்கிற விதமாக ஐந்து பக்கங்களிலும் கீழே உள்ள சுட்டியில் படிக்கலாம்.

இலக்கிய பீடம்

ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது என்று குறிப்பிட்டோமில்லையா! ஆலமரத்தின் சிறப்பே, அந்த மரத்தை அதன் விழுதுகளே வேர்களாய் மாறி அதைத் தாங்குவது தான்! வாழையடி வாழையாய் ஒரு சமுதாயம் தன்னுடைய வரலாற்றுப் பிரக்ஞையோடு இயங்குவது, தன்னுடைய பண்பாடுகள், மரபுகளைக் காப்பாற்றிக்கொள்வது இப்படித் தான்!

நம்முடைய கடந்தகாலச் சுவடுகளை,புத்தகங்களாய் சேகரித்து வைத்திருக்கும் ஞானாலயா ஆய்வு நூலகம் தன்னுடைய சேவைகளைத் தடையில்லாமல், தொய்வில்லாமல் தொடரவும், புத்தகங்களைக் காலமும் கரையானும் அரித்துவிடாமல் பாதுகாக்கவும், ஆலமரத்தின் விழுதுகளாய் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கிறதே!  


 என்ன செய்யப்போகிறோம், கொஞ்சம் சொல்லுங்களேன்!

2 comments:

  1. Cpde news என்ற ஒரு திரட்டிக்கான (விளம்பரம்?) லிங்க் பின்னூட்டமாக வந்திருந்தது நீக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...